சரிவிலிருந்து மீண்டு வந்தது எப்படி?: கோலியின் தத்துவார்த்த விளக்கம்

விரக்தியில் இருக்கும்போது சற்று பின்னே செல்லவேண்டும். அதற்குப் பதிலாக முன்னேறச் செல்ல முயன்று...
சரிவிலிருந்து மீண்டு வந்தது எப்படி?: கோலியின் தத்துவார்த்த விளக்கம்

சரிவிலிருந்து மீண்டு, குறுகிய காலத்தில் மூன்று சதங்கள் அடித்தது பற்றி பேட்டியளித்துள்ளார் விராட் கோலி.

குவாஹாட்டியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. இலங்கை 50 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்களே எட்டியது. 113 ரன்கள் எடுத்த விராட் கோலி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

2022-ல் இரண்டரை  ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் சதம் எடுத்தார் விராட் கோலி. ஆசியக் கோப்பை டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக. இது அவருடைய 71-வது சர்வதேச சதம். கடந்த 2014 முதல் 2019 வரை ஒரு வருடம் தவிர அனைத்து வருடங்களிலும் குறைந்தது 7 சதங்கள் எடுத்தவர் கோலி. ஆனால் 2020, 2021 ஆகிய இரு ஆண்டுகளிலும் அவர் ஒரு சதம் கூட எடுக்கவில்லை. 2022-ல் இரு சதங்களை எடுத்தார். வருடக் கடைசியில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் சதமடித்தார். இதற்கடுத்து விளையாடிய ஒருநாள் ஆட்டத்திலும் இலங்கைக்கு எதிராகச் சதமடித்தார். 

இந்நிலையில் குறுகிய காலத்தில் மூன்று சதங்கள் அடித்தது பற்றி கோலி கூறியதாவது:

நீங்கள் நன்றாக விளையாடும்போது எல்லாமே சரியாக நடக்கும். விரக்தியடைவது உங்களை எங்கும் கொண்டு செல்லாது.  சில விஷயங்களைக் குழப்பிக்கொண்டு, எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கத் தடுமாறுகிறோமோ அப்போது சரிவு ஏற்படுகிறது. எப்படி விளையாட வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. நான் நானாக இருப்பதிலிருந்து வெளியேறி விட முடியாது. எனக்கு நான் உண்மையாக இருக்கவேண்டும். சரியாக விளையாடாததை ஒப்புக்கொள்ள வேண்டும். அதை மறுக்கும்போது விரக்தி ஏற்படுகிறது. அதனால் எனக்கு நெருக்கமாக இருப்பவர்களிடமும் எனக்கு ஆதரவு அளிப்பவர்களிடமும் நான் நியாயமாக இல்லை. இந்த எண்ணத்திலிருந்து விடுபடுவது தான் முன்னேற்றத்துக்கு உதவும். 

எந்தப் பயமும் இன்றி விளையாட முடியும். தகுந்த காரணங்களோடு, இதுதான் கடைசி ஆட்டம் என்கிற எண்ணத்தோடு, மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன்.

ஒரே நிலையில் இருக்கக் கூடாது. சரியாக விளையாடாதபோது, விரக்தியில் இருக்கும்போது சற்று பின்னே செல்லவேண்டும். அதற்குப் பதிலாக முன்னேறச் செல்ல முயன்று அதே தவறை மீண்டும் மீண்டும் செய்யக்கூடாது. சிறிது ஓய்வுக்குப் பிறகு ஆசியக் கோப்பையில் நான் சந்தோஷமாக விளையாடினேன். விளையாட்டு முன்னேறிச் சென்றுகொண்டே இருக்கும். இதற்கு முன்பும் இந்த விளையாட்டை விளையாடியிருக்கிறார்கள். நானும் காலம் முழுக்க விளையாடப் போவதில்லை. எனவே எதைக் காப்பாற்ற நான் நினைக்கிறேன்? சந்தோஷமாக என் ஆட்டத்தை விளையாடுகிறேன். புதிதாக நான் எதுவும் பயிற்சி பெறவில்லை. என்னுடைய பயிற்சி முறைகள் எப்போதும் ஒரேமாதிரி தான் இருக்கும். சிலசமயங்களில், நீங்கள் நினைத்த வேகத்தில் ரன் எடுக்க முடியாது. இந்த ஆட்டத்தில் நினைத்த ஷாட்களை விளையாட முடிந்தது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com