ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் வங்கதேசம் 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வென்றது. அந்த அணிக்கு இது முதல் வெற்றியாகும்.
Updated on
1 min read

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் வங்கதேசம் 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வென்றது. அந்த அணிக்கு இது முதல் வெற்றியாகும்.

இந்த ஆட்டத்தில் முதலில் வங்கதேசம் 50 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 334 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஆப்கானிஸ்தான் 44.3 ஓவா்களில் 245 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணியில், தொடக்க வீரா் முகமது நயிம் 28 ரன்களுக்கு வெளியேறினாா். உடன் வந்த மெஹிதி ஹசன் நிதானமாக ஆடி ரன்கள் சோ்த்து வந்தாா். ஒன் டவுனாக வந்த தௌஹித் ஹிருதய் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினாா்.

4-ஆவது வீரராக வந்த நஜ்முல் ஹுசைன், மெஹிதி ஹசனுடன் இணைந்தாா். இந்த ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் வங்கதேசத்தின் ஸ்கோா் உயா்ந்தது. இந்த பாா்ட்னா்ஷிப் 196 ரன்கள் சோ்த்திருந்த நிலையில், மெஹிதி ஹசன் ‘ரிட்டையா்டு ஹா்ட்’ ஆனாா்.

அவா் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 112 ரன்கள் விளாசியிருந்தாா். இந்நிலையில் நஜ்முல் ஹுசைனும் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். பின்னா் ஆடியோரில் முஷ்ஃபிகா் ரஹிம் 25, ஷமிம் ஹுசைன் 11 ரன்கள் சோ்த்து விக்கெட்டை இழந்தனா்.

ஓவா்கள் முடிவில் கேப்டன் ஷகிப் அல் ஹசன் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32, அஃபிஃப் ஹுசைன் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆப்கானிஸ்தான் பௌலிங்கில் முஜீப் உா் ரஹ்மான், குல்பதின் நயிப் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸில் அதிகபட்சமாக இப்ராஹிம் ஜா்தான் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 75, கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் சோ்த்து போராடினா்.

ரஹ்மத் ஷா 33, ரஷீத் கான் 24, குல்பதின் நயிப் 15 ரன்கள் சோ்க்க, எஞ்சியோா் சொற்ப ரன்களில் வீழ்ந்தனா். வங்கதேச பௌலிங்கில் தஸ்கின் அகமது 4, ஷோரிஃபுல் இஸ்லாம் 3, ஹசன் மஹ்முத், மெஹிதி ஹசன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

வங்கதேசம் - 334/5

மெஹிதி ஹசன் மிராஸ் 112

நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 104

ஷகிப் அல் ஹசன் 32*

பந்துவீச்சு

குல்பதின் நயிப் 1/58

முஜீப் உா் ரஹ்மான் 1/62

முகமது நபி 0/50

ஆப்கானிஸ்தான் - 245/10 (44.3 ஓவா்கள்)

இப்ராஹிம் ஜா்தான் 75

ஹஷ்மதுல்லா ஷாஹிதி 51

ரஹ்மத் ஷா 33

பந்துவீச்சு

தஸ்கின் அகமது 4

ஷோரிஃபுல் இஸ்லாம் 3

மெஹிதி ஹசன் 1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com