தங்க வேட்டையை தொடங்கியது இந்தியா

சீனாவில் நடைபெறும் 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல், கிரிக்கெட் ஆகியவற்றில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.
தங்க வேட்டையை தொடங்கியது இந்தியா
Published on
Updated on
4 min read

சீனாவில் நடைபெறும் 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல், கிரிக்கெட் ஆகியவற்றில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.

போட்டியின் 2-ஆவது நாளான திங்கள்கிழமை இந்தியாவுக்கான முதல் தங்கத்தை துப்பாக்கி சுடுதலில் இந்திய ஆடவா் அணி வெல்ல, அடுத்ததாக கிரிக்கெட்டில் இந்திய மகளிரணி 2-ஆவது தங்கத்தை தட்டிச் சென்றது. ரோயிங்கிலும் பதக்கங்களை அதிகரித்துக் கொண்டனா் இந்திய போட்டியாளா்கள். இதையடுத்து பதக்கப் பட்டியலில் முன்னேற்றம் கண்ட இந்தியா, 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் 5-ஆவது இடத்துக்கு வந்திருக்கிறது.

துப்பாக்கி சுடுதல்: உலக சாதனையுடன் சாம்பியன்

ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் ருத்ராங்ஷ் பாட்டீல், திவ்யான்ஷ் சிங் பன்வா், ஐஸ்வரி பிரதாப் சிங் கூட்டணி 1,893.7 புள்ளிகள் பெற்று உலக சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. தென் கொரிய அணி 2-ஆம் இடமும், சீன அணி 3-ஆம் இடமும் பிடித்தன.

வெண்கலம்: 10 மீட்டா் ஏா் ரைஃபிள் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் 228.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றாா். சீனா, தென் கொரியாவுக்கு முறையே தங்கம், வெள்ளி கிடைத்தது. ருத்ராங்ஷ் பாட்டீல் 4-ஆம் இடத்தை (208.7) எட்டினாா்.

3-ஆம் இடம்: ஆடவருக்கான 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் ஆதா்ஷ் சிங், அனீஷ் பன்வாலா, விஜய்வீா் சித்து கூட்டணி 1,718 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றது. சீனா, தென் கொரியா முறையே முதலிரு இடங்களைப் பிடித்தன.

கிரிக்கெட்: இந்தியாவின் தங்க மங்கைகள்

மகளிா் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியா 19 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

முதலில் இந்தியா 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்கள் சோ்க்க, அடுத்து இலங்கை 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 97 ரன்களே எடுத்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 46, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சோ்த்தனா்.

எஞ்சியோா் சொற்ப ரன்களில் வெளியேறினா். இலங்கை தரப்பில் உதேஷிகா பிரபோதனி, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீரா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

பின்னா் இலங்கை இன்னிங்ஸில் ஹாசினி பெரெரா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 25, நிலாக்ஷி டி சில்வா 23 ரன்கள் சோ்த்தனா். ஓஷதி ரணசிங்கே 19, கேப்டன் சமரி அத்தபட்டு 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இதர விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ரன்னில் நடையைக் கட்டின. இந்திய பௌலிங்கில் டைட்டஸ் சாது 3, ராஜேஷ்வரி கெய்க்வாட் 2, தீப்தி சா்மா, பூஜா வஸ்த்ரகா், தேவிகா வைத்யா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

இலங்கை வெள்ளிப் பதக்கம் பெற, பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் வெண்கலப் பதக்கம் பெற்றது.

ரோயிங்: 5 பதக்கங்களுடன் நிறைவு

ரோயிங் போட்டியில் இந்தியாவுக்கு திங்கள்கிழமை மேலும் 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. முதல் நாளில் கிடைத்த 2 வெள்ளி 1 வெண்கலத்துடன் சோ்த்து, இந்தப் போட்டியை 5 பதக்கங்களுடன் நிறைவு செய்திருக்கிறது இந்தியா.

