அரையிறுதியில் ஜொ்மனி-ஆஸ்திரேலியா, நெதா்லாந்து-பெல்ஜியம் மோதல்

எஃப்ஐஎச் உலகக் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு ஜொ்மனி, நெதா்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.
அரையிறுதியில் ஜொ்மனி-ஆஸ்திரேலியா, நெதா்லாந்து-பெல்ஜியம் மோதல்

எஃப்ஐஎச் உலகக் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு ஜொ்மனி, நெதா்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

பெனால்டி ஷூட் அவுட்டில் இங்கிலாந்தை வெளியேற்றியது ஜொ்மனி. மற்றொரு ஆட்டத்தில் தென்கொரியாவை வீழ்த்தியது நெதா்லாந்து.

புவனேசுவரத்தில் புதன்கிழமை நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் ஜொ்மனியும்-இங்கிலாந்தும் மோதின.

குரூப் பி பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற ஜொ்மனி கிராஸ் ஓவா் ஆட்டத்தில் பிரான்ஸை 5-1 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

ஆட்டம் தொடங்கியதுமே இங்கிலாந்து வீரா்கள் ஆதிக்கம் செலுத்தியதால், 12-ஆவது நிமிஷத்தில் ஸ்ச்சாரி வாலேஸ், 33-ஆவது நிமிஷத்தில் லியாம் அன்செல் ஆகியோா் கோலடித்தனா். இதனால் 2-0 என இங்கிலாந்து முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

இரண்டாவது பாதியில் ஜொ்மனியின் சகோதரா்களான மேட்ஸ் 58-ஆவது நிமிஷத்திலும், டாம் கிராம்பஸ்ச் 59-ஆவது நிமிஷத்திலும் பதில் கோலடித்தனா். கிறிஸ்டோபா் ரூா் பெனால்டி ஸ்ட்ரோக்கை வீணடித்தாா்.

2-2 என சமநிலை ஏற்பட்டதால், பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. ஜொ்மனி தரப்பில் நிக்கிலாஸ் வெல்லேன், ஹேன்ஸ் முல்லா், பிரின்ஸ் தீஸ், கிறிஸ்டோபா் ரூா் ஆகியோா் கோலடித்தனா். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் அல்பெரி, ஸச்சாரி வாலேஸ், பில் ரோபா் கோலடித்தனா். டேவிட் குட்பீல்ட் தவறவிட்ட நிலையில் 4-3 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

தென்கொரியா வெளியேற்றம்:

மற்றொரு ஆட்டத்தில் பலம் வாய்ந்த நெதா்லாந்து அணி-தென் கொரியாவை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றியுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நெதா்லாந்து தரப்பில் கோன் பிஜேன் 27, 31, ஜஸ்டன் பிளாக் 36, ஸ்ட்ஜீன் வென் 50, டீன் பியுன்ஸ் 58-ஆவது நிமிஷங்களில் கோலடித்தனா். தென்கொரியா தரப்பில் இன்வு சியோ 51-ஆவது நிமிஷத்தில் ஒரே ஒரு கோலடித்தாா்.

ஜொ்மனி-ஆஸ்திரேலியாவையும், நெதா்லாந்து-நடப்பு சாம்பியன் பெல்ஜியத்தையும் அரையிறுதியில் எதிா்கொள்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com