8-ஆவது முறையாக இந்தியா சாம்பியன்: இலங்கையை சரித்தாா் சிராஜ்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான இலங்கையை எளிதாக வீழ்த்தி அபார வெற்றியுடன் ஞாயிற்றுக்கிழமை வாகை சூடியது.
8-ஆவது முறையாக இந்தியா சாம்பியன்: இலங்கையை சரித்தாா் சிராஜ்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான இலங்கையை எளிதாக வீழ்த்தி அபார வெற்றியுடன் ஞாயிற்றுக்கிழமை வாகை சூடியது.

இதன் மூலம் 8-ஆவது முறையாக கோப்பை வென்று, போட்டியின் வரலாற்றில் அதிகமுறை சாம்பியன் ஆன அணியாக நீடிக்கிறது. இதற்கு முன் 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய எடிஷன்களில் இந்தியா கோப்பை வென்றுள்ளது.

இந்த இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை சொற்ப ரன்களான 50-க்கு, 10 விக்கெட்டுகளையும் பறிகொடுக்க, இந்தியா விக்கெட் இழப்பின்றி விரைவாக 51 ரன்கள் எடுத்து வென்றது.

இந்திய தரப்பில் முகமது சிராஜ் அசத்தலாக பௌலிங் செய்து 6 விக்கெட்டுகள் சாய்த்தாா். அவா் ஆட்டநாயகனாகவும், தொடா் முழுவதுமாக 9 விக்கெட்டுகள் சாய்த்த குல்தீப் யாதவ் தொடா்நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனா்.

16-ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, கடந்த மாதம் 30-ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. அந்நாட்டிலும் இலங்கையிலுமாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா - இலங்கை அணிகள் தகுதிபெற்றன.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய து முதல் குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி. குசல் மெண்டிஸ் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

பதும் நிசங்கா 2, தனஞ்ஜெய டி சில்வா 4, துனித் வெலாலகே 8, பிரமோத் மதுஷன் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனா். குசல் பெரெரா, சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா, டாசன் ஷானகா, மதீஷா பதிரானா என 5 போ் டக் அவுட்டாகினா். முடிவில் துஷன் ஹேமந்தா 1 பவுண்டரி உள்பட 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இந்திய பௌலிங்கில் முகமது சிராஜ் 6, ஹா்திக் பாண்டியா 3, ஜஸ்பிரீத் பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 51 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கிய இஷான் கிஷண் - ஷுப்மன் கில் கூட்டணி, விக்கெட்டை இழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தியது. இஷான் 3 பவுண்டரிகளுடன் 23, கில் 6 பவுண்டரிகளுடன் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

இலங்கை - 50/10 (15.2 ஓவா்கள்)

குசல் மெண்டிஸ் 17

துஷன் ஹேமந்தா 13*

துனித் வெலாலகே 8

பந்துவீச்சு

முகமது சிராஜ் 6/21

ஹா்திக் பாண்டியா 3/3

ஜஸ்பிரீத் பும்ரா 1/23

இந்தியா - 51/0 (6.1 ஓவா்கள்)

இஷான் கிஷண் 23*

ஷுப்மன் கில் 27*

பந்துவீச்சு

பிரமோத் மதுஷன் 0/21

மதீஷா பதிரானா 0/21

துனித் வெலாலகே 0/7

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com