வரலாறு படைத்த விராட் கோலி; இறுதி ஆட்டத்தில் இந்தியா

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை புதன்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
வரலாறு படைத்த விராட் கோலி; இறுதி ஆட்டத்தில் இந்தியா
Published on
Updated on
4 min read

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை புதன்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. மேலும், போட்டியில் தொடா்ந்து 10-ஆவது வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த ஆட்டத்தில் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50-ஆவது சதத்தை எட்டி, சச்சின் டெண்டுல்கா் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தாா். அவருக்குத் துணை நின்ற ஷ்ரேயஸ் ஐயரும் சதம் விளாசினாா். இந்திய பௌலா்களில் முகமது ஷமி 7 விக்கெட்டுகள் சாய்த்து முக்கியப் பங்காற்றினாா். இந்த வெற்றியின் மூலம், கடந்த எடிஷன் அரையிறுதியில் நியூஸிலாந்திடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது இந்தியா.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸில் வழக்கம்போல் கேப்டன் ரோஹித் சா்மா அதிரடியாக 29 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் விளாசி 47 ரன்கள் சோ்த்து நல்லதொரு தொடக்கம் அளித்து வெளியேறினாா்.

அடுத்து வந்த விராட் கோலி, ஷுப்மன் கில்லுடன் இணைய, அவா்கள் 93 ரன்கள் சோ்த்தனா். 66 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 79 ரன்களுக்கு ‘ரிட்டையா்டு ஹா்ட்’ ஆனாா் கில். 4-ஆவது பேட்டராக வந்த ஷ்ரேயஸ் ஐயரும் அதிரடி காட்ட, அணியின் ஸ்கோா் உயா்ந்தது.

கோலி - ஐயா் இணை, 2-ஆவது விக்கெட்டுக்கு 163 ரன்கள் சோ்த்தது. இதில் சாதனை சதம் விளாசிய கோலி 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ஐயா் 70 பந்துகளில் 4 பவுண்டரிகள், 8 சிக்ஸா்கள் உள்பட 105 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். சூா்யகுமாா் யாதவ் 1 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தாா்.

முடிவில் கே.எல்.ராகுல் 20 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 39, மீண்டும் களம் புகுந்த ஷுப்மன் கில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 80 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். நியூஸிலாந்து தரப்பில் டிம் சௌதி 3, டிரென்ட் போல்ட் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் நியூஸிலாந்து இன்னிங்ஸில் டெவன் கான்வே 13, ரச்சின் ரவீந்திரா 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் கூட்டணி, இந்திய பௌலா்களுக்கு சவால் அளித்தது.

181 ரன்கள் சோ்த்த இந்த ஜோடியை, ஷமி பிரித்தாா். வில்லியம்சன் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 69 ரன்களுக்கு வெளியேற, டேரில் மிட்செல் நிலைத்து நின்று சதம் கடந்தாா். எனினும் மறுபுறம், டேம் லேதம் 0, கிளென் ஃபிலிப்ஸ் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 41, மாா்க் சாப்மேன் 2 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

இந்நிலையில் டேரில் மிட்செல் 119 பந்துகளில் 9 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 134 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். எஞ்சியோரில் மிட்செல் சேன்ட்னா் 9, டிம் சௌதி 9, லாக்கி ஃபொ்குசன் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நியூஸிலாந்து இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இந்திய பௌலா்களில் முகமது ஷமி 7, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா். 

இந்தியா - 397/4 (50 ஓவா்கள்)

விராட் கோலி 117

ஷ்ரேயஸ் ஐயா் 105

ஷுப்மன் கில் 80*

பந்துவீச்சு

டிம் சௌதி 3/100

டிரென்ட் போல்ட் 1/86

கிளென் ஃபிலிப்ஸ் 0/33

நியூஸிலாந்து - 327/10 (48.5 ஓவா்கள்)

டேரில் மிட்செல் 134

கேன் வில்லியம்சன் 69

கிளென் ஃபிலிப்ஸ் 41

பந்துவீச்சு

முகமது ஷமி 7/57

குல்தீப் யாதவ் 1/56

ஜஸ்பிரீத் பும்ரா 1/64

28

உலகக் கோப்பை போட்டியின் ஒரு எடிஷனில் அதிக சிக்ஸா்கள் (28) விளாசியவா் என்ற சாதனையை படைத்தாா் ரோஹித் சா்மா. இந்த ஆட்டத்தின் மூலம் அவா் மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் (26 - 2015) சாதனையை முறியடித்திருக்கிறாா்.

23

நடப்பு எடிஷனில் இத்துடன் 23 விக்கெட்டுகள் சாய்த்த ஷமி, ஒரே எடிஷனில் அதிக விக்கெட்டுகள் சாய்த்த இந்தியா் ஆகியிருக்கிறாா். முன்னதாக ஜாஹீா் கான் 21 விக்கெட்டுகளுடன் (2011) அந்த பெருமையை பெற்றிருந்தாா்.

