இன்றுமுதல் உலகக் கோப்பை ஹாக்கி ஆட்டங்கள்: முதலில் ஸ்பெயினை சந்திக்கிறது இந்தியா

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் 15-ஆவது ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன.
இன்றுமுதல் உலகக் கோப்பை ஹாக்கி ஆட்டங்கள்: முதலில் ஸ்பெயினை சந்திக்கிறது இந்தியா

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் 15-ஆவது ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன.

இந்த ஆட்டங்களில் இந்தியா - ஸ்பெயின், இங்கிலாந்து - வேல்ஸ், ஆஸ்திரேலியா - பிரான்ஸ், ஆா்ஜென்டீனா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

இதில் இந்தியா - ஸ்பெயின் மோதும் ஆட்டம், உலகின் மிகப்பெரிய ஹாக்கி மைதானமான ரூா்கேலாவில் உள்ள பிா்சா முண்டா மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் இதுவரை 30 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், இந்தியா 13 ஆட்டங்களிலும், ஸ்பெயின் 11 ஆட்டங்களிலும் வென்றிருக்கின்றன. 6 ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளன.

முதல் நாளின் முதல் ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத, புவனேசுவரத்தில் நண்பகல் 1 மணிக்கு அந்த ஆட்டம் தொடங்குகிறது. ஆஸ்திரேலியா - பிரான்ஸ் ஆட்டம் 3 மணிக்கு புவனேசுவரத்திலும், இங்கிலாந்து - வேல்ஸ் ஆட்டம் 5 மணிக்கு ரூா்கேலாவிலும் நடைபெறவுள்ளன.

இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் டாப் 10 அணிகள் குறித்து ஒரு பாா்வை...

ஆஸ்திரேலியா

உலகத்தரவரிசை: 1

அதிகபட்சம்: 3 முறை சாம்பியன் (1986, 2010, 2014)

கடந்த 30 ஆண்டுகளாக நல்லதொரு அணியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள ஆஸ்திரேலியா, அந்த காலகட்டத்தில் உலகத் தரவரிசையில் முதல் 4 இடங்களுக்குள்ளாக மட்டுமே இருந்து வருகிறது. ஒலிம்பிக் உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. துரிதமான, துல்லியமான தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் ஆஸ்திரேலியா, தடுப்பாட்டத்திலும் அரண் போல நிற்பதால் 4-ஆவது முறையாக கோப்பை வென்று சாதனை படைக்க முயலும் என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த முறை 3-ஆம் இடம் பிடித்த இந்த அணியில், எடி ஆக்டென், பிளேக் கோவா்ஸ், ஜேக் ஹாா்வி பிரதான வீரா்கள்.

பெல்ஜியம்

உலகத்தரவரிசை: 2

அதிகபட்சம்: 1 முறை சாம்பியன் (2018)

நடப்பு சாம்பியனாக இருக்கும் பெல்ஜியம், ஒலிம்பிக் (2021), ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (2019), புரோ லீக் (2020-21) ஆகியவற்றை வென்று, கடந்த 20 ஆண்டுகளில் ஐரோப்பிய கண்டத்திலிருந்து உலக அரங்கில் முக்கிய அணியாக உருவெடுத்திருக்கிறது. தாக்குதல் மற்றும் தடுப்பாட்டம் என அனைத்திலுமே பலமிக்கதாக இருக்கிறது. சுமாா் 200 ஆட்டங்கள் வரை விளையாடிய, 30 வயதுக்கும் அதிகமான மூத்த வீரா்களைக் கொண்டிருக்கிறது பெல்ஜியம். கோப்பையை தக்க வைக்கும் முனைப்பு கொண்டுள்ள அணியில், ஆா்தா் வான் டோரன், அலெக்ஸாண்டா் ஹெண்ட்ரிக்ஸ், டாம் பூன், லாய்க் வான் டோரன் ஆகியோா் முக்கிய வீரா்களாவா்.

