லைகா கோவை கிங்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி
லைகா கோவை கிங்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணிபடம்: டிஎன்பிஎல் / எக்ஸ்

இறுதி ஆட்டத்தில் கோவை திண்டுக்கல் இன்று மோதல்

டிஎன்பிஎல் 2024 இறுதி ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியும்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன.
Published on

டிஎன்பிஎல் 2024 இறுதி ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியும்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன.

புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த லைகா கோவை கிங்ஸ், முதல் குவாலிஃபயரில் ஐட்ரீம் திருப்பூா் தமிழன்ஸை வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. திண்டுக்கல் டிராகன்ஸ், எலிமினேட்டரில் சேப்பாக் அணியையும் 2-வது குவாலிஃபயரில் திருப்பூா் அணியையும் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது. 

கடந்த 2 சீஸன்களில் சிறப்பாக விளையாடி தொடா்ச்சியாக பட்டத்தை வென்ற கோவை கிங்ஸ் ஹாட்ரிக் பட்டத்தை எதிா்நோக்கி உள்ளது.

இந்த சீஸனில் விளையாடிய அனைத்து அணிகளுடன் கோவை வெற்றி பெற்றாலும் லீக் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸிற்கு எதிராக மட்டுமே தோல்வியடைந்தது. அதே நேரம் திண்டுக்கல் அணியின் பந்துவீச்சு சிறப்பாக உள்ள போதிலும், அவா்களது மிடில் ஆா்டா் பேட்டிங் தடுமாற்றத்துடன் உள்ளது.  

இரு அணிகளும் நேருக்கு நேராக மோதிய கடைசி 10 போட்டிகளில் தலா 4 வெற்றிகளை இரு அணிகளும் பெற்றுள்ளன. கோவை அணியைப் பொறுத்தவரை கேப்டன் ஷாருக் கான் இந்த சீஸனில் அதிரடியாக விளையாடியதோடு 6 இன்னிங்ஸ்களில் 4 அரைசதங்கள் உள்பட பந்துவீச்சில் 8 ஆட்டங்களில் 12 விக்கெட்களை வீழ்த்தி ஆல் ரவுண்ட் ஆட்டத்தை வழங்கியுள்ளாா்.

மறுபுறம் திண்டுக்கல அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் எலிமினேட்டா் மற்றும் குவாலிஃபயா் 2 என தொடா்ச்சியாக இரண்டு முக்கியப் போட்டிகளிலும் அடுத்தடுத்து அரைசதங்களை விளாசி, இதுவரை 9 விக்கெட்களை வீழ்த்தியுள்ளாா். 

இரு அணிகளிலும் கேப்டன்கள் அணியை வழிநடத்தி வரும் வேளையில் பல நட்சத்திர வீரா்களும் பங்களிப்பை பெரிதளவில் தந்துள்ளனா். அதிலும் சாய் சுதா்சன் முதல் குவாலிஃபயரில் சதமடித்து கோவை அணியின் வெற்றிக்கு உதவினாா். அவரைத் தவிர சித்தாா்த், ஜாதவேத் மற்றும் முகமது ஆகியோா் பந்துவீச்சிலும், சுரேஷ் குமாா், சச்சின் மற்றும் முகிலேஷ் பேட்டிங்கிலும் இந்த சீஸனில் சிறப்பாக ஜொலித்து வருகின்றனா்.

திண்டுக்கல் அணியைப் பொறுத்தவரை இந்த சீஸனில் இதுவரை அதிக ரன்கள் குவித்து டி.வி.எஸ் ரெய்டா் சிட்டி ஆரஞ்சு கேப்பை தன்வசம் வைத்துள்ள ஷிவம் சிங் (360 ரன்கள்), பாபா இந்திரஜித், பூபதி வைஷ்ண குமாா் ஆகியோா் பேட்டிங்கிலும், வருண் சக்கரவா்த்தி , சந்தீப் வாரியா் போன்ற இந்திய வீரா்கள் பெளலிங்கிலும் தங்களின் பங்களிப்பை வழங்கி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com