விடைபெறும் நட்சத்திரங்கள்...

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 19-ஆவது எடிஷன், சீனாவின் ஹாங்ஸூ நகரில் வரும் 23-ஆம் தேதி அதிகாரபூர்வமாக தொடங்குகிறது.
விடைபெறும் நட்சத்திரங்கள்...


ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 19-ஆவது எடிஷன், சீனாவின் ஹாங்ஸூ நகரில் வரும் 23-ஆம் தேதி அதிகாரபூர்வமாக தொடங்குகிறது. கடந்த ஆண்டு நடந்திருக்க வேண்டிய இந்தப் போட்டிகள், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஓராண்டு தாமதமாக நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளுக்காக வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உதவிப் பணியாளர்கள், அதிகாரிகள் என 655 பேர் கொண்ட குழுவை அனுப்புகிறது இந்தியா. அதில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக பலமுறை களம் கண்டவர்களும், நாட்டுக்கு பெருமை தேடித் தந்தவர்களும் அதிகம். அத்தகைய மூத்த போட்டியாளர்கள் பலருக்கு இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளே கடைசியாக இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த போட்டிகளுக்கு முன் அவர்கள் ஓய்வு பெறும் நிலையில் இருக்கின்றனர். அத்தகையோர் குறித்த ஒரு பார்வை... 

ரோஹன் போபண்ணா 

இந்திய டென்னிஸின் 43 வயது நட்சத்திரம். ஆனால் களத்தில் அவர் வயது தெரியாத வகையில் அட்டகாசமாக விளையாடுபவர். சர்வதேச களத்தில் ஆடவர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் பல பட்டங்களை குவித்திருக்கும் போபண்ணா, நடப்பு சீசன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில், விம்பிள்டனில் அரையிறுதி வரையும், யு.எஸ். ஓபனில் இறுதி வரையும் முன்னேற்றம் கண்டார். சமீபத்தில் தனது கடைசி டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் விளையாடி, 21 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் போட்டியிலிருந்து விடைபெற்றிருக்கும் அவருக்கு, இதுவே கடைசி ஆசிய விளையாட்டுப் போட்டிகளாக இருக்கலாம். கடந்த 2018 எடிஷனில் திவிஜ் சரணுடன் இணைந்து கோப்பை வென்றதால், இம்முறை நடப்பு சாம்பியனாக களம் காண்கிறார். போபண்ணா 2002-இல் இந்தப் போட்டியில் அறிமுகமாகியிருந்தார். 

சரத் கமல் 

டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமலுக்கு 41 வயது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கடந்த எடிஷனில் ஆடவர் அணிகள், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியிருக்கிறார். இந்த எடிஷன் அவரது 5-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளாகும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 7 தங்கம் உள்பட 13 பதக்கங்கள், ஆசிய சாம்பியன்ஷிப்பில் 3 வெண்கலப் பதக்கங்கள் என குறிப்பிடத்தக்க வீரராக இருக்கிறார். இந்த ஆண்டு இதுவரை அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. ஆனால் பிரதான போட்டிக் களம் என்று வரும்போது அவர் தன்னை மீட்டெடுக்க வாய்ப்புள்ளது. கடந்த முறை இப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் பதக்கத்துக்கான இந்தியாவின் 60 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது. இந்த முறை அதை அடுத்த கட்டத்துக்கு முன்னேற சத்தியன், ஹர்மீத் தேசாய் உள்ளிட்டோரோடு சரத் கமலும் தீவிரமாக முயற்சிப்பார். 

அங்கிதா ரெய்னா 

இந்திய டென்னிஸில் சானியா மிர்ஸாவுக்கு அடுத்தபடியாக குறிப்பிடத்தக்க வீராங்கனை என்றால், 30 வயது அங்கிதா ரெய்னா தான். ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் சானியாவுக்கு அடுத்தபடியாக ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர். கடந்த எடிஷனில் வெண்கலப் பதக்கம் வென்ற பெருமை பெற்றவர். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கடந்த 2016-இல் மகளிர் ஒற்றையர், கலப்பு இரட்டையரில் தங்கப் பதக்கங்கள் வென்றிருக்கிறார். சர்வதேச டென்னிஸ் களத்தில் பெரிதாக சோபிக்காவிட்டாலும், 2 டபிள்யூடிஏ பட்டங்கள் கைப்பற்றியிருக்கிறார். 
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையரில் விளையாடுவார் எனத் தெரிகிறது. இவருக்கும் இது கடைசி ஆசிய விளையாட்டுப் போட்டிகளாக இருக்கும் எனத் தெரிகிறது. 

