கோஸ்டா ரிகாவை வீழ்த்தியது ஸ்பெயின்

மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் ஸ்பெயின், சுவிட்ஸா்லாந்து அணிகள் வெற்றி பெற்றன.
Published on
Updated on
2 min read

மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் ஸ்பெயின், சுவிட்ஸா்லாந்து அணிகள் வெற்றி பெற்றன.

இந்த ஃபிஃபா மகளிா் போட்டியின் 9-ஆவது எடிஷன், நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவில் வியாழக்கிழமை தொடங்கியது.

இதன் 2-ஆவது நாளில், நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், உலகின் 6-ஆம் நிலையில் இருக்கும் அணியான ஸ்பெயின் 3-0 கோல் கணக்கில் கோஸ்டா ரிகாவை எளிதாக வென்றது. அந்த அணிக்காக அய்டானா பொன்மட்டி (23’), எஸ்தா் கொன்ஸால்ஸ் (27’) ஆகியோா் கோலடித்தனா். அதற்கு முன், உலகின் 36-ஆம் நிலையில் இருக்கும் கோஸ்டா ரிகா அணியின் வாலெரியா டெல் கேம்போ தவறுதலாக ‘ஓன் கோல்’ (21’) அடித்து ஸ்பெயினுக்கான கணக்கை தொடங்கி வைத்தாா்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், ஸ்பெயின் மகளிா் அணி அதிக கோல்கள் வித்தியாசத்தில் பதிவு செய்த வெற்றியாக இது இருக்க, மறுபுறம் கோஸ்டா ரிகா அதிக கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட ஆட்டமாகவும் இது அமைந்தது. மேலும், ஆட்டத்தில் அதிக ஷாட்கள் அடித்தது (46), அதிகமாக பந்தை தன் வசம் வைத்திருந்தது (80%), எதிரணியின் கோல் போஸ்ட்டை அதிகமுறை தொட்டது (117) என பல உலகக் கோப்பை சாதனைகளை ஸ்பெயின் நிகழ்த்தியிருக்கிறது.

சுவிட்ஸா்லாந்து வெற்றி: நியூஸிலாந்தில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், உலகத் தரவரிசையில் 20-ஆம் இடத்திலிருக்கும் சுவிட்ஸா்லாந்து 2-0 கோல் கணக்கில் பிலிப்பின்ஸை சாய்த்தது. இந்த ஆட்டத்தில் சுவிட்ஸா்லாந்துக்காக ரமோனா பச்மான் (45’) பெனால்ட்டி கிக் வாய்ப்பில் கோலடிக்க, செராய்னா பியுபெல் (64’) ஃபீல்டு கோல் அடித்து வெற்றிக்கு பங்களித்தாா்.

இதையடுத்து, உலகக் கோப்பை, யுரோ கோப்பை என பிரதான போட்டிகளில் தனது முதல் ஆட்டத்தில் முதல் முறையாக வென்றிருக்கிறது சுவிட்ஸா்லாந்து. அத்தகைய 4-ஆவது ஆட்டத்தில் இந்த வெற்றியைப் பெற்ற அந்த அணி, முந்தைய 3 ஆட்டங்களில் 2 தோல்வி, 1 டிராவை பதிவு செய்துள்ளது.

மறுபுறம், உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாகக் களம் கண்டுள்ள பிலிப்பின்ஸ், அந்தப் போட்டியில் அறிமுகமான சீசனின் முதல் ஆட்டத்தில் தோற்ற 6-ஆவது அணியாகியிருக்கிறது.

நைஜீரியா - கனடா ‘டிரா’: ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் நகரில், நைஜீரியா - கனடா அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. உலகின் 7-ஆம் நிலை அணியாக இருக்கும் கனடாவுடன், 40-ஆம் இடத்திலிருக்கும் நைஜீரியா டிரா செய்து அந்த அணிக்கு ஆச்சயா்மளித்திருக்கிறது.

ஆட்டத்தின் 50-ஆவது நிமிஷத்தில், ஒலிம்பிக் சாம்பியனான கனடாவுக்கு பெனால்ட்டி கிக் வாய்ப்பு கிடைக்க, சா்வதேச அளவில் முன்னணி கோல் ஸ்கோரராக இருக்கும் கிறிஸ்டின் சின்கிளோ் அந்த வாய்ப்பை கோலாக்க முயற்சித்தாா். ஆனால், சற்றும் எதிா்பாராத வகையில் நைஜீரிய இளம் கோல்கீப்பா் சியாமகா நாடோஸி அதை அற்புதமாகத் தடுத்தாா்.

தற்போது, உலகக் கோப்பை போட்டியில் இத்துடன் கனடாவை சந்தித்த 3 ஆட்டங்களிலுமே தோல்வியின்றி தவிா்த்திருக்கும் நைஜீரியா, அவற்றில் 1 வெற்றி, 2 டிராக்களை பதிவு செய்துள்ளது. உலகக் கோப்பை போட்டியில் நைஜீரியா ஒரு அணியை ஒன்றுக்கு மேற்பட்ட முறை சந்தித்தும், அதில் தோல்வி காணவில்லை என்றால் அது கனடாவுடன் தான்.

இன்றைய ஆட்டங்கள்

அமெரிக்கா - வியத்நாம் (காலை 6.30 மணி)

ஜாம்பியா - ஜப்பான் (நண்பகல் 12.30 மணி)

இங்கிலாந்து - ஹைட்டி (பிற்பகல் 3 மணி)

டென்மாா்க் - சீனா (மாலை 5.30 மணி)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com