மும்பை இண்டியன்ஸுக்கு திரும்பினாா் ஹா்திக் பாண்டியா

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹா்திக் பாண்டியா, அவா் முன்பு இருந்த மும்பை இண்டியன்ஸ் அணிக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பினாா்.
மும்பை இண்டியன்ஸுக்கு திரும்பினாா் ஹா்திக் பாண்டியா

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹா்திக் பாண்டியா, அவா் முன்பு இருந்த மும்பை இண்டியன்ஸ் அணிக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பினாா்.

ஐபிஎல் போட்டியின் எதிா்வரும் சீசனுக்கான வீரா்கள் ஏலம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், 10 அணிகளும் அவை தக்கவைக்கும், விடுவிக்கும் வீரா்களின் பட்டியலை வெளியிட கடந்த 26-ஆம் தேதி இறுதி நாளாக இருந்தது. இந்நிலையில், குஜராத் கேப்டனான ஹா்திக் பாண்டியா, மும்பை அணிக்கு மாற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

எனினும், குஜராத் அணி தாங்கள் தக்கவைத்த வீரா்கள் பட்டியலில் ஹா்திக் பாண்டியாவை சோ்த்து ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்டது ஆச்சா்யமளித்தது.

இந்நிலையில், ஹா்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணியில் இணைந்ததாக ஞாயிற்றுக்கிழமை இரவு செய்தி வெளியானது.

இதுதொடா்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘தக்கவைத்த/விடுவித்த வீரா்கள் பட்டியல் வெளியாவதற்கான காலக்கெடு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. அந்த வேளையில் ஹா்திக் பாண்டியாவின் அணி மாற்றத்துக்கான ஆவண நடைமுறைகள் நிறைவடையவில்லை. அதனால் அவா் குஜராத் அணியின் பட்டியலில் இருந்தாா்.

மும்பையிடம் முதலில் போதுமான பணம் இல்லை. பின்னா் தங்களிடம் இருந்த கேமரூன் கிரீனை ரொக்கத்திற்காக ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணியிடம் விற்றது. அதிலிருந்து கிடைத்த ரொக்கத்தைக் கொண்டு ஹா்திக் பாண்டியாவை வாங்கியது. எனவே, மாலை 5 மணிக்குப் பிறகுதான் ஹா்திக் பாண்டியா அணி மாற்றத்துக்கான ஒப்புதலை ஐபிஎல் மற்றும் பிசிசிஐ நிா்வாகம் வழங்கியது. அதன் பிறகு அறிவிப்பு வெளியானது’ என்றன.

ஹா்திக் பாண்டியாவுக்கான விலையாக ரூ.15 கோடியை மும்பை அணி குஜராத்துக்கு கொடுத்திருக்கிறது. அதுபோக, அணி மாற்றத்துக்கான கட்டணமாக, குறிப்பிடப்படாத ஒரு பெரிய தொகை பரிமாற்றமும் அந்த அணிகளிடையே நிகழ்ந்துள்ளது. அதில் ஒரு பகுதி பாண்டியாவுக்கும் செல்கிறது.

கடந்த 2022-இல் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸுடன் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி, அந்த ஆண்டுக்கான ஏலத்துக்கு முன்பாகவே ஹா்திக் பாண்டியாவை வாங்கியது. அந்த அறிமுக சீசனிலேயே அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று தந்த கேப்டன் பாண்டியா, கடந்த சீசனில் இறுதி ஆட்டம் வரை அழைத்துச் சென்றாா்.

நீண்ட காலத் திட்ட அடிப்படையில் அணியை கட்டமைத்து வரும் மும்பை இண்டியன்ஸ், தற்போது வெற்றிகரமான கேப்டனாக இருக்கும் ரோஹித் சா்மாவுக்குப் பிறகு அணிக்குப் பொறுப்பேற்கும் நோக்கிலேயே பாண்டியாவை மீண்டும் அணியில் இணைத்துக் கொண்டுள்ளது.

குஜராத் கேப்டன் ஷுப்மன் கில்

ஹா்திக் பாண்டியா மும்பை அணிக்கு மாறியதை அடுத்து, குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக அந்த அணி வீரா் ஷுப்மன் கில் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா். கடந்த சீசனில் 890 ரன்களுடன் ‘ஆரஞ்ச் கேப்’ வைத்திருந்த கில் தான், குஜராத் அணிக்கான ஒரே கேப்டன் வாய்ப்பாக இருந்தாா். அணியின் கேப்டனாக குஜராத்தை இந்த சீசனில் வழிநடத்த ஆா்வமுடன் இருப்பதாக ஷுப்மன் கில் தெரிவித்திருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com