90 மீட்டர் இலக்கு குறித்த உரையாடல் இந்த ஆண்டு முடிவுக்கு வரும்: நீரஜ் சோப்ரா
By DIN | Published On : 08th January 2023 02:40 PM | Last Updated : 08th January 2023 02:40 PM | அ+அ அ- |

ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவின் பிரபல ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 90 மீட்டர் என்ற இலக்கை விரைவில் அடைய முடியும் என நம்புவதாக தெரிவித்தார்.
ஈட்டி எறிதலில் 90 மீட்டருக்கு ஈட்டி எறிதல் என்பது பெருமைக்கும், சாதனைக்கும் உரிய விஷயமாக கொண்டாடப்படுகிறது. 90 மீட்டர் தூரத்தை ”மேஜிக்கல் மார்க்” எனவும் கூறுவதுண்டு. இந்த நிலையில், இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 90 மீட்டர் என்ற இலக்கை விரைவில் அடைய முடியும் என நம்புவதாக தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் இதனை அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: விஜய் - சங்கீதா விவாகரத்தா? சர்ச்சை குறித்த அப்டேட்!
அதில் அவர் கூறியிருப்பதாவது: ஈட்டி எறிதலில் 90 மீட்டர் என்ற இலக்கை சாதிப்பது என்ற உரையாடல்களை இந்த ஆண்டு நாம் முடிவுக்கு கொண்டு வருவோம் என நம்புகிறேன். 90 மீட்டர் என்பது ஒரு மாயாஜால எண். உலகின் சிறந்த ஈட்டி எறிதலில் உள்ள வீரர்கள் அனைவரும் இந்த 90 மீட்டர் என்ற இலக்கை பெரும் சாதனையாக கருதுகின்றனர். அதனைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்வதையும் பார்க்க முடியும். அது அவர்களுக்கு ஒரு மிக முக்கிய சாதனையாக இருக்கும். எனக்குத் தெரியும் நான் அந்த இலக்குக்கு மிக அருகில் உள்ளேன். இந்த ஆண்டு அந்த சாதனையைப் படைப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
இந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 மற்றும் டைமண்ட் லீக் போட்டியின் ஃபைனல் ஆகிய மூன்று பெரும் போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.