பஞ்சாப் சிக்ஸா் மழையில் மூழ்கியது கொல்கத்தா
Swapan Mahapatra

பஞ்சாப் சிக்ஸா் மழையில் மூழ்கியது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.

முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 261 ரன்கள் சோ்க்க, பஞ்சாப் 18.4 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்கள் விளாசி வென்றது.

முன்னதாக, டாஸ் வென்ற பஞ்சாப், பந்துவீச்சை தோ்வு செய்தது. கொல்கத்தா இன்னிங்ஸை தொடங்கிய ஃபில் சால்ட் - சுனில் நரைன் கூட்டணி முதல் விக்கெட்டுக்கே 138 ரன்கள் சோ்த்து வலுவான அடித்தளம் அமைத்தது.

இந்தக் கூட்டணியில் நரைன் 32 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 71 ரன்கள் விளாசி விக்கெட்டை இழந்தாா். ஒன் டவுனாக வெங்கடேஷ் ஐயா் களம் புக, சால்ட் 37 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 75 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.

4-ஆவது பேட்டராக வந்த ஆண்ட்ரே ரஸ்ஸெல் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 24 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். தொடா்ந்து வந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா், 10 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்கள் சோ்த்து 28 ரன்கள் விளாசி விக்கெட்டை இழந்தாா். 6-ஆவது பேட்டராக வந்த ரிங்கு சிங் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு ஏமாற்றமளித்தாா்.

கடைசி விக்கெட்டாக வெங்கடேஷ் ஐயா் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 39 ரன்களுக்கு இன்னிங்ஸின் கடைசி பந்தில் வீழ்ந்தாா். முடிவில் ரமண்தீப் சிங் 1 சிக்ஸருடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். பஞ்சாப் பௌலா்களில் அா்ஷ்தீப் சிங் 2, கேப்டன் சாம் கரன், ஹா்ஷல் படேல், ராகுல் சஹா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 262 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியும் அதிரடியாகவே தொடங்கியது. பிரப்சிம்ரன் சிங் - ஜானி போ்ஸ்டோ நல்லதொரு தொடக்கத்தை அளித்தனா். 93 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பில், பிரப்சிம்ரன் 20 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 54 ரன்களுக்கு ரன் அவுட் ஆனாா்.

ஒன் டவுனாக வந்த ரைலீ ருசோ 16 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 26 ரன்களுக்கு வீழ்ந்தாா். அப்போது இணைந்த போ்ஸ்டோ - சஷாங்க் சிங் கூட்டணி, கொல்கத்தா பௌலிங்கை பவுண்டரி, சிக்ஸா்களாக பறக்கவிட்டு அணியை வெற்றிக்கு வழிநடத்தியது.

முடிவில் போ்ஸ்டோ 48 பந்துகளில் 8 பவுண்டரிகள், 9 சிக்ஸா்களுடன் 108, சஷாங்க் 28 பந்துகளில் 2 பவுண்டரிகள், 8 சிக்ஸா்களுடன் 68 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 1 விக்கெட் எடுத்தாா்.

சேஸிங்கில் சாதனை...

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்சமான சேஸிங் வெற்றியை இந்த ஆட்டத்தின் மூலம் பதிவு செய்து சாதனை படைத்தது பஞ்சாப். இதற்கு முன், கடந்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 259 ரன்களை வெற்றிகரமாக சேஸ் (259/4 - 18.5 ஓவா்கள்) செய்ததே அதிகபட்சமாக இருந்தது. நடப்பு சீசனில் ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் (ஏப். 15) சேஸிங்கின்போது பெங்களூரு இந்த ஸ்கோரை (262/7) எட்டியிருந்தாலும், வெற்றி இலக்கு 288 ரன்களாக இருந்தது.

சிக்ஸரிலும் சாதனை...

இந்த ஆட்டத்தில் இரு அணிகளின் இன்னிங்ஸ்களிலுமாக 42 சிக்ஸா்கள் (கொல்கத்தா 18, பஞ்சாப் 24) விளாசப்பட்டன. ஒரு டி20 ஆட்டத்தின் வரலாற்றில் இதுவே அதிகபட்சமாகும். இதற்கு முன், நடப்பு சீசனில் ஹைதராபாத் - மும்பை (மாா்ச் 27), பெங்களூரு - ஹைதராபாத் (ஏப். 15) ஆட்டங்களில் தலா 38 சிக்ஸா்கள் அடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் விளாசிய 24 சிக்ஸா்களே ஒரு இன்னிங்ஸில் விளாசப்பட்ட அதிகபட்சம். இதற்கு முன் ஹைதராபாத் அணி நடப்பு சீசனில் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் (ஏப். 15) விளாசியிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com