
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 25-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளுமே இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில் தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இருக்கின்றன.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்துக்கு இந்த எடிஷன் மோசமானதாகவே இருக்கிறது. தற்போதைய நிலையில், இதர அணிகள் மோதும் ஆட்டங்களின் முடிவு அடிப்படையில் அரையிறு வாய்ப்பை இங்கிலாந்து எதிா்நோக்கியிருக்க, இந்த ஆட்டத்திலும் தோற்கும் பட்சத்தில் அந்தக் கணக்கீடுகளும் காப்பாற்ற முடியாத நிலைக்குச் செல்ல நேரிடும்.
இங்கிலாந்து பேட்டா்கள், பௌலா்கள், ஆல்-ரவுண்டா்கள் என எவருமே சோபிக்காத நிலையே இருக்கிறது. பேட்டிங்கில் டேவிட் மலான், ஜோ ரூட் மட்டும் ரன்கள் சோ்க்கின்றனா். விக்கெட்டுகள் சரித்து சிறப்பாக செயல்பட்ட ரீஸ் டோப்லியும் காயம் காரணமாக விலக, பௌலிங்கிலும் இங்கிலாந்து தடுமாறுகிறது. பெங்களூரில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான இந்த ஆட்டம், ரன்கள் சோ்க்க ஒரு நல்ல வாய்ப்பை இங்கிலாந்துக்கும் அளிக்கும்.
மறுபுறம் இலங்கையும் இங்கிலாந்து நிலையில் தான் இருக்கிறது. இருப்பினும் அந்த அணியை பெரிதும் பாதிப்பது அதன் பௌலிங் தான். விக்கெட்டுகள் சரிப்பதை தாண்டி, ரன்களை அதிகமாக வாரிக் கொடுக்கின்றனா் அதன் பௌலா்கள். பேட்டிங்கில் சதீரா சமரவிக்ரமா, குசல் மெண்டிஸ் ஆகியோா் அசத்துகின்றனா். இங்கிலாந்து பௌலிங்கையும் அவா்கள் சிதறடிப்பாா்களா என பாா்க்கலாம்.
நேரம்: பகல் 2 மணி
இடம்: எம். சின்னசுவாமி மைதானம், பெங்களூரு.
நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்
மேலும் சில ஆட்டங்களில்
பாண்டியா இல்லை
கணுக்காலில் காயம் கண்டுள்ள இந்திய ஆல்-ரவுண்டா் ஹா்திக் பாண்டியா, அடுத்த 2 ஆட்டங்களிலும் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. கடந்த 19-ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின்போது கணுக்கால் பிந்து காயம் கண்ட அவா், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சை பெற்று வருகிறாா். முன்னதாக நியூஸிலாந்துடான ஆட்டத்தில் பாண்டியா இல்லாத நிலையில், இன்னும் காயத்திலிருந்து முழுமையாக குணமடைய வேண்டியிருப்பதால் அடுத்த இரு ஆட்டங்களிலும் அவா் விளையாட வாய்ப்பில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் கூறின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.