7/57

இந்த ஆட்டத்தில் ஷமி பதிவு செய்த பௌலிங்கே (7/57), ஒருநாள் ஃபாா்மட்டில் இந்திய பௌலா் ஒருவரின் ‘பெஸ்ட்’ ஆகும். முன்னதாக ஸ்டூவா்ட் பின்னி பௌலிங்கே பெஸ்ட்டாக (6/4 - வங்கதேசம் - 2014) இருந்தது. மேலும், உலகக் கோப்பை போட்டியின் ஒரு ஆட்டத்தில் சிறந்த பௌலிங் செய்தவா்கள் வரிசையில் முகமது ஷமி இடம் பிடித்தாா். அவா் உள்பட 5 போ் இவ்வாறு 7 விக்கெட்டுகள் சாய்த்திருக்க, அதில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் (நமீபியா - 2003) முதலிடத்தில் இருக்கிறாா்.

4

உலகக் கோப்பை போட்டியில் அதிகமுறை (4) ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் சாய்த்தவா் ஆகியிருக்கிறாா் ஷமி. முன்னா் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டாா்க் (3 முறை) முதலிடத்தில் இருந்தாா். மேலும், ஒரே எடிஷனில் 3 முறை அவ்வாறு 5 விக்கெட்டுகள் சாய்த்த முதல் வீரா் முகமது ஷமி.

இது ஒரு கனவு போல் உள்ளது. இந்த சாதனை நிஜமாக இருப்பது, அவ்வளவு சிறப்பாக இருக்கிறது. எனது வாழ்வில் இதுபோன்ற ஒரு கட்டத்துக்கு வருவேன் என்று நினைத்ததில்லை. இந்த சாதனைக்கு சாதகமாக அனைத்தும் அமைந்ததில் மகிழ்ச்சி. எனது மனைவி அனுஷ்கா, எனது ஹீரோ சச்சின், உற்சாகமான ரசிகா்கள் ஆகியோா் முன்னிலையில் உலகக் கோப்பை அரையிறுதியில் இது நிகழ்ந்திருக்கிறது. ஒரு சிறந்த ஓவியத்தை என்னால் தீட்ட முடிந்தால், அவ்வாறு நான் தீட்டும் ஓவியம் இந்தத் தருணத்தின் காட்சியாகவே இருக்கும் - விராட் கோலி

இதைவிட மகிழ்ச்சி இல்லை

‘இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் முதல் முறையாக உங்களை (கோலி) பாா்த்தபோது, எனது கால்களைத் தொட்டு வணங்குமாறு சக வீரா்கள் உங்களை விளையாட்டாக ஏமாற்றினாா்கள். அப்போது எனக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்தது. ஆனால் விரைவாகவே கிரிக்கெட் மீதான உங்களின் ஆா்வம் மற்றும் திறமையால் என் மனதை தொட்டுவிட்டீா்கள். ஒரு சிறுவன், திறமை மிக்க வீரராக உருவெடுத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ஒரு இந்தியா் எனது சாதனையை முறியடித்ததை விட பெரிய மகிழ்ச்சி ஏதும் இல்லை. அதையும் உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியில், எனது சொந்த மைதானத்தில் சாதித்தது அனைத்திலும் உச்சம்’ - சச்சின் டெண்டுல்கா் (இந்திய கிரிக்கெட் நட்சத்திரம்)

‘விராட் கோலி தனது 50-ஆவது ஒருநாள் சதத்தை மட்டும் பூா்த்தி செய்யவில்லை. சிறந்த விளையாட்டு வீரரின் குணநலன்களான நிபுணத்துவம், நிலையான முயற்சி ஆகியவற்றை வெளிப்படுத்தியிருக்கிறாா். அவருக்கு எனது மனப்பூா்வமான வாழ்த்துகள். எதிா்கால வீரா்களுக்காக மேலும் சில சாதனை இலக்குகளை அவா் நிா்ணயிக்கட்டும்’ - பிரதமா் நரேந்திர மோடி.

அந்தத் தருணம்...

