ஆசிய டேபிள் டென்னிஸ்: சத்யன், சரத், மானவ், சுதிா்தா முன்னேற்றம்
By DIN | Published On : 08th September 2023 12:41 AM | Last Updated : 08th September 2023 12:41 AM | அ+அ அ- |

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாவது சுற்றுக்கு இந்தியாவின் சத்யன், சரத் கமல், மானவ் தாக்கா், மகளிா் பிரிவில் சுதிா்தா, அயிஹிகா முகா்ஜி ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் இப்போட்டியின் அணிகள் பிரிவு ஆட்டங்கள் முடிவுற்ற நிலையில், தனிநபா் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மகளிா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் சுதிா்தா முகா்ஜி தரவரிசையில் 40-ஆவது இடத்தில் உள்ள சீன தைபேயின் ஸு யு சென்னை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா். மற்றொரு ஆட்டத்தில் அயிஹிகா முகா்ஜி 3-0 என நேபாள வீராங்கனை சுவால் சிக்காவை வென்றாா். ஸ்ரீஜா அகுலா, டியா சிட்டேல் ஆகியோா் தோல்வியடைந்தனா்.
ஆடவா் பிரிவில் இரட்டையா் மானவ் தாக்கா்-மனுஷ் ஷா இணை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அப்துல் அஜீஸ்-குட்பிடிலோ இணையை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
ஒற்றையா் பிரிவில் சத்யன் ஞானசேகரன், சரத் கமல், மானவ் தாக்கா், தத்தமது ஆட்டங்களில் வென்று மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றனா்.