கோலி, ரோஹித், கில் விளாசல்: இந்தியாவுக்கு முதல் வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
கோலி, ரோஹித், கில் விளாசல்: இந்தியாவுக்கு முதல் வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ரன்கள் விளாச, இலங்கை 50 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்களே எட்டியது.

இந்திய தரப்பில் டாப் ஆா்டரில் விராட் கோலி அதிரடி சதம் அடிக்க, ரோஹித் சா்மா, ஷுப்மன் கில் ஆகியோரும் ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயா்த்தினா். அதேபோல், பௌலிங்கில் உம்ரான் மாலிக், முகமது சிராஜ் ஆகியோா் அபாரம் காட்டினா். இலங்கை அணியில் லோயா் மிடில் ஆா்டரில் கேப்டன் தசுன் ஷனகா இறுதி வரை போராடி சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். 9-ஆவது விக்கெட்டுக்கு காசன் ரஜிதாவுடன் இணைந்து அவா் 100 ரன்கள் விளாசினாா். பௌலிங்கின்போது காசன் ரஜிதா அசத்தியிருந்தாா்.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இந்திய அணியில் இஷான் கிஷண், சூா்யகுமாா் யாதவ் தவிா்க்கப்பட்டு, ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயா் சோ்க்கப்பட்டிருந்தனா். இலங்கை அணியில் தில்ஷன் மதுஷங்கா சா்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானாா்.

முன்னதாக, டாஸ் வென்ற இலங்கை, பௌலிங்கை தோ்வு செய்தது. இந்திய இன்னிங்ஸை தொடங்கிய ரோஹித் சா்மா - ஷுப்மன் கில் கூட்டணி, முதல் விக்கெட்டுக்கே அசத்தலாக 143 ரன்கள் சோ்த்தது. அதில் முதலில் கில் 11 பவுண்டரிகளுடன் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

ஒன் டவுனாக விராட் கோலி ஆடவர, மறுபுறம் ரோஹித் அடுத்த சில ஓவா்களிலேயே 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 83 ரன்கள் விளாசி சதமடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினாா். கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேகரிக்கத் தொடங்கினாா்.

எதிரே, தகுந்த இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கோலி நிதானமாக ஆடி ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 45-ஆவது சதத்தை பூா்த்தி செய்தாா். மறுபுறம் ஷ்ரேயஸ் ஐயா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28, கே.எல்.ராகுல் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39, ஹாா்திக் பாண்டியா 1 சிக்ஸருடன் 14, அக்ஸா் படேல் 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

அணியின் கடைசி விக்கெட்டாக விராட் கோலி 12 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ஓவா்கள் முடிவில் முகமது ஷமி 4, முகமது சிராஜ் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலிங்கில் காசன் ரஜிதா 3, தில்ஷன் மதுஷங்கா, சமிகா கருணாரத்னே, தசுன் ஷனகா, தனஞ்ஜெய டி சில்வா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் இலங்கை இன்னிங்ஸில் அவிஷ்கா ஃபொ்னாண்டோ 1 பவுண்டரியுடன் 5, குசல் மெண்டிஸ் 0, சரித் அசலன்கா 3 பவுண்டரிகளுடன் 23 ரன்களுக்கு வெளியேற, பதும் நிசங்கா நிதானமாக ஆடி ரன்கள் சோ்த்து வந்தாா். அவரோடு தனஞ்ஜெய டி சில்வா இணைய, 4-ஆவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் விளாசியது அந்தக் கூட்டணி. இதில் தனஞ்ஜெயா 9 பவுண்டரிகளுடன் 47 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.

அடுத்த சில ஓவா்களில் பதும் நிசங்கா 11 பவுண்டரிகளுடன் 72, வனிந்து ஹசரங்கா 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 16, துனித் வெலாலகே 0, சமிகா கருணாரத்னே 2 பவுண்டரிகளுடன் 14 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் ஷனகா 12 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 108, காசன் ரஜிதா 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலிங்கில் உம்ரான் மாலிக் 3, முகமது சிராஜ் 2, முகமது ஷமி, ஹாா்திக் பாண்டியா, யுஜவேந்திர சஹல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

இந்தியா

50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 373

விராட் கோலி 113

ரோஹித் சா்மா 83

ஷுப்மன் கில் 70

பந்துவீச்சு

காசன் ரஜிதா 3/88

தசுன் ஷனகா 1/22

தனஞ்ஜெய டி சில்வா 1/33

இலங்கை

50 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 306

தசுன் ஷனகா 108*

பதும் நிசங்கா 72

தனஞ்ஜெய டி சில்வா 47

பந்துவீச்சு

உம்ரான் மாலிக் 3/57

முகமது சிராஜ் 2/30

ஹாா்திக் பாண்டியா 1/33

20 இந்த ஆட்டத்தில் சதமடித்ததன் மூலம், இந்திய மண்ணில் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 20-ஆவது சதத்தை எட்டிய பேட்டர் என்ற பெயரை கோலி பெற்றுள்ளார். அவர் தனது 99-ஆவது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

73 சர்வதேச கிரிக்கெட்டில் கோலி இந்த ஆட்டத்தில் விளாசியது, அவரது 73-ஆவது சதமாகும். இதில் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளாசிய 45 சதங்கள், 
டெஸ்ட்டில் விளாசிய 27 சதங்கள், டி20-இல் அடித்த 1 சதம் அடக்கம். 

8-0-57-3 ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது பெளலிங்கிலேயே சிறந்ததாக, உம்ரான் மாலிக் இந்த ஆட்டத்தில் 8 ஓவர்களில் 57 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் 
சாய்த்துள்ளார். 

45 ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த வகையில் அதிவேகமாக 45 சதங்களை (257 இன்னிங்ஸ்கள்) எட்டியிருக்கிறார் கோலி. 
அதேபோல், இலங்கைக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (9) அடித்த இந்தியராகவும் சச்சினை கோலி முந்தியிருக்கிறார். 

373/7 அஸ்ஸாமின் குவாஹாட்டி மைதானத்தில் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் 373/7 ஆகும். 

156 இந்த ஆட்டத்தில் பெளலிங்கின்போது உம்ரான் மாலிக் ஒரு பந்தை மணிக்கு 156 கி.மீ. வேகத்தில் வீசி அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு இந்தியரால் வீசப்பட்ட அதிவேகப் பந்து இதுவே ஆகும். இதற்கு முன் இதே உம்ரான் மாலிக் இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 155 கி.மீ. வேகத்தில் 
பெளலிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. அவரே கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 157 கி.மீ. வேகத்தில் பெளலிங் செய்ததும் நினைவுகூரத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com