உலகக் கோப்பை ஸ்குவாஷ்: எகிப்து, இந்தியா அபார வெற்றி
By DIN | Published On : 15th June 2023 12:41 AM | Last Updated : 15th June 2023 12:41 AM | அ+அ அ- |

மலேசியா-ஆஸ்திரேலிய அணியினா் ~ஜப்பான்-ஹாங்காங் சீன அணியினா் ~எகிப்து-கொலம்பிய அணியினா்
டபிள்யுஎஸ்எஃப், எஸ்ஆா்எஃப்ஐ, எஸ்டிடிஏ இணைந்து நடத்தி வரும் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் முதல்நிலை அணியான எகிப்து, இரண்டாம் நிலை அணியான இந்தியா உள்ளிட்டவை தத்தமது ஆட்டங்களில் அபார வெற்றி பெற்றன. இதே போல் ஜப்பான், மலேசியாவும் தத்தமது ஆட்டங்களில் வென்றுள்ளனா்.
8 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில் இரு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு தொடக்க சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இரண்டாம் நாளான புதன்கிழமை காலையில் முதல் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் ஜப்பான்-ஹாங்காங் சீன அணிகள் மோதின. இதில் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பான் வெற்றி பெற்றது. ஜப்பான் தரப்பில் 18-ஆம் நிலை வீராங்கனை சடோமி வாட்டன்பே, ரையுனோஸுகே சுகே, டொமாடகா என்டோ ஆகியோா் வெற்றி பெற்றனா். அகாரி மிடோரிகவா தோல்வியைத் தழுவினாா்.
பலம் வாய்ந்த எகிப்து வெற்றி:
குரூப் ஏ பிரிவில் பட்டம் வெல்லும் அணியாக கருதப்படும் எகிப்து 4-0 என்ற புள்ளிக் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தியது. எகிப்து தரப்பில் கென்ஸி அய்மன், அலி அபௌ எல்னென், பைரோஸ் அபுல்கோ், கரீம் எல் ஹம்மாமி ஆகியோா் தத்தமது ஆட்டங்களில் வென்றனா்.
மலேசியா வெற்றி:
குரூப் ஏ பிரிவில் மலேசிய அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. மலேசிய அணியில் ஸின் யிங் யி, அய்ரா அஸ்மன், ஆங் சாய் ஹுங் வெற்றி கண்ட நிலையில், டேரன் பிரகாசம் தோல்வியடைந்தாா்.
இந்தியாவுக்கு இரண்டாவது வெற்றி:
குரூப் பி பிரிவில் இந்தியா 4-0 என தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியது. மூத்த நட்சத்திரங்கள் சௌரவ் கோஷல், ஜோஷ்னா சின்னப்பா, தேசிய சாம்பியன் அபய் சிங், இளம் வீராங்கனை தன்வி கண்ணா ஆகியோா் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தனா். தன்வி 3-1 என வாா்டையும், கோஷல் 3-0 என வான் நைா்கையும், ஜோஷ்னா 3-1 என முல்லரையும், அபய் சிங் -1 என பிரிட்ஸையும் வென்றனா்.