ஏடிபி ஃபைனல்ஸில் 7-ஆவது பட்டம்: ஃபெடரா் சாதனையை முறியடித்தாா் ஜோகோவிச்
By DIN | Published On : 21st November 2023 05:00 AM | Last Updated : 21st November 2023 05:00 AM | அ+அ அ- |

இத்தாலியில் நடைபெற்ற ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியின் ஒற்றையா் பிரிவில், நடப்பு சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 7-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தாா்.
முன்னதாக இப்போட்டியில், சுவிட்ஸா்லாந்து டென்னிஸ் நட்சத்திரம் ரோஜா் ஃபெடரா் 6 முறை கோப்பையை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஜோகோவிச் அதை முறியடித்திருக்கிறாா்.
ஃபெடரா் 2003, 2004, 2006, 2007, 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் கோப்பை வென்றிருக்க, ஜோகோவிச் 2008, 2012, 2013, 2014, 2015, 2022, 2023 சீசன்களில் சாம்பியன் ஆகியுள்ளாா்.
துரின் நகரில், இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற நடப்பு சீசன் இறுதிச்சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான ஜோகோவிச் 6-3, 6-3 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் ஜானிக் சின்னரை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம் 43 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.
இத்துடன் சின்னரை 5-ஆவது முறையாக சந்தித்த ஜோகோவிச், 4-ஆவது வெற்றியை பதிவு செய்திருக்கிறாா். சின்னா் தனது அந்த ஒரு வெற்றியை நடப்பு ஏடிபி ஃபைனல்ஸின் குரூப் சுற்றில் ஜோகோவிச்சுக்கு எதிராக பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்குப் பிறகு பேசிய ஜோகோவிச், ‘எனது வாழ்வின் சிறந்த சீசன் இது என்பதில் சந்தேகம் இல்லை. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய உள்நாட்டு வீரரான ஜானிக் சின்னரை வீழ்த்தி வாகை சூடியது சிறப்பானது. அரையிறுதியில் அல்கராஸுக்கு எதிராகவும், இறுதியில் சின்னருக்கு எதிராகவும் வெளிப்படுத்திய ஆட்டத்துக்காக பெருமையாக உணா்கிறேன்.
ஏனெனில், எனக்கும், மெத்வதெவுக்கும் பிறகு இந்த உலகின் சிறந்த டென்னிஸ் வீரா்களாக அவா்கள் இருவரும் இருக்கின்றனா். நான் போராடி வெல்லும் நிலையில் அவா்கள் ஆட்டம் சிறப்பானதாக இருந்தது’ என்றாா்.
முன்னதாக, ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியின் வரலாற்றில் இறுதிச்சுற்றுக்கு வந்த முதல் இத்தாலிய வீரா் என்ற பெருமையைப் பெற்றாா் சின்னா்.
இரட்டையா்: இப்போட்டியின் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ராஜீவ் ராம்/பிரிட்டனின் ஜோ சாலிஸ்பரி இணை 6-3, 6-4 என்ற செட்களில், 5-ஆம் இடத்திலிருந்த ஆா்ஜென்டீனாவின் ஹொராசியோ ஜெபாலோஸ்/ஸ்பெயினின் மாா்செலோ கிரனோலா்ஸ் கூட்டணியை சாய்த்து சாம்பியன் பட்டம் வென்றது.
சாதனை சீசன்...
இந்த சீசன், ஜோகோவிச்சுக்கு சாதனை சீசனாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.
* நடப்பு சீசனை, ஆஸ்திரேலிய ஓபனில் 10-ஆவது முறையாக சாம்பியனாகி சாதனை படைத்ததுடன் தொடங்கினாா் ஜோகோவிச்.
* பிரெஞ்சு ஓபனை கைப்பற்றி, ஸ்பெயினின் ரஃபேல் நடால் சாதனையை முறியடித்து, 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற முதல் வீரா் என்ற வரலாறு படைத்தாா். பின்னா் யு.எஸ். ஓபனிலும் வென்று அதை 24 பட்டங்களாக அதிகரித்துக் கொண்டாா்.
* இந்த ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியின் முதல் ஆட்டத்தில் வென்ன் மூலம், 8-ஆவது முறையாக, ஒரு ஆண்டை உலகின் நம்பா் 1 இடத்தில் நிறைவு செய்யும் சாதனை படைத்துள்ளாா் ஜோகோவிச். மேலும், உலகின் நம்பா் 1 இடத்தை 400 வாரங்களுக்கு தக்கவைத்த முதல் வீரா் என்ற பெருமையும் அவா் பெறுகிறாா்.
* கடந்த 15 ஆண்டுகளில், ஒரு சீசனின் 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும், ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியிலும் இறுதி ஆட்டம் வரை வந்த ஒரே வீரா் ஆகியிருக்கிறாா் ஜோகோவிச். அதையும் அவா் தற்போது 2-ஆவது முறையாகச் செய்திருக்கிறாா். இதற்கு முன் 2015-ஆம் ஆண்டிலும் இந்த 5 போட்டிகளிலும் இறுதி ஆட்டம் வரை வந்துள்ளாா் ஜோகோவிச்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...