பும்ரா விலகல்: தடுமாறுகிறதா பிசிசிஐ?

பும்ரா விலகல்: தடுமாறுகிறதா பிசிசிஐ?

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் பும்ரா தேர்வான ஒரு வாரத்துக்குள் விலகியுள்ளார். இதனால் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

29 வயது பும்ரா இந்தியாவுக்காக 30 டெஸ்டுகள், 72 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபகாலமாகக் காயம், ஓய்வு போன்ற காரணங்களால் டி20 உலகக் கோப்பை உள்பட பல ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாகக் கடந்த செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார்.

பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சையும் பயிற்சியும் பெற்று வந்த பும்ரா, முழு உடற்தகுதியை அடைந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டார். இலங்கைக்கு எதிராக 10, 12, 15 தேதிகளில் ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவுள்ளது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக, ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பந்துவீசும் அளவுக்கான உடற்தகுதியை அடைய இன்னும் சிறிது காலம் தேவைப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

சேதன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவும் பிசிசிஐயும் பும்ரா விஷயத்தில் இவ்வளவு தூரம் தடுமாறுவது கேள்விகளை வரவழைத்துள்ளது. 

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி, கடந்த டிசம்பர் 27 அன்று அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு திடீரென ஜனவரி 3 அன்று இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டதாகக் கூடுதல் தகவல் அளிக்கப்பட்டது. காயத்திலிருந்து பும்ரா குணமாகிவிட்டார் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஜனவரி 9 அதாவது இன்று, பும்ரா விலகியுள்ளதாக மற்றொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதுதவிர, நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களில் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் பும்ரா விளையாடுவதும் சந்தேகம் எனத் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. பிப்ரவரி 1 முதல் டெஸ்ட் தொடருக்கான பயிற்சியை இந்திய அணி ஆரம்பிக்கவுள்ளது. அதில் பும்ரா கலந்துகொள்ளாவிட்டால் அவர் இன்னும் முழுமையாகக் குணமாகவில்லை என்று நாம் எண்ணிக் கொள்ளலாம். 

உள்ளூர் போட்டிகளில் பும்ராவை விளையாட வைத்துப் பார்க்காமல் நேராக இந்திய அணிக்குத் தேர்வு செய்ததைப் பலரும் குறை கூறியுள்ளார்கள். டி20 உலகக் கோப்பைக்கு முன்பு அவசர அவசரமாக பும்ராவை விளையாட வைத்ததால் சிக்கல் ஏற்பட்டது. இப்போது மீண்டும் அதே தவறு நிகழ்ந்துள்ளது. நல்லவேளை, புதிதாகக் காயம் எதுவும் ஏற்படவில்லை. முதல் ஒருநாள் ஆட்டத்துக்கு முன்பே பும்ராவின் உடற்தகுதி பற்றிய தகவல் தெரிந்துவிட்டது. 

பும்ரா விஷயத்தில் இன்னொருமுறை அவசரப்படாமல் அவருடைய உடற்தகுதியைப் பலவிதங்களிலும் பரிசோதித்துப் பார்த்த பிறகே டெஸ்ட் தொடருக்குத் தேர்வு செய்வார்கள் என்று நம்புவோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com