
மெல்போர்ன்,: இந்தியாவுடனான டி20 தொடரில் மோதவுள்ள ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த அணியில் டேவிட் வார்னருக்கு பதிலாக ஆரோன் ஹார்டி இணைந்திருக்கிறார்.
இந்தத் தொடருக்கான அணி கடந்த மாதமே அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் வார்னர் இருந்தார். இந்நிலையில், சமீபத்திய உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் ஸ்கோர் செய்த வார்னர், தற்போது நாடு திரும்பியிருக்கிறார். இதையடுத்து அவரது இடத்தில் ஆல்-ரவுண்டரான ஆரோன் ஹார்டி சேர்க்கப்பட்டுள்ளார்.
வார்னர் இல்லாததை அடுத்து, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய 7 ஆஸ்திரேலியர்கள் மட்டுமே, இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் களம் காண்கின்றனர். இதனிடையே, இந்த உலகக் கோப்பை போட்டிதான் வார்னரின் கடைசி உலகக் கோப்பை போட்டியா என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, "எனது ஆட்டம் முடிந்துவிட்டது என யார் சொன்னது?' என்று கேட்டு பதிலளித்திருக்கிறார் வார்னர்.
நடப்பாண்டு டிசம்பரில் பாகிஸ்தானுடன் விளையாட இருக்கும் தொடரே, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது கடைசி தொடராக இருக்கலாம் என சமிக்ஞை கொடுத்திருக்கும் வார்னர், வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட ஆட்டங்களில் தொடர்ந்து விளையாட இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
அணி விவரம்: மேத்யூ வேட் (கேப்டன்), ஆரோன் ஹார்டி, ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப், ஷான் அப்பாட், டிம் டேவிட், நேதன் எலிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸாம்பா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.