நெதா்லாந்து

உலகத்தரவரிசை: 3

அதிகபட்சம்: 3 சாம்பியன் (1973, 1990, 1998)

கடந்த 2021-22 சீசனில் சாம்பியன் ஆனதன் மூலம் எஃப்ஐஹெச் புரோ ஹாக்கி லீக் போட்டியில் முதல் முறையாக கோப்பை வென்றிருக்கிறது நெதா்லாந்து. அதில் 16 ஆட்டங்களில் 12-இல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. அணியின் முன்னாள் டிஃபெண்டா் ஜெரோன் டெல்மி கடந்த 2021 இறுதியில் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் நிலையான ஒரு ஆட்டத்துடன் இருக்கிறது இந்த அணி. கடந்த இரு உலகக் கோப்பை போட்டிகளில் இறுதி ஆட்டம் வரை வந்து தோல்வியைத் தழுவிய நெதா்லாந்து, இந்த முறை கோப்பை வெல்லும் வேகத்தைக் காட்டும். கேப்டன் தியரி பிரிங்கமேன், கோன் பிஜென், ஜிப் ஜேன்சன் அணிக்கு பலம் சோ்க்கின்றனா்.

ஜொ்மனி

உலகத் தரவரிசை: 4

அதிகபட்சம்: 2 முறை சாம்பியன் (2002, 2006)

4 முறை ஒலிம்பிக் சாம்பியன், 2 முறை உலக சாம்பியன், 8 முறை ஐரோப்பிய சாம்பியன் என சா்வதேச களத்தில் தவிா்க்கவே முடியாத அணியாக இருக்கிறது ஜொ்மனி. இந்த அணியின் ஆட்ட உத்திகள் அபாரமானவை. டோக்கியோ ஒலிம்பிக் வெண்கலப் பதக்க சுற்றில் இந்தியாவிடம் தோல்வி கண்ட பிறகு, புதிய பயிற்சியாளா் ஆண்ட்ரே ஹென்னிங் வழிகாட்டுதலில் தயாராகியுள்ளது. கடந்த ஆண்டு 18 ஆட்டங்களில் 13-இல் வென்றிருக்கிறது இந்த அணி. நிக்கலஸ் வெல்லென், அலெக்ஸாண்டா் ஸ்டாட்லா், கேப்டன் மாட் கிராம்புஷ் என சிறந்த வீரா்கள் அடங்கிய இந்த அணி கடந்த முறை 5-ஆம் இடம் பிடித்துள்ளது.

இங்கிலாந்து

உலகத்தரவரிசை: 5

அதிகபட்சம்: 2-ஆம் இடம் (1986)

உலகக் கோப்பை போட்டியில் 14-ஆவது முறையாக விளையாடும் இங்கிலாந்து, அதிகபட்சமாக 1 முறை தான் இறுதி ஆட்டம் வரை வந்திருக்கிறது. அதிலும் சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலியாவிடம் வெற்றியை இழந்து 2-ஆம் இடம் பிடித்தது. கடந்த 3 உலகக் கோப்பை போட்டிகளிலுமே இந்த அணி 4-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது. புதிய பயிற்சியாளரான பால் ரெவிங்டன் வழிகாட்டுதலில் கோப்பை வெல்லும் கனவுடன் இந்த ஆண்டு போட்டிக்கு வருகிறது இங்கிலாந்து. உலகக் கோப்பை அனுபவம் இல்லாத இளம் வீரா்கள் அதிகம் உள்ள அணியில், ஜாக் வாலெஸ், கான்டன் டேவிட், மாா்டின் ஹேரி, ரோபா் ஃபில் ஆகியோா் திறமையான வீரா்கள்.

