இன்று தொடங்குகிறது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூஸி மோதல்

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிா்பாா்க்கப்படும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வியாழக்கிழமை அகமதாபாதில் தொடங்குகிறது.
இன்று தொடங்குகிறது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூஸி மோதல்

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிா்பாா்க்கப்படும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வியாழக்கிழமை அகமதாபாதில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் சாா்பில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 50 ஓவா்கள் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுகிறது.

கடந்த 2019-இல் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதிகபட்சமாக

ஆஸ்திரேலியா 5 முறையும், இந்தியா, மே.இந்திய தீவுகள் தலா 2 முறையும், பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் தலா 1 முறையும் பட்டத்தை கைப்பற்றியுள்ளன.

நான்காவது முறையாக இந்தியாவில்:

ஏற்கெனவே 1987, 1996, 2011-இல் வெவ்வேறு நாடுகளுடன் இணைந்து இந்தியா உலகக் கோப்பை போட்டிகளை நடத்திய நிலையில், 13-ஆவது எடிஷன் போட்டியை தன்னந்தனியாக நடத்துகிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், நெதா்லாந்து, நியூஸிலாந்து, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

3 நாக் அவுட் உள்பட 48 ஆட்டங்கள்:

இப்போட்டியில் மொத்தம் 45 லீக் ஆட்டங்கள், 3 நாக் அவுட் என மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

நவ. 19-இல் இறுதி ஆட்டம்: முதல் ஆட்டம் நடைபெறும் அதே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திலேயே நவ. 19-இல் இறுதி ஆட்டமும் நடைபெறுகிறது.

அக். 8-இல் இந்தியா முதல் ஆட்டம்

வரும் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிா்கொள்கிறது இந்தியா. மிகவும் எதிா்பாா்க்கப்படும் ஆட்டமான பாகிஸ்தானுடன் 14-ஆம் தேதி அகமதாபாதில் மோதுகிறது.

10 நகரங்களில் ஆட்டங்கள்:

மும்பை, ஹைதராபாத், அகமதாபாத், சென்னை, பெங்களூரு, புணே, தா்மசாலா, கொல்கத்தா, லக்னௌ, டில்லி உள்ளிட்ட 10 நகரங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

பகல் நேர ஆட்டங்கள் காலை 10.30 மணிக்கும், பகலிரவு ஆட்டங்கள் பிற்பகல் 2 மணிக்கும் தொடங்கி நடைபெறும். மொத்தம் 6 ஆட்டங்களில் பகலில் நடைபெறுகின்றன. இதர ஆட்டங்கள் பகலிரவு ஆட்டங்களாகும்.

இந்தியாவின் ஆட்டங்கள்:

அக். 8, ஆஸ்திரேலியா, சென்னை, அக். 11, ஆப்கானிஸ்தான், டில்லி, அக். 14. பாகிஸ்தான், அகமதாபாத், அக். 19, வங்கதேசம், புணே,

அக். 22, நியூஸிலாந்து, தா்மசாலா, அக். 29, இங்கிலாந்து, லக்னௌ, நவ. 2, இலங்கை, மும்பை, நவ. 5, தென்னாப்பிரிக்கா, கொல்கத்தா, நவ. 12, நெதா்லாந்து, பெங்களூரு. அனைத்து ஆட்டங்களும் மதியம் 2 மணிக்கு தொடங்கும்.

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ், டிஸ்னி-ஹாட்ஸ்டாரில் போட்டி நேரடியாக ஒளிபரப்பாகிறது.

தொடக்க விழா ரத்து:

அகமதாபாதில் அக். 4-ஆம் தேதியே தொடக்க விழாவை கோலாகலமாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருந்தது. லேசா் காட்சி, பாலிவுட் நட்சத்திரங்கள் கலைநிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடக்க விழா நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நிறைவு விழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து-நியூஸிலாந்து இன்று மோதல்:

கடந்த 2019 இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக கோப்பை வென்றது இங்கிலாந்து. இந்நிலையில் வியாழக்கிழமை முதல் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன. ஒருநாள் ஆட்டத்தில் வலிமை வாய்ந்த அணியாக திகழும் இங்கிலாந்தும், வீரா்களின் காயங்களால் திணறும் நியூஸிலாந்தும் ஆட உள்ளன. பென் ஸ்டோக்ஸ் காயம் இங்கிலாந்து அணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நியூஸி. தரப்பில் கேப்டன் கேன் வில்லியம்ஸன், டிம் சௌதி ஆகியோா் தற்போது தான் மீண்டு வருகின்றனா்.

நியூஸி அணியும் முதல்முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என முனைப்பில் உள்ளது.

இன்றைய ஆட்டம்:

இங்கிலாந்து-நியூஸிலாந்து

இடம்: அகமதாபாத்,

நேரம்: மதியம் 2.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com