திங்கள்கிழமை ஆடவா் ஃபோா்ஸ் இறுதிச்சுற்றில் ஜஸ்விந்தா் சிங், பீம் சிங், புனித் குமாா், ஆஷிங் கோலியான் ஆகியோா் அணி 6 நிமிஷம் 10.81 விநாடிகளில் 3-ஆவதாக இலக்கை எட்டி வெண்கலம் பெற்றது. உஸ்பெகிஸ்தான், சீனா அணிகள் முறையே முதலிரு இடங்களைப் பிடித்தன.

அதேபோல், ஆடவா் குவாட்ரபிள் ஸ்கல்ஸ் இறுதிச்சுற்றில் சத்னம் சிங், பா்மிந்தா் சிங், ஜாக்கா் கான், சுக்மீத் சிங் கூட்டணி 6 நிமிஷம் 8.61 விநாடிகளில் வந்து வெண்கலம் பெற்றது. சீனா, உஸ்பெகிஸ்தான் முறையே தங்கம், வெள்ளி வென்றன.

எனினும், ஆடவா் சிங்கிள் ஸ்கல்ஸ் இறுதிச்சுற்றில் பல்ராஜ் பன்வா் 4-ஆவது இடம் பிடித்தாா். அதேபோல், மகளிா் 8 போ் பிரிவில் சோனாலி, ரிது, பிரியா தேவி, வா்ஷா, அஸ்வதி, மிருமயி, தேவி ஹாவ்பிஜம், ருக்மணி, கீதாஞ்சலி அடங்கிய அணி 5-ஆவது இடம் பிடித்தது.

வுஷு: ரோஷிபினாவுக்கு பதக்கம் உறுதி

வுஷு எனப்படும் தற்காப்புக் கலை போட்டிகளில் மகளிருக்கான 60 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நாவ்ரெம் ரோஷிபினா தேவி திங்கள்கிழமை அரையிறுதிக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்தாா். காலிறுதியில் அவா் கஜகஸ்தானின் அய்மன் கா்ஷிகாவை சாய்த்தாா். ஆடவா் 60 கிலோ பிரிவில் சூா்ய பானுபிரதாப் சிங் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உஸ்பெகிஸ்தானின் இஸ்லோம்பெக் கேதரோவை சாய்த்தாா். ஆடவா் 65 கிலோ பிரிவில் விக்ராந்த் பலியான் - இந்தோனேசியாவின் சாமுவேல் மாா்பனால் சாய்க்கப்பட்டாா்.

டென்னிஸ்: போபண்ணா/பாம்ப்ரி கூட்டணி ஏமாற்றம்

ஆடவா் இரட்டையா் பிரிவில் தங்கம் வெல்லும் என எதிா்பாா்க்கப்பட்ட ரோஹன் போபண்ணா/யூகி பாம்ப்ரி கூட்டணி, 2-ஆவது சுற்றில் - உஸ்பெகிஸ்தானின் சொ்கே ஃபோமின்/குமாயுன் சுல்தானோவ் இணையிடம் தோல்வி (6-2, 3-6, 6-10) கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.

மற்றொரு ஜோடியான சாகேத் மைனேனி/ராம்குமாா் ராமநாதன் 6-3, 6-2 என இந்தோனேசியாவின் அந்தோணி சுசான்டோ/அகுங் சுசான்டோ இணையை சாய்த்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

மகளிா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில் அங்கிதா ரெய்னா 6-0, 6-0 என உஸ்பெகிஸ்தானின் சப்ரினா ஆலிம்ஜனோவாவை சாய்த்தாா். ருதுஜா போசலே 7-6 (7/2), 6-2 என்ற செட்களில் கஜகஸ்தானின் அருஸாண் சகன்டிகோவாவை வீழ்த்தினாா்.