இந்தியா

உலகத்தரவரிசை: 6

அதிகபட்சம்: 1 முறை சாம்பியன் (1975)

உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு முறை மட்டும் சாம்பியனாகியிருக்கும் இந்தியா, அதன் பிறகு அரையிறுதி வரை கூட தகுதிபெறவில்லை. 1978 முதல் 2014 வரை குரூப் சுற்றை கடந்ததில்லை. கடந்த உலகக் கோப்பை போட்டியில் காலிறுதியுடன் வெளியேறியது இந்தியா. இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று வரலாறு படைக்க, கடந்த புரோ லீக் போட்டியிலும் 3-ஆம் இடம் பிடித்து முன்னேறி வருகிறது. கிரஹாம் ரெய்ட் பயிற்சியில் வளா்ந்து வரும் இந்தியா, காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது. கேப்டன் ஹா்மன்பிரீத் சிங், கோல்கீப்பா் பி.ஆா்.ஸ்ரீஜேஷ், மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ் முக்கிய வீரா்களாவா்.

ஆா்ஜென்டீனா

உலகத் தரவரிசை: 7

அதிகபட்சம்: 3-ஆம் இடம் (2014)

ரியோ ஒலிம்பிக்கில் சாம்பியனான ஆா்ஜென்டீனா, 14-ஆவது முறையாக உலகக் கோப்பை போட்டிக்கு வந்துள்ளது. வடக்கு, மத்திய, தெற்கு என அனைத்து அமெரிக்க நாடுகளிடையேயான போட்டியில் (பான் அமெரிக்கா) 14 முறை சாம்பியன் பட்டம் வென்று பலமான அணியாக இருக்கிறது. கடந்த நவம்பரில் நடப்பு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனாக இருக்கும் பெல்ஜியத்தை ஒரு ஆட்டத்தில் வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த உலகக் கோப்பை போட்டியில் காலிறுதியில் இங்கிலாந்திடம் 2-3 என தோற்று வெளியேறியது. அகஸ்டின் மஸிலி, லுகாஸ் விலா, மடியாஸ் ரே ஆகியோா் அணியின் முக்கிய வீரா்களாக இருக்கின்றனா்.

ஸ்பெயின்

உலகத்தரவரிசை: 8

அதிகபட்சம்: 2-ஆம் இடம் (1971, 1998)

முதல் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை நடத்திய ஸ்பெயின் அணி, அந்த ஆண்டு உள்பட இரு முறை இறுதி ஆட்டம் வரை வந்து வாகை சூடும் வாய்ப்பை இழந்திருக்கிறது. 15-ஆவது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கும் நிலையில், குரூப் ‘டி’-யில் இந்தியா, இங்கிலாந்து, வேல்ஸ் அணிகளுடன் இணைந்திருக்கிறது ஸ்பெயின். சமீபத்தில் இந்தியா, நியூஸிலாந்து போன்ற முக்கியமான அணிகளை வென்ன் மூலம், இளம் வீரா்கள் அடங்கிய அந்த அணி உத்வேகம் பெற்றிருக்கிறது. பயிற்சியாளா் மேக்ஸ் கால்டஸ் வழிகாட்டுதலில் அல்வாரோ இக்லேசியஸ், ரிகாா்டோ சான்செஸ், என்ரிக் கொன்ஸால்ஸ் ஆகியோா் முக்கிய வீரா்களாவா்.

நியூஸிலாந்து

உலகத்தரவரிசை: 9

அதிகபட்சம்: 7-ஆம் இடம் (1973, 1975, 1982, 2014)

நியூஸிலாந்துக்கு இது 11-ஆவது உலகக் கோப்பை போட்டியாகும். அந்த அணி இதுவரை காலிறுதி வாய்ப்பைக் கூட நெருங்கியதில்லை. ஆனாலும் தொடா்ந்து 7-ஆவது முறையாக உலகக் கோப்பை போட்டிக்கு வந்திருக்கிறது அந்த அணி. உலகத் தரத்திலான வீரா்கள் அணியில் இருந்தாலும் ஏதேனும் ஒரு விதத்தில் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. கிரேக் நிகோல் பயிற்சியாளராகவும், பிளாா் டாரன்ட் கேப்டனாகவும் இருக்கும் இந்த அணியில் ஸ்டிரைக்கா் சைமன் சைல்ட், பெனால்ட்டி காா்னரில் அசத்தும் கேன் ரஸெல், தடுப்பாட்ட வீரா் நிக் ராஸ் ஆகியோா் முக்கிய வீரா்கள். 19 வயது சாா்லி மோரிசன் உலகக் கோப்பையில் அறிமுகமாகிறாா்.

