இந்திய அணியிலிருந்து என்னை அழைப்பார்கள் என எண்ணவில்லை: பிருத்வி ஷா

நான் சரியாக விளையாடாதபோது பலரும் என்னுடன் இல்லை. அவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.
இந்திய அணியிலிருந்து என்னை அழைப்பார்கள் என எண்ணவில்லை: பிருத்வி ஷா

இந்திய அணியிலிருந்து என்னை அழைப்பார்கள் என எண்ணவில்லை என்று ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் முச்சதம் அடித்த பிருத்வி ஷா கூறியுள்ளார்.

குவாஹாட்டியில் மும்பை - அஸ்ஸாம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற அஸ்ஸாம் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மும்பை வீரர் பிருத்வி ஷா, 383 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 49 பவுண்டரிகளுடன் 379 ரன்கள் எடுத்தார். இதனால் ரஞ்சி கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த 2-வது வீரர், அதிக ரன்கள் எடுத்த மும்பை வீரர் என்கிற சாதனைகளைப் படைத்தார். இதற்கு முன்பு, மும்பை அணிக்காக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அதிகபட்சமாக 377 ரன்கள் எடுத்திருந்தார். ரஞ்சி கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைக் கொண்டவர், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த நிம்பல்கர். 1948-49-ல் கதியவாருக்கு எதிராக 443 ரன்கள் எடுத்தார். அதற்கடுத்த இடத்தில் பிருத்வி ஷா உள்ளார். 

இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிருத்வி ஷா அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் சரியாக விளையாடாதபோது பலரும் என்னுடன் இல்லை. அவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. அவர்களைத் தவிர்த்துவிட வேண்டும். அதுதான் என் கொள்கை. உங்களைப் பற்றி தெரியாதவர்கள் எல்லாம் உங்களைப் பற்றி எடை போடுவார்கள். ஆனால் நாம் சரியான விஷயங்களை மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் செய்கிறோம் என்று தெரிந்துகொள்ள வேண்டும். நான் 400 ரன்கள் எடுத்திருப்பேன். இந்தச் சாதனை மகிழ்ச்சியை அளிக்கிறது. 

இந்திய அணியிலிருந்து யாராவது என்னை அழைப்பார்களா என்று கூட நான் எண்ணவில்லை. என்னால் முடிந்தவற்றை செய்ய நினைக்கிறேன். ஒவ்வொரு நாளாக வாழ நான் விருப்பப்படுகிறேன். இப்போது மும்பைக்காக விளையாடுகிறேன். ரஞ்சி கோப்பையை வெல்வதே என் இலக்கு. 

23 வயது பிருத்வி ஷா, இந்திய அணிக்காக 2018 முதல் 5 டெஸ்டுகள், 1 டி20, 6 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக ஜூலை 2021-ல் விளையாடினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com