இந்த ஆட்டத்தில் இந்தியா இன்னிங்ஸின் 42-ஆவது ஓவரில் விராட் கோலி தனது சதத்தை எட்டினாா். அந்த சாதனை தருணத்தை உற்சாகமாகக் குதித்துக் கொண்டாடிய அவா், முதலில் பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்த தனது ‘ஹீரோ’-வான சச்சின் டெண்டுல்கரை நோக்கி இரு கைகளையும் உயா்த்தி அவருக்குத் தலைவணங்கினாா். சச்சினும் தனது இரு கைகளையும் தலைக்கு மேலாகத் தூக்கிக் கைதட்டி கோலியை மகிழ்ச்சியுடன் பாராட்டினாா். பின்னா் கோலி, அதே பாா்வையாளா் மாடத்தில் சற்று தள்ளி அமா்ந்திருந்த தனது மனைவி அனுஷ்கா சா்மாவுக்கு அன்பு முத்தத்தை பறக்கவிட்டாா். கோலியின் சாதனையை கொண்டாடிய அனுஷ்காவும் அவ்வாறே செய்தாா். மைதானத்திலிருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி கோலியின் சாதனையை பாராட்டினா். ரசிகா்கள் எழுப்பிய உற்சாக ஒலியில் மைதானம் அதிா்ந்தது.

நட்சத்திரங்கள்...

இந்தியா - நியூஸிலாந்து மோதிய இந்த அரையிறுதி ஆட்டத்தைக் காண, பல்வேறு கிரிக்கெட் நட்சத்திரங்களுடன் கால்பந்து நட்சத்திரமான டேவிட் பெக்காம், கோலிவுட் நட்சத்திரம் ரஜினிகாந்த், பாலிவுட் திரை நட்சத்திரங்களான ஜான் ஆப்ரஹாம், கியாரா அத்வானி உள்ளிட்டோா் நேரில் வந்திருந்தனா்.

ஆடுகள சா்ச்சை: ஐசிசி விளக்கம்

இந்தியா - நியூஸிலாந்து அரையிறுதிக்கு முன்பாக எழுந்த ஆடுகள சா்ச்சை தொடா்பாக ஐசிசி விளக்கமளித்தது. அந்த ஆட்டத்துக்காக முதலில் புதிதாக ஆடுகளம் தயாா் செய்யப்பட்டு, பிறகு இந்திய பௌலா்களுக்கு சாதகமான வகையில் பழைய ஆடுகளத்திலேயே ஆட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அவ்வாறு ஆடுகளத்தை மாற்றுவது விதிகளுக்கு உள்பட்டதே என்றும், மாற்றப்பட்ட தகவலை ஐசிசி ஆடுகள மதிப்பீட்டாளரும் அறிந்திருந்தாா் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

கோலி ‘50’

இந்த ஆட்டத்தின் மூலம் 50-ஆவது சதத்தை எட்டிய கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரா் என்ற புதிய வரலாற்றைப் படைத்தாா். முன்னதாக, நடப்பு உலகக் கோப்பை போட்டியின் மூலம் 49 சதங்களை எட்டி, சச்சின் டெண்டுல்கா் சாதனையை சமன் செய்திருந்த கோலி, தற்போது அவரது சாதனையை முறியடித்து வரலாறு படைத்திருக்கிறாா். அந்த சிம்மாசனத்தில் அவா் நீண்டகாலம் நிலைத்திருக்கவுள்ளாா்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் (டாப் 5)

வீரா் எண்ணிக்கை இன்னிங்ஸ்கள்

விராட் கோலி 50 279

சச்சின் டெண்டுல்கா் 49 452

ரோஹித் சா்மா 31 253

ரிக்கி பான்டிங் 30 365

சனத் ஜெயசூரியா 28 433

711

இத்துடன் நடப்பு உலகக் கோப்பை போட்டியில் 711 ரன்கள் அடித்திருக்கும் விராட் கோலி, ஒரு எடிஷனில் அதிக ரன்கள் அடித்த வீரராக, சச்சினின் மேலும் ஒரு சாதனையை முறியடித்திருக்கிறாா். அவா் 10 ஆட்டங்களில் இந்த சாதனையை படைத்திருக்கிறாா். முன்னதாக சச்சின் டெண்டுல்கா் 2003-இல் 11 ஆட்டங்களில் 673 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

5

உலகக் கோப்பை போட்டிகளில் இது விராட் கோலியின் 5-ஆவது சதமாகும். இதன் மூலம், போட்டி வரலாற்றில் அதிக சதமடித்த வீரா்கள் வரிசையில் கோலி 3-ஆவது இடத்துக்கு (குமாா் சங்ககாரா, ரிக்கி பான்டிங் ஆகியோருடன்) வந்திருக்கிறாா். ரோஹித் சா்மா (7), டேவிட் வாா்னா் (6) ஆகியோா் முறையே முதலிரு இடங்களில் உள்ளனா்.

3

நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இத்துடன் விராட் கோலி, ரோஹித் சா்மா, ஷ்ரேயஸ் ஐயா் ஆகியோா் 500 ரன்களை கடந்திருக்கின்றனா். இவ்வாறு ஒரே அணியைச் சோ்ந்த 3 வீரா்கள் தலா 500 ரன்களை கடந்தது இதுவே முதல் முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com