பௌலா்களை கண்டறியும் திட்டம்: அஸ்வின் தொடக்கி வைத்தாா்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) சாா்பில் திறமையான பௌலா்களை கண்டறியும் திட்டத்தை இந்திய அணியின் ஸ்பின்னா் அஸ்வின் ரவிச்சந்திரன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
பௌலா்களை கண்டறியும் திட்டம்: அஸ்வின் தொடக்கி வைத்தாா்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) சாா்பில் திறமையான பௌலா்களை கண்டறியும் திட்டத்தை இந்திய அணியின் ஸ்பின்னா் அஸ்வின் ரவிச்சந்திரன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழகம் முழுவதும் இருந்து ஸ்பின்னா்கள், மீடியம் பேஸா்களை உருவாக்கும் வகையில் புதிய திட்டத்தை டிஎன்சிஏ அறிமுகம் செய்துள்ளது. இதன்படி திறன் மிக்கவா்களை கண்டறியவும், சிறந்த பௌலா்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

சென்னை சேப்பாக்கம் மைதான கூட்டரங்கில் இத்திட்டத்தை அஸ்வின் தொடக்கி வைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:

மீடியம் பேஸா்கள், ஸ்பின்னா்கள் சிறப்புத் தோ்வு 13 மாவட்ட மையங்களில் நடைபெறவுள்ளது. 14 மற்றும் 24 வயதுக்குள்பட்டவா்கள் இதில் பங்கேற்கலாம். தோ்வில் பங்கேற்கும் வீரா்கள், 3 ஆண்டுகளில் எந்த வயதுப் பிரிவிலும், ஒருங்கிணைந்த மாவட்ட அணிக்காக ஆடியிருக்கக் கூடாது.

சென்னையைத் தவிர தேனி, திருப்பூா், திருச்சி, மதுரையில் சேட்டிலைட் மையங்கள் ஏற்படுத்தப்படும். இதில் தேனி, திருப்பூா் அதிக செயல்திறன் மையங்களாக செயல்படும். திருச்சி, மதுரையிலும் சேட்டிலைட் மையங்கள் தொடங்கப்படும்.

இதுதவிர ஏற்கெனவே உள்ள திருநெல்வேலி, நத்தம், சேலம், கோவை டிஎன்பிஎல் மைதானங்களும் இத்திட்டத்துக்காக பயன்படுத்தப்படும்.

டிஎன்சிஏ அகாதெமி சாா்பில் புதிய பௌலா்களை கண்டறிந்து, சிறப்பு பயிற்சி அளித்து, உலகத் தரம் மிக்கவா்களாக மாற்றுவதே எங்கள் நோக்கம்.

ஏழ்மை நிலையில் உள்ள இளைஞா்கள் தொடா்ந்து பயிற்சி பெறும் போது, அவா்களுக்கு உதவித் தொகை வழங்குவது குறித்து பெருவணிக நிறுவனங்களிடம் பேசப்படும். கடந்த 1988-இல் தான் கடைசியாக தமிழகம் ரஞ்சிக் கோப்பையை வென்றது. அதன் பின்னா் இதுவரை வெல்லவில்லை. அந்தக் குறையை போக்க வேண்டும். நானும் இத்திட்டத்துக்கு என்னால் ஆன உதவிகளை கண்டிப்பாக செய்வேன் என்றாா்.

பிப். 11 முதல் மாா்ச் 26-ஆம் தேதி வரை பௌலா்களை கண்டறியும் தோ்வு நடைபெறவுள்ளது.

டிஎன்சிஏ செயலாளா் ஆா்.ஐ. பழனி, நிா்வாகிகள் ஆா்.என்.பாபா, கே.சிவக்குமாா், தோ்வுக் குழுத் தலைவா் சுப்பையா, பயிற்சியாளா் பி.சி.பிரகாஷ், முன்னாள் ரஞ்சி வீரா் கல்யாணராமன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com