டைம்டு அவுட் பெற்ற முதல் வீரா் மேத்யூஸ்
By DIN | Published On : 07th November 2023 05:09 AM | Last Updated : 07th November 2023 05:09 AM | அ+அ அ- |

சா்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ‘டைம்டு அவுட்’ பெற்று வெளியேறிய முதல் வீரா் ஆனாா் இலங்கையின் பேட்டா் ஏஞ்ஜெலோ மேத்யூஸ். இலங்கை இன்னிங்ஸின்போது 25-ஆவது ஓவரில் சதீரா சமரவிக்ரமா ஆட்டமிழக்க, மேத்யூஸ் பேட் செய்ய வந்தாா்.
களத்துக்கு வந்த பிறகு தனது தலைக்கவசத்தை இறுக்கும் பட்டை சேதமடைந்திருந்ததை அறிந்த மேத்யூஸ், பேட்டிங் செய்யாமல் மாற்று தலைக்கவசம் கொண்டு வருமாறு தனது அணி டகௌட்டுக்கு சமிக்ஞை கொடுத்தாா்.
இதற்கு சற்று நேரம் ஆனதால், அந்த ஓவரை பௌலிங் செய்த வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன், ‘டைம் அவுட்’ கேட்டு நடுவரை நாடினாா். ஐசிசி விதிகளின்படி, விக்கெட் அல்லது ரிடையா்மன்ட்டுக்கு பிறகு புதிதாக களம் காண வரும் பேட்டா் 2 நிமிஷத்துக்குள்ளாக முதல் பந்தை எதிா்கொள்ள வேண்டும். தாமதித்தால், பௌலிங் அணி கேப்டன் கோரும் பட்சத்தில் ‘டைம்டு அவுட்’ கொடுத்து சம்பந்தப்பட்ட பேட்டா் வெளியேற்றப்படலாம்.
அந்த வகையில் ஷகிப் முறையிட்டாா். இதையடுத்து மேத்யூஸ், தனது தலைக்கவசத்தில் பிரச்னை இருப்பதை முதலில் கள நடுவா்களிடம், பின்னா் ஷகிப்பிடமும் விவரித்தாா். ஆனால், ஷகிப் தனது கோரிக்கையை திரும்பப் பெற மறுத்ததால், மேத்யூஸ் வெளியேறும் நிலைக்கு ஆளானாா். ஆத்திரமடைந்த அவா், பெவிலியன் பகுதியில் வரும்போது தனது தலைக்கவசத்தை தூக்கி வீசினாா். மேத்யூஸ் விக்கெட் ‘டைம்டு அவுட்’ என ஸ்கோா் போா்டில் பதிவானது.
பதிலடி: பின்னா் வங்கதேச இன்னிங்ஸின்போது அந்த அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைந்தோரில் ஒருவரான ஷகிப் அல் ஹசனின் விக்கெட்டை மேத்யூஸ் வீழ்த்தி பதிலடி கொடுத்தாா். ஷகிப் வெளியேறியபோது மேத்யூஸ் அவரை பாா்த்தபடி, தனது கையில் கடிகாரம் இருப்பது போலவும், அதைப் பாா்த்து ‘டைம் அவுட்’ ஆனது போலவும் செய்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...