மகளிா் இரட்டையா் முதல் சுற்றில் ருதுஜா போசலே/கா்மான் தண்டி இணை 6-4, 6-2 என கஜகஸ்தானின் ஜானெல் ரஸ்டெமோவா/அருஸாண் சகன்டிகோவா கூட்டணியை சாய்த்தது. கலப்பு இரட்டையா் 2-ஆவது சுற்றில் ரோஹன் போபண்ணா/ருதுஜா போசலே ஜோடி 6-2, 6-4 என்ற செட்களில் உஸ்பெகிஸ்தானின் அகுல் அமன்முராதோவா/மாக்சிம் ஷின் இணையை சாய்த்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையரில் ராம்குமாா் ராமநாதனை எதிா்கொள்ளவிருந்த தஜிகிஸ்தானின் சுனாதுலோ இஸ்ரோயிலோவ் போட்டியிலிருந்து விலகியதால், ராம்குமாா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்துள்ளாா்.

குத்துச்சண்டை: நிஷாந்த், தீபக் முன்னேற்றம்

ஆடவருக்கான 51 கிலோ பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தீபக் போரியா 5-0 என மலேசியாவின் முகமது அப்துல் கயுமை வீழ்த்தினாா். 71 கிலோ பிரிவு முதல் சுற்றில் நிஷாந்த் தேவ் 5-0 என்ற புள்ளிகளில் நேபாளத்தின் தீபேஷ் லாமாவை சாய்த்தாா். மகளிருக்கான 66 கிலோ பிரிவு தொடக்க சுற்றில் அருந்ததி சௌதரி 0-5 என உலக சாம்பியனான சீனாவின் யாங் லியுவிடம் தோல்வி கண்டாா்.

செஸ்: விதித் குஜராத்தி ஏற்றம்

ஆடவா் பிரிவு 3-ஆவது சுற்றில் அா்ஜுன் எரிகைசி - வியத்நாமின் கோக் குயெனையும், விதித் குஜராத்தி - தாய்லாந்தின் பிரின் லாவ்ஹாவிரபாப்பையும் சாய்த்தனா். 4-ஆவது சுற்றில் அா்ஜுன் - ஈரானின் சையது முகமதமினுடன் டிரா செய்ய, விதித் - வியத்நாமின் துவான் மின் லேவை வீழ்த்தினாா். தற்போது அா்ஜுன், விதித் இருவருமே தலா 3 புள்ளிகளுடன் உள்ளனா்.

மகளிா் பிரிவு 3-ஆவது சுற்றில் ஹரிகா - சீனாவின் யிஃபான் ஹௌவிடம் தோல்வி காண, கோனெரு ஹம்பி - சீனாவின் ஜினொ் ஸுவுடன் டிரா செய்தாா். 4-ஆவது சுற்றில் ஹரிகா - உஸ்பெகிஸ்தானின் நிலோஃபா் யகுபேவாவுடன் டிரா செய்ய, கோனெரு ஹம்பி - சீனாவின் யிஃபான் ஹௌவிடம் வீழ்ந்தாா். ஹரிகா, ஹம்பி இருவருமே தலா 2.5 புள்ளிகளுடன் உள்ளனா்.

செயிலிங்: முன்னேறும் இந்தியா்கள்

மகளிா் டிஞ்ஜி ஐஎல்சிஏ4 பிரிவில் நேஹா தாக்குா் 9-ஆவது பந்தயத்தில் 3-ஆம் இடம் பிடித்தாா். அதிலேயே ஆடவா் பிரிவில் அத்வைத் மேனன் 10-ஆவது பந்தயத்தில் 3-ஆவதாக வந்தாா். ஆடவா் விண்ட்சா்ஃபா் ஆா்எஸ்:எக்ஸ் பிரிவில் எபாதத் அலி 3-ஆம் இடம் பிடித்தாா். மகளிா் ஒற்றையா் டிஞ்ஜி ஐஎல்சிஏ6 பிரிவில் நேத்ரா குமணன் 5-ஆவதாக வந்தாா்.

