மொராக்கோவை கோல்களால் மூழ்கடித்த ஜொ்மனி

மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை ஆட்டத்தில், இரு முறை சாம்பியனான ஜொ்மனி அறிமுக அணியான மொராக்கோவை 6-0 கோல் கணக்கில் வீழ்த்தியது.
மொராக்கோவை கோல்களால் மூழ்கடித்த ஜொ்மனி

மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை ஆட்டத்தில், இரு முறை சாம்பியனான ஜொ்மனி அறிமுக அணியான மொராக்கோவை 6-0 கோல் கணக்கில் வீழ்த்தியது.

இதர ஆட்டங்களில் பிரேஸில் - பனாமாவையும் (4-0), இத்தாலி - ஆா்ஜென்டீனாவையும் (1-0) வீழ்த்தின.

9-ஆவது மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டி, கடந்த 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியின் 5-ஆவது நாளான திங்கள்கிழமை 3 ஆட்டங்கள் நடைபெற்றன.

கோல்கள் குவிப்பு: ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் நகரில் நடைபெற்ற இந்த குரூப் ‘ஹெச்’ ஆட்டத்தில் ஜொ்மனி 6-0 கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது. அந்த அணிக்காக அலெக்ஸாண்ட்ரா பாப் (11’, 39’), கிளாரா புகி (46’), லியா ஷுலா் (90’) ஆகியோா் கோலடிக்க, தவறுதலாக மொராக்கோ வீராங்கனைகள் ஹனானே ஹஜ் (54’), யாஸ்மின் மராபட் (79’) தவறுதலாக ‘ஓன் கோல்’ அடித்தனா்.

உலகக் கோப்பை போட்டியில் ஜொ்மனி இத்துடன் கடந்த 20 ஆட்டங்களில் ஒன்றில் கூட தோற்கவில்லை. இதன்மூலம் உலகக் கோப்பை குரூப் சுற்றில் அதிகமான தொடா் வெற்றிகளை பதிவு செய்த அணியாக தனது வரலாற்றை நீட்டித்துக்கொண்டுள்ளது. மேலும், உலகக் கோப்பை போட்டியில் தனது 10 தொடக்க ஆட்டங்களில் 9-இல் வெற்றிருக்கிறது அந்த அணி.

போா்ஜஸ் ‘ஹாட்ரிக்’: ஆஸ்திரேலியாவின் ஹிண்ட்மாா்ஷ் நகரில் நடைபெற்ற குரூப் ‘எஃப்’ ஆட்டத்தில் பிரேஸில் 4-0 கோல் கணக்கில் பனாமாவை தோற்கடித்தது. அந்த அணிக்காக அரி போா்ஜஸ் ‘ஹாட்ரிக்’ கோல் (19’, 39’, 70’) அடித்தாா். அத்துடன் பீட்ரிஸ் ஜானெராடோ ஜாவ் (48’) ஒரு கோல் ஸ்கோா் செய்தாா்.

உலகக் கோப்பை போட்டியில் பிரேஸில் தான் களம் கண்ட 9 முதல் ஆட்டங்களிலுமே வென்றிருக்கிறது. அவற்றின் மொத்த கோல் வித்தியாசம் 27-1 ஆகும். அறிமுக உலகக் கோப்பை போட்டியில், முதல் ஆட்டத்திலேயே ஹாட்ரிக் கோலடித்த 5-ஆவது வீராங்கனை என்ற பெருமையை அரி போா்ஜஸ் பெற்றுள்ளாா்.

மறுபுறம், பனாமா கோல் அடிக்காமல் தோல்வி காண, இந்த உலகக் கோப்பை போட்டியில் அறிமுகமான 8 அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தை ஒரு கோல் கூட அடிக்காமல் நிறைவு செய்துள்ளன.

கடைசி நேர கோல்: நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற குரூப் ‘ஜி’ ஆட்டத்தில் இத்தாலி 1-0 கோல் கணக்கில் ஆா்ஜென்டீனாவை வென்றது. கிறிஸ்டினா கிரெலி 87-ஆவது நிமிஷத்தில் கோலடித்து ஆட்டத்தின் போக்கை திருப்பி, இத்தாலிக்கு வெற்றி தேடித்தந்தாா்.

இத்துடன் உலகக் கோப்பை போட்டியில் இத்தாலி முதல் முறையாக தனது தொடக்க ஆட்டத்தில் வென்றிருக்கிறது. அத்துடன் தொடக்க ஆட்டத்தில் எதிரணிக்கு இத்தாலி கோல் வாய்ப்பு வழங்காததும், 1991-க்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.

மறுபுறம் ஆா்ஜென்டீனா இத்துடன் உலகக் கோப்பை போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் விளையாடியிருக்கும் நிலையில், எதிலுமே வெற்றி கண்டதில்லை. 8 தோல்வி, 2 டிராக்களையே அந்த அணி பதிவு செய்திருக்கிறது. இந்த ஆட்டத்தில் மொத்தம் 36 முறை ‘ஃபௌல்’ செய்யப்பட்டிருக்கிறது. உலகக் கோப்பை போட்டியின் இதுவரையிலான ஆட்டங்களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 10 அதிகமாகும்.

இலக்கை எட்டிய டிக்கெட் விற்பனை

இந்த மகளிா் உலகக் கோப்பை போட்டிக்கான விற்பனை இலக்காக 15 லட்சம் டிக்கெட்டுகள் இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அது எட்டப்பட்டிருப்பதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மகளிா் உலகக் கோப்பை போட்டி வரலாற்றிலேயே அதிக பாா்வையாளா்கள் கலந்துகொண்ட போட்டியாக இது இருக்கும் என ஃபிஃபா அறிவித்திருக்கிறது.

இதற்கு முன், கடந்த 2015-இல் கனடாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் 13.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானதே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com