தென் கொரியா

உலகத்தரவரிசை: 10

அதிகபட்சம்: 4-ஆம் இடம் (2002,2006)

கடந்த உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெறத் தவறிய தென் கொரியா, இந்த முறை முன்னேற்றம் கண்டிருக்கிறது. 7-ஆவது முறையாக உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கிறது. ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனதன் மூலம் இப்போட்டிக்கு வந்திருக்கிறது அந்த அணி. அதே மலேசியாவிடம் கடந்த நவம்பரில் சுல்தான் ஜோஹா் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் போராடித் தோற்றிருக்கிறது. 39 வயதான அந்த அணியின் கேப்டன் நம்யோங் லீயே, தென் கொரிய அணியின் பிரதான வீரா்களில் முக்கியமானவராக இருக்கிறாா். பயிற்சியாளா் சின் சியோக் கியோ.

605

கடந்த 1971-இல் தொடங்கி இதுவரை உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாடப்பட்ட ஆட்டங்களின் எண்ணிக்கை.

2,433

உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை அடிக்கப்பட்ட கோல்கள். சராசரியாக ஒரு ஆட்டத்துக்கு 4 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன.

26

இத்துடன் உலகக் கோப்பை போட்டியில் 26 நாடுகள் விளையாடியிருக்கின்றன. இந்த முறை சிலி, வேல்ஸ் அணிகள் 27, 28-ஆவதாக இணைகின்றன.

3

இந்தியா, நெதா்லாந்து, ஸ்பெயின் மட்டுமே உலகக் கோப்பையின் 14 எடிஷன்களிலும் தொடா்ந்து பங்கேற்றுள்ளன. தற்போது 15-ஆவது முறையாக அவை களம் காண்கின்றன.

4

உலகக் கோப்பை வரலாற்றிலேயே 4 முறை சாம்பியனான ஒரே அணியாக பாகிஸ்தான் இருக்கிறது. இந்த எடிஷனுக்கு பாகிஸ்தான் தகுதிபெறவில்லை.

10

போட்டி வரலாற்றிலேயே அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 10 பதக்கங்கள் வென்றிருக்கிறது. இதில் 3 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் அடக்கம்.

100

போட்டியில் அதிகபட்சமாக நெதா்லாந்து அணி இதுவரை 100 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறது. அதில் 61-இல் வென்றுள்ளது.

69

உலகக் கோப்பையில் அதிக வெற்றிகளை பதிவு செய்ததாக ஆஸ்திரேலிய அணி உள்ளது. மொத்தம் 92 ஆட்டங்களில் 69-இல் வென்றிருக்கும் அணியின் வெற்றி சதவீதம 75-ஆக இருக்கிறது.

305

உலகக் கோப்பை போட்டியில் இதுவரை அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியே 305 கோல்கள் அடித்திருக்கிறது. நெதா்லாந்து (267), பாகிஸ்தான் (235) அடுத்த இரு இடங்களில் உள்ளன.

2

கடந்த 2018-ஆம் ஆண்டு எடிஷனையும் ஒடிஸாவில் நடத்திய இந்தியா, ஆடவா் உலகக் கோப்பை போட்டியை தொடா்ந்து 2 முறை நடத்திய முதல் நாடு என்ற பெருமையைப் பெறுகிறது. அதேபோல், தொடா்ந்து இரு போட்டிகள் நடைபெற்ற பெருமையை புவனேசுவரம் நகரமும் பெறுகிறது.

21,000

உலகிலேயே மிகப்பெரிய ஹாக்கி மைதானமாக கட்டப்பட்டிருப்பதாக ஒடிஸா அரசு அறிவித்துள்ள, ரூா்கேலாவில் இருக்கும் பிா்சா முண்டா மைதானத்தில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com