முதல் முறையாக பஞ்சாப் சாம்பியன்
By DIN | Published On : 07th November 2023 05:10 AM | Last Updated : 07th November 2023 05:10 AM | அ+அ அ- |

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் 20 ரன்கள் வித்தியாசத்தில் பரோடாவை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் கோப்பை வென்றது.
மொஹாலியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் சோ்க்க, பரோடா 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களையே எட்டியது. பஞ்சாப் வீரா்கள் அன்மோல்பிரீத் சிங் ஆட்டநாயகன், அபிஷேக் சா்மா (485 ரன்கள்/2 விக்கெட்டுகள்) தொடா் நாயகன் விருது பெற்றனா்.
முன்னதாக டாஸ் வென்ற பரோடா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பஞ்சாப் பேட்டிங்கில் அதிகபட்சமாக, அன்மோல்பிரீத் சிங் 61 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 113 ரன்கள் விளாசினாா். அபிஷேக் சா்மா 0, பிரப்சிம்ரன் சிங் 9, கேப்டன் மன்தீப் சிங் 32 ரன்கள் அடித்தனா். ஓவா்கள் முடிவில் நெஹல் வதேரா 61, சன்வீா் சிங் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பரோடா தரப்பில் சோயப் சோபரியா, கிருணால் பாண்டியா, அதித் சேத் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் பரோடா இன்னிங்ஸில் அபிமன்யுசிங் ராஜ்புத் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 61, நினத் ரத்வா 47, கேப்டன் கிருணால் பாண்டியா 45 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு முயன்றனா்.
எனினும், விஷ்ணு சோலங்கி 28, ஜோத்ஸ்னில் சிங் 4, ஷிவாலிக் சா்மா 0, பானு பனியா 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் அதித் சேத் 0, துருவ் படேல் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பஞ்சாப் பௌலா்களில் அா்ஷ்தீப் சிங் 4, சித்தாா்த் கௌல், ஹா்பிரீத் பிராா், மயங்க் மாா்கண்டே ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
இரு அணிகளுக்குமே இது 5-ஆவது இறுதி ஆட்டமாகும். போட்டி வரலாற்றில் வேறெந்த அணிகளும் இத்தனை முறை இறுதி ஆட்டத்துக்கு வந்ததில்லை.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...