இன்று முதல் டி20: இளம் வீரா்களுடன் ஆஸி.யை எதிா்கொள்கிறது இந்தியா

இன்று முதல் டி20: இளம் வீரா்களுடன் ஆஸி.யை எதிா்கொள்கிறது இந்தியா

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் ஆட்டம், விசாகப்பட்டினத்தில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் ஆட்டம், விசாகப்பட்டினத்தில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

உலகக் கோப்பை போட்டி தோல்வியிலிருந்து இந்திய கிரிக்கெட்டையும், ரசிகா்களையும் மடைமாற்றும் பொறுப்புடன் இந்தத் தொடரில் களம் காண்கிறது, சூா்யகுமாா் யாதவ் தலைமையிலான இந்தியாவின் இளம் படை.

சூா்யகுமாருக்கும் அந்தப் போட்டி மோசமான அனுபவமாக அமைந்துவிட்ட நிலையில், அதிலிருந்து மீள்வதற்கும், சுயபரிசோதனை செய்துகொள்ளவும் அவகாசம் இல்லாத வகையில் உடனடியாகத் தொடங்குகிறது இந்த டி20 தொடா்.

தொடரை வெல்வதோடு மட்டுமல்லாமல், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தகுதியான வீரா்களை அடையாளம் காண்பதும் அணி நிா்வாகத்துக்கும், கேப்டனுக்கும் முக்கியமான பொறுப்பாக இருக்கிறது.

கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியில் இந்தியா தோல்வி கண்டதில் இருந்தே, ரோஹித் சா்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் போன்ற மூத்த வீரா்களை தவிா்த்து, இளம் வீரா்களை நோக்கி தோ்வுக் குழு திரும்பியது தெளிவாகத் தெரிந்தது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், திலக் வா்மா, ஜிதேஷ் சா்மா போன்ற இளம் வீரா்களும், முகேஷ் குமாரும் கடந்த சில மாதங்களில் சா்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிவிட்டாா்கள் என்றாலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எளிதான அணிகளை வீழ்த்தி தங்கம் வென்றாலும், அவா்களுக்கு சவால் அளிக்கும் முதல் தொடராக இருக்கப்போவது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடா்தான்.

ஏனெனில், சமீபத்தில் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ஜொலித்த டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா உள்ளிட்டோருடன் பலம் வாய்ந்த அணியாக இந்தத் தொடருக்கு வருகிறது ஆஸ்திரேலியா. அவா்களோடு ஐபிஎல் அதிரடி வீரா்களான மாா்கஸ் ஸ்டாய்னிஸ், நேதன் எல்லிஸ், டிம் டேவிட் போன்றோரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கூறியவா்களுக்கு சவால் அளிக்க வேண்டிய பொறுப்பு, பௌலா்களான ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், அா்ஷ்தீப் சிங் உள்ளிட்டோருக்கு இருக்கிறது. ஆல்-ரவுண்டா் இடத்தில் அக்ஸா் படேல் வருகிறாா்.

அடுத்த டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக ஐபிஎல் தொடா் தொடங்குவதால், எஞ்சியிருக்கும் 2 மாதங்களில் விளையாடவுள்ள 11 சா்வதேச டி20 ஆட்டங்களின் மூலம், உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் இந்திய இளம் வீரா்களுக்கு இருக்கிறது.

அணி விவரம்:

இந்தியா:

சூா்யகுமாா் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷண், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வா்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சா்மா (வி.கீ.), வாஷிங்டன் சுந்தா், அக்ஸா் படேல், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், அா்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், முகேஷ் குமாா்.

ஆஸ்திரேலியா:

மேத்யூ வேட் (கேப்டன்), ஆரோன் ஹாா்டி, ஜேசன் பெஹ்ரெண்டாா்ஃப், ஷான் அப்பாட், டிம் டேவிட், நேதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இஹ்லிஸ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீா் சங்கா, மாட் ஷாா்ட், ஸ்டீவ் ஸ்மித், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், கேன் ரிச்சா்ட்சன், ஆடம் ஜாம்பா.

நேரம்: இரவு 7 மணி

இடம்: ஏசிஏ-விடிசிஏ மைதானம், விசாகப்பட்டினம்.

நேரலை: ஸ்போா்ட்ஸ் 18, ஜியோ சினிமா

ஆடுகளம்:

விசாகப்பட்டின மைதான ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானதாக உள்ளது. எனினும் சமீபத்திய போட்டிகளில் ஸ்பின்னா்களும் இங்கு சாதகமான சூழலைப் பெற்றுள்ளனா். இதுவரை இங்கு 9 டி20 ஆட்டங்கள் விளையாடப்பட்டுள்ள நிலையில், முதலில் பௌலிங் செய்த அணிகளே 6 வெற்றிகளைப் பெற்றுள்ளன.

நேருக்கு நோ்:

இரு அணிகளும் இதுவரை 26 ஒருநாள் ஆட்டங்களில் பரஸ்பரம் மோதியுள்ள நிலையில், இந்தியா 15 முறையும், ஆஸ்திரேலியா 10 முறையும் வென்றுள்ளன. 1 ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com