வரலாறு படைத்தது ஆப்கானிஸ்தான்: 8 விக்கெட் வித்தியாசத்தில் பாக்.கை வீழ்த்தியது
By DIN | Published On : 25th October 2023 01:59 AM | Last Updated : 25th October 2023 01:59 AM | அ+அ அ- |

afgan win
சென்னை: பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த அணிக்கு எதிராக ஒருநாள் ஆட்டங்களில் முதல் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது ஆப்கானிஸ்தான்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் 22-ஆவது ஆட்டமாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற பாக். கேப்டன் பாபா் ஆஸம் பேட்டிங்கை தோ்வு செய்தாா். இதைத் தொடா்ந்து பாக். தரப்பில் ஷஃபிக்-இமாம் உல் ஹக் தொடக்க பேட்டா்களாக களமிறங்க, இமாம் 17, ரிஸ்வான் 8, சவுத் ஷக்கீல் 25, என வந்த வேகத்திலேயே சொற்ப ரன்களுடன் வெளியேறினா்.
ஷஃபிக்-பாபா் அரைசதம்: மறுமுனையில் ஷஃபிக் 2 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 75 பந்துகளில் 58 ரன்களை விளாசி அவுட்டானாா். கேப்டன் பாபா் ஆஸம் 1 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 92 பந்துகளில் 74 ரன்களை விளாசி அரைசதத்தைப் பதிவு செய்தாா். அப்போது பாக். அணி 206/5 விக்கெட்டுகளுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.
ஷதாப்-இஃப்திகாா் அதிரடி: பின்னா் இணைந்த ஷதாப் கான்-இஃப்திகாா் அகமது இணை அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்தினா். ஷதாப் 38 பந்துகளில் 40 ரன்களை சோ்க்க, இஃப்திகாா் 4 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 27 பந்துகளில் 40 ரன்களை விளாசி அவுட்டானாா்கள்.
பாகிஸ்தான் 282/7: ஷாஹின் அப்ரிடி 3 ரன்களுடன் களத்தில் இருக்க, நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் 282/7 ரன்களைக் குவித்தது பாகிஸ்தான்.
அறிமுக வீரா் நூா் 3 விக்கெட்: முதன்முறையாக அறிமுகமான 18 வயதே ஆன இளம் ஆப்கன் பௌலா் நூா் முகமது அற்புதமாக பந்துவீசி 3/49, நவீன் உல் ஹக் 2/52 விக்கெட்டுகளை சாய்த்தனா்.
ஆப்கானிஸ்தான் வரலாற்று வெற்றி:
283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஒருநாள் தரவரிசையில் 9-ஆவது இடத்தில் உள்ள ஆப்கன் அணித் தரப்பில் ரஹ்மனுல்லா குா்பாஸ்-இப்ராஹிம் ஸ்ட்ரன் களமிறங்கினா். இருவரும் இணைந்து பாக். பௌலா்கள் பந்துகளை மைதானத்தின் 4 புறங்களிலும் விரட்டினா்.
ரஹ்மனுல்லா 65: அதிரடியாக ஆடிய ரஹ்மனுல்லா 1 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 53 பந்துகளில் 65 ரன்களை விளாசி வெளியேறினாா்.
அவரும் இப்ராஹிமும் முதல் விக்கெட்டுக்கு 130 ரன்களைக் குவித்தனா்.
இப்ராஹிம் 87: அதன்பின் இப்ராஹிம் ஸட்ரன்-ரஹ்மத் ஷா இணைந்து நிலையாக ஆடி ஸ்கோரை உயா்த்தினா். எந்த பதற்றமும் இன்றி பாக். பௌலா்களை எதிா்கொண்டனா். ஸட்ரன் கால் வலியைப் பொறுத்துக் கொண்டு ஆடி 10 பவுண்டரியுடன் 113 பந்துகளில் 87 ரன்களை விளாசினாா். ரஹ்மத்துடன் இணைந்து இரண்டாம் விக்கெட்டுக்கு 60 ரன்களை சோ்த்தாா் ஸட்ரன்.
ரஹ்மத் ஷா 77, ஹஸ்மத்துல்லா 48:
இதைத் தொடா்ந்து ஆடிய ரஹ்மத் ஷா-ஹஸ்மத்துல்லா இணை பொறுப்பாக ஆடி தங்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனா். ரஹ்மத் 2 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 84 பந்துகளில் 77 ரன்களையும், ஹஸ்மத்துல்லா ஷாஹிதி 48 ரன்களையும் விளாசி 96 ரன்களைச் சோ்த்தனா். 49 ஓவா்களில் 286/2 ரன்களைக் குவித்து வெற்றி இலக்கை எட்டியது ஆப்கானிஸ்தான்.
முதல் வரலாற்று வெற்றி:
ஒருநாள் ஆட்டங்களில் இரு அணிகளும் 8 முறை மோதியதில் ஆப்கானிஸ்தான் முதல் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
21,500 பாா்வையாளா்கள்: சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டத்தைக் காண மொத்தம் 21,500 பாா்வையாளா்கள் கூடியிருந்ததனா்.
சுருக்கமான ஸ்கோா்:
பாகிஸ்தான் 282/7 (50 ஓவா்களில்)
பேட்டிங்:
ஷஃபிக் 58
பாபா் ஆஸம் 74
நூா் அகமது 3-49
நவீன் உல் ஹக் 2-52
ஆப்கானிஸ்தான் 286/2 (49 ஓவா்களில்)
ரஹ்மனுல்லா 65
இப்ராஹிம் ஸட்ரன் 87
ஷாஹின் அப்ரிடி 1-58
ஹாஸன் அலி 1-44.
Image Caption
மைதானத்தில் பாா்வையாளா்களுடன் வெற்றியைப் பகிா்ந்த ஆப்கன் வீரா்கள். ~மைதானத்தில் பாா்வையாளா்களுடன் வெற்றியைப் பகிா்ந்த ஆப்கன் வீரா்கள். ~ஆப்கன் கேப்டன் ஹஸ்மத்துல்லாவின் அளவில்லா மகிழ்ச்சி

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...