பி.ஆர்.ஸ்ரீஜேஷ் 

சர்வதேச ஹாக்கி களத்தில் இந்தியாவுக்கான கோல் கீப்பராக தடுப்பரண் போல் செயல்பட்டுவரும் ஸ்ரீஜேஷுக்கு வயது 35. ஒரு நேரத்தில் தாம் ஒரு போட்டியில் பங்கேற்பது குறித்து மட்டுமே சிந்திப்பதாக கூறியிருக்கும் ஸ்ரீஜேஷ், தனது ஹாக்கி கேரியரின் இறுதிக்கட்டத்தில் இருப்பதை உணர்த்தி வருகிறார். அந்த வகையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவே அவரது கடைசி பங்களிப்பாக இருக்கும். எனவே, இந்தப் போட்டியில் இந்தியா தங்கம் வென்று பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெறுவதற்கு அணியினருடன் இணைந்து எல்லா விதமான முயற்சிகளையும் அவர் மேற்கொள்வார் என்பதில் சந்தேகம் இல்லை. 2006-இல் இந்திய அணியில் அறிமுகமான ஸ்ரீஜேஷ், 301 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெண்கலம் வென்றதில் முக்கியப் பங்காற்றியவர். கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது. 

தீபிகா பலிக்கல் 

2 குழந்தைகளுக்கு தாயாகியிருக்கும் தீபிகா, இந்திய ஸ்குவாஷ் நட்சத்திரம். இது அவரின் 4-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளாக இருக்கும் நிலையில், இதுவே கடைசி ஆசிய போட்டியாகவும் இருக்க வாய்ப்புள்ளது. 32 வயதான தீபிகா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் 2, அணிகள் பிரிவில் 2 என 4 பதக்கங்கள் வென்றுள்ளார். அது தவிர, உலக டபுள்ஸ் சாம்பியன்ஷிப்பில் 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்களும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்களும் தன் வசம் கொண்டிருக்கிறார். ஆசிய தனிநபர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பெற்றிருக்கிறார். இது கடைசி ஆசிய விளையாட்டுப் போட்டிகளாக இருக்கலாம் என்பதால், அதை தங்கத்துடன் நிறைவு செய்யும் முனைப்புடன் இருப்பார் தீபிகா. 

பஜ்ரங் புனியா

இந்தியாவின் குறிப்பிடத்தக்க மல்யுத்தப் போட்டியாளர். 30 வயதை நெருங்கியிருக்கும் பஜ்ரங் புனியா, நடப்பு சாம்பியனாக இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறார். ஜகார்த்தாவில் நடைபெற்ற கடந்த எடிஷனில் 65 கிலோ எடைப் பிரிவில் அவர் தங்கப் பதக்கம் வென்றார். அதற்கு முன் 2014 எடிஷனில் வெள்ளி வென்றிருக்கிறார். இதுதவிர டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வென்ற வெண்கலப் பதக்கமும் அவரது பட்டியலில் அடக்கம். 
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீதான பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மல்யுத்தப் போட்டியாளர்களின் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர். அதன் பிறகு அவர் பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குள்ளாக அவர் 34 வயதை எட்டுவதால் இதுவே அவரது கடைசி ஆசிய விளையாட்டுப் போட்டியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சீமா புனியா

40 வயது வட்டு எறிதல் வீராங்கனையான சீமா புனியா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2014-இல் தங்கமும், கடந்த எடிஷனில் வெண்கலமும் வென்றிருக்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 2006, 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் வெள்ளியும், 2010-இல் வெண்கலமும் கைப்பற்றி இந்தியாவின் குறிப்பிடத்தக்க வட்டு எறிதல் வீராங்கனையாக இருக்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து 4 முறை பதக்கம் வென்ற அவரால், கடந்த எடிஷனில் பதக்கம் வெல்ல முடியாமல் போனது. 40 வயதாகியிருக்கும் சீமா, இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று, தனது வட்டு எறிதல் வரலாற்றை நிறைவு செய்துகொள்ளும் முனைப்பில் இருப்பதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com