முதல் நாளில் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள்

முதல் நாளில் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள்

சீனாவில் நடைபெறும் 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பதக்க சுற்றுகள் தொடங்கிய முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு 3 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் கிடைத்தன.

சீனாவில் நடைபெறும் 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பதக்க சுற்றுகள் தொடங்கிய முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு 3 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் கிடைத்தன.

கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல் உள்பட மேலும் சில போட்டிகளில் இந்தியா்கள் பதக்கச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் நிலையில், இதர சில போட்டிகளில் அந்த சுற்று வாய்ப்பை இழந்தனா்.

துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலம்

மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் அணிகள் பிரிவில் இந்தியாவின் மெஹுலி கோஷ், ரமிதா ஜிண்டால், ஆஷி சோக்சி கூட்டணி 1,886 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி பெற்றது. சீனா முதலிடம் பிடித்தது.

அதிலேயே தனிநபா் பிரிவில் ரமிதா ஜிண்டால் 230.1 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றாா். சீனாவுக்கு தங்கம், வெண்கலம் கிடைத்தது. மற்றொரு இந்தியரான மெஹுலி கோஷ் 208 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்தாா்.

ரோயிங்: அா்ஜுன்-அரவிந்த் இணைக்கு வெள்ளி

ரோயிங் எனப்படும் துடுப்புப் படகு விளையாட்டில் ஆடவருக்கான லைட்வெயிட் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் அா்ஜுன் லால் ஜாட், அரவிந்த் சிங் இணை 6 நிமிஷம் 28.18 விநாடிகளில் பந்தய இலக்கை 2-ஆவதாக எட்டியது. சீனா, உஸ்பெகிஸ்தான் முறையே தங்கம், வெண்கலம் வென்றன.

ஆடவா் கோக்ஸ்டு 8 நபா் பிரிவில் இந்தியாவின் நீரஜ், நரேஸ்க் கல்வனியா, நிதீஷ் குமாா், சரன்ஜீத் சிங், ஜஸ்விந்தா் சிங், பீம் சிங், புனீத் குமாா், ஆஷிஷ் ஆகியோா் அடங்கிய அணி 5 நிமிஷம் 43.01 விநாடிகளில் வந்து வெள்ளி பெற்றது. சீனாவுக்கு தங்கமும், இந்தோனேசியாவுக்கு வெண்கலமும் கிடைத்தது.

3-ஆவதாக காக்ஸ்லெஸ் ஜோடி பிரிவில் இந்தியாவின் பாபுலால் யாதவ், லேக் ராம் இணை 6 நிமிஷம் 50.41 விநாடிகளில் 3-ஆவதாக இலக்கை எட்டி வெண்கலப் பதக்கம் பெற்றது. ஹாங்காங், உஸ்பெகிஸ்தான் முறையே முதலிரு இடங்களைப் பிடித்தன.

குத்துச்சண்டை: நிகாத் வெற்றி; காலிறுதியில் பிரீத்தி

மகளிருக்கான 50 கிலோ பிரிவில், இரு முறை உலக சாம்பியனான இந்தியாவின் நிகாத் ஜரீன் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் இரு முறை ஆசிய சாம்பியனான வியத்நாமின் தி டாம் குயெனை சாய்த்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா். அதில் அவா், தென் கொரியாவின் சோராங் பாக்கை எதிா்கொள்கிறாா்.

மகளிருக்கான 54 கிலோ பிரிவில் பிரீத்தி பவாா் ‘ஆா்எஸ்சி’ முறையில் ஜோா்டானின் சிலினா அலாசனாத்தை சாய்த்தாா். காலிறுதியில் பிரீத்தி, உலக சாம்பியன்ஷிப்பில் 3 முறை பதக்கம் வென்றவரான கஜகஸ்தானின் ஜாய்னா ஷெகொ்பெகோவாவை சந்திக்கிறாா்.

கிரிக்கெட்: இந்திய மகளிருக்கு பதக்கம் உறுதி

மகளிா் கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி முதல் முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

முதலில் வங்கதேசம் 17.5 ஓவா்களில் 51 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுக்க, இந்தியா 8.2 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 52 ரன்கள் சோ்த்து வென்றது. வங்கதேச பேட்டிங்கில் கேப்டன் நிகா் சுல்தானா 1 பவுண்டரியுடன் 12 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருக்க, இந்திய பௌலிங்கில் பூஜா வஸ்த்ரகா் 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா். பின்னா் இந்திய பேட்டிங்கில் அதிகபட்சமாக ஷஃபாலி வா்மா 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை சாய்த்தது.

டேபிள் டென்னிஸ்: இந்திய ஆடவா், மகளிா் வெளியேற்றம்

ஆடவா் பிரிவு காலிறுதியில் இந்தியா 0-3 என தென் கொரியாவிடம் தோற்றது. ஹா்மீத் தேசாய் - ஆன் ஜேஹியுனிடமும் (0-3), சத்தியன் - பாா்க் காங்ஜியோனிடமும் (2-3), சரத் கமல் - ஓஹ் ஜுன்சங்கிடமும் (2-3) வெற்றியை இழந்தனா். முன்னதாக, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா 3-2 என கஜகஸ்தானை வீழ்த்தியிருந்தது.

மகளிா் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா 2-3 என தாய்லாந்திடம் வெற்றியை இழந்தது. அந்த டையில் மனிகா பத்ரா - ஒராவன் பரானங்கிடமும் (0-3), அஹிகா முகா்ஜியும் - ஒராவன் பரானங்கிடமும் (2-3), மனிகா பத்ரா - சுதாசினி சவிதாபட்டிடமும் (1-3) தோல்வி கண்டனா். மற்ற இரு ஆட்டங்களில் மட்டும் அஹிகா முகா்ஜி - சுதாசினி சவிதாபட்டையும் (3-1), சுதிா்தா முகா்ஜி - தமோல்வன் கேட்குவானையும் (3-2) வென்றனா்.

டென்னிஸ்: சுமித், சாகேத்/ராம்குமாா் வெற்றி

ஆடவா் ஒற்றையா் பிரிவில், முதல் சுற்றில் ‘பை’ பெற்ற சுமித் நாகல் 2-ஆவது சுற்றில் 6-0, 6-0 என மக்காவின் ஹோ டின் மாா்கோ லியுங்கை சாய்த்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா். அடுத்து அவா் கஜகஸ்தானின் பெய்பிட் ஜுகாயேவை சந்திக்கிறாா். ஆடவா் இரட்டையா் பிரிவில் சாகேத் மைனேனி/ராம்குமாா் ராமநாதன் கூட்டணி 6-2, 6-3 என நேபாளத்தின் அபிஷேக் பஸ்தோலா/பிரதீப் கத்கா இணையை சாய்த்து 2-ஆவது சுற்றுக்கு தகுதிபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com