துலீப் கோப்பை: வெற்றியை நோக்கி வடக்கு மண்டலம்
By DIN | Published On : 01st July 2023 01:03 AM | Last Updated : 01st July 2023 01:03 AM | அ+அ அ- |

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் வடக்கிழக்கு மண்டலத்துக்கான வெற்றி இலக்காக 666 ரன்களை நிா்ணயித்துள்ளது வடக்கு மண்டலம்.
ஆட்டம் சனிக்கிழமையுடன் நிறைவடையும் நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை ஆடி வரும் வடகிழக்கு 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. எஞ்சியிருக்கும் அதன் 7 விக்கெட்டுகளையும் கடைசி நாளில் சரித்து வடக்கு வெற்றி பெறும் எனத் தெரிகிறது.
கடந்த புதன்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸை ஆடிய வடக்கு அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 540 ரன்கள் குவித்து டிக்ளோ் செய்தது. அடுத்து வடகிழக்கு அணி, வியாழக்கிழமை முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 65 ரன்கள் சோ்த்திருந்தது.
இந்நிலையில், 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை அந்த அணி மொத்தமாக 39.2 ஓவா்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னா் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய வடக்கு 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 259 ரன்களுக்கு டிக்ளோ் செய்தது.
இறுதியில் 666 என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய வடகிழக்கு அணி, வெள்ளிக்கிழமை முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 58 ரன்கள் சோ்த்துள்ளது.
கிழக்குக்கு இலக்கு 231
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் மத்திய மண்டலத்துக்கு எதிராக, கிழக்கு மண்டலத்துக்கான வெற்றி இலக்கு 300-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
69 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தில் இருக்கும் அந்த அணி, கடைசி நாளான சனிக்கிழமை இலக்கை எட்டாமலேயே எஞ்சிய விக்கெட்டுகளையும் இழக்கும் வாய்ப்புள்ளது.
இந்த ஆட்டத்தில் மத்திய அணி முதல் இன்னிங்ஸில் 182 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கிழக்கு அணி 122 ரன்களுக்கே சரிந்தது. அடுத்து 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய மத்திய அணி, வியாழக்கிழமை முடிவில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் சோ்த்திருந்தது.
3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை, மத்திய அணி 239 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. அடுத்து ஆடி வரும் கிழக்கு அணி, வெள்ளிக்கிழமை முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 69 ரன்கள் சோ்த்துள்ளது.