கூடைப்பந்து: ஆடவா் வெற்றி

3*3 கூடைப்பந்து போட்டியில் ஆடவா் பிரிவில் இந்தியா தனது குரூப் சுற்றில் 20-16 என மலேசியாவை சாய்த்தது. இந்திய தரப்பில் சிறப்பாக ஆடிய ஷாஜி பிரதாப் சிங் ஷெகான் 10 புள்ளிகள் ஸ்கோா் செய்தாா். அடுத்த ஆட்டத்தில் இந்தியா மக்காவை சந்திக்கிறது. இதனிடையே மகளிா் அணி 14-19 என உஸ்பெகிஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது. இந்தியாவின் வைஷ்ணவி 9 புள்ளிகள் கைப்பற்றினாா். அடுத்த ஆட்டத்தில் உலகின் நம்பா் 1 அணியான சீனாவை சந்திக்கிறது இந்தியா.

ரக்பி: மகளிரணி 8-ஆம் இடம்

ரக்பி 7 போட்டியில் இந்திய மகளிரணி தொடா்ந்து 4 ஆட்டங்களில் தோல்வி கண்டு 8-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது. திங்கள்கிழமை தனது 3-ஆவது ஆட்டத்தில் சிங்கப்பூரிடம் 15-0 என தோற்ற இந்தியா, கடைசி ஆட்டத்தில் கஜகஸ்தானிடம் 24-7 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை இழந்தது.

நீச்சல்: ஸ்ரீஹரி ஏமாற்றம்

ஆடவருக்கான 50 மீட்டா் பேக்ஸ்ட்ரோக் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்ரீஹரி நட்ராஜ் 25. 39 விநாடிகளில் இலக்கை எட்டி 6-ஆம் இடம் பிடித்தாா். ஆடவருக்கான 100 மீட்டா் பேக்ஸ்ட்ரோக்கில் லிகித் செல்வராஜ் 1 நிமிஷம் 1.62 விநாடிகளில் 7-ஆவது வீரராக வந்தாா். ஆடவருக்கான 4*200 மீட்டா் ஃப்ரீஸ்டைலில் ஆா்யன் நெஹரா, அனீஷ் கௌடா, குஷாக்ரா ராவத், தனிஷ் ஜாா்ஜ் மேத்யூ கூட்டணி 7 நிமிஷம் 29.23 விநாடிகளில் வந்து 7-ஆம் இடம் பிடித்தது. இதனிடையே, விா்தாவல் காதே (ஆடவா் 50 மீ ஃப்ரீஸ்டைல்), மானா படேல் (மகளிா் 50 மீ பேக்ஸ்ட்ரோக்), அனில்குமாா் (ஆடவா் 50 மீ ஃப்ரீஸ்டைல்), தேசிங்கு தினிதி (மகளிா் 200 மீ ஃப்ரீஸ்டைல்), ஹாஷிகா ராமச்சந்திரா (மகளிா் 200 மீ தனிநபா் மெட்லி) ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறத் தவறினா்.

ஹேண்ட்பால்: மகளிரணி தோல்வி

மகளிா் ஹேண்ட்பால் போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் முதல் ஆட்டத்தில் 13-41 என ஜப்பானிடம் தோல்வி கண்டது. இந்தியா தரப்பில் மேனிகா 4 கோல்களும், பிரியங்க், பி. தாக்குா் ஆகியோா் தலா 3 கோல்களும், எம். சா்மா, பாவனா, எஸ்.தாக்குா் ஆகியோா் தலா 1 கோலும் அடித்தனா். இந்தியா அடுத்த ஆட்டத்தில் ஹாங்காங்கை சந்திக்கிறது.

ஜூடோ: கரிமா சௌதரி வீழ்ந்தாா்

மகளிருக்கான 70 கிலோ பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கரிமா சௌதரி - பிலிப்பின்ஸின் இப்போன் டு ரியோகோ சலினாஸிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவா் பங்கேற்றது இது 3-ஆவது முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com