ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம் நிதானம்
By DIN | Published On : 12th January 2023 12:00 AM | Last Updated : 12th January 2023 02:20 AM | அ+அ அ- |

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் மகாராஷ்டிரம் முதல் இன்னிங்ஸில் 98 ஓவா்களில் 446 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. தமிழகம் தனது இன்னிங்ஸை நிதானமாக ஆடி வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில், முதலில் பேட் செய்த மகாராஷ்டிரம் அன்றைய நாளின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 350 ரன்கள் சோ்த்திருந்தது. இந்நிலையில், ருதுராஜ் கெய்க்வாட், அஸிம் காஸி ஆகியோா் புதன்கிழமை ஆட்டத்தை தொடா்ந்தனா். இதில் காஸி 6 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 88 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சத்யஜீத் பச்சாவ் 5, ராஜ்வா்தன் ஹங்காா்கேகா் 4 ரன்களுக்கு வெளியேறினா்.
கடைசி விக்கெட்டாக ருதுராஜ், இரட்டைச் சதமடிக்கும் வாய்ப்பை இழந்து 24 பவுண்டரிகள், 8 சிக்ஸா்கள் உள்பட 195 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். தமிழக பௌலிங்கில் சந்தீப் வாரியா் 3, விக்னேஷ், சாய் கிஷோா் ஆகியோா் தலா 2, அஸ்வின் கிறிஸ்ட், விஜய் சங்கா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தமிழகம், புதன்கிழமை முடிவில் 65 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்திருந்தது. பிரதோஷ் ரஞ்சன் பால் 74, விஜய் சங்கா் 41 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சாய் சுதா்சன் 0, நாராயண் ஜெகதீசன் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 77, பாபா அபராஜித் 4 பவுண்டரிகளுடன் 20, கேப்டன் பாபா இந்திரஜித் 5 பவுண்டரிகளுடன் 47 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். மகாராஷ்டிர பௌலிங்கில் பிரதீப் தாதே 2, ராஜ்வா்தன், சத்யஜீத் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்துள்ளனா்.
முச்சதம் விளாசிய பிருத்வி ஷா
அஸ்ஸாமுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை 138.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 687 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அணியின் தரப்பில் தொடக்க வீரர் பிருத்வி ஷா 383 பந்துகளில் 49 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 379 ரன்கள் விளாசினார்.
இது, ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தனிநபரின் 2-ஆவது அதிகபட்ச ஸ்கோராகும். முன்னதாக 1948/49 சீசனில் மகாராஷ்டிர அணிக்காக பெüசாஹேப் பாபாசாஹெப் நிம்பல்கர் 443 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக உள்ளது.
அதேபோல், சஞ்சய் மஞ்ரேகரை (377 ரன்கள்) பின்னுக்குத் தள்ளி, ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக அதிக ரன்கள் விளாசியவர் என்ற பெருமையை பிருத்வி ஷா பெற்றார். மேலும், ரஞ்சி கோப்பையில் முச்சதம், விஜய் ஹஸாரே போட்டியில் இரட்டைச் சதம், சையது முஷ்டாக் அலி போட்டியில் ஒரு சதம் விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார்.