ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீராங்கனைகளில் மூவரை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு அந்த மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதினை ஐசிசி வழங்கி வருகிறது. அந்த வகையில், ஜூலை மாதத்தின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்களை ஐசிசி அறிவித்துள்ளது.
ஜூலை மாதத்துக்கான சிறந்த வீராங்கனைகளுக்கான போட்டியில் இலங்கை அணியின் சமரி அத்தப்பத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சமரி அத்தபத்து (இலங்கை)
இலங்கை வீராங்கனையான சமரி அத்தபத்து, ஜூலை மாதம் நடந்த ஆசிய மகளிர் கோப்பையில் 7 முறை சாம்பியனான இந்தியாவை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத்தந்தார்.
கடந்த 12 மாதங்களில் அவரது தலைமையின்கீழ் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டிகளில் தொடர் வெற்றிகள் பெற்றது. 2024 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான தகுதியைப் பெறுவது உள்பட பல மைல்கற்களை பெற்றதும் இவரது சாதனைகளாகும்.
பல வருடங்களாக இலங்கை அணி பேட்டிங் முதுகெலும்பாக விளங்கிவரும் சமரி அத்தபத்து ஆசியக்கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெறும் 12 ரன்களை மட்டுமே எடுத்தார். ஆனால், மலேசியாவுக்கு எதிராக 119* ரன்கள் அடித்து அசத்தினார். லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தாய்லாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 49* ரன்கள் எடுத்தது, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் முறையே பாகிஸ்தான் (63), இந்தியா (61) ஆகியோருக்கு எதிராக தொடர்ச்சியாக அரைசதங்கள் அடித்ததும் அடங்கும்.
ஐசிசியின் மகளிர் வீராங்கனைக்கான விருதை ஏற்கனவே இரண்டு முறை வென்றுள்ள அத்தபத்து இப்போது மூன்றாவது முறையாக விருது வெல்லும் முனைப்பில் உள்ளார்.
ஸ்மிருதி மந்தனா (இந்தியா)
ஸ்மிருதி மந்தனா 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கான விருதை வென்ற பிறகு, ஜூலை மாதத்தின் சிறந்த வீராங்கனை விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்டில் 149 ரன்கள் எடுத்தார். ஷஃபாலி வர்மாவுடன் சேர்ந்து, முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்து அசத்தினார். இது பெண்கள் டெஸ்டில் முதல் விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஸ்கோரை எட்டியதோடு, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் முதல் இரண்டு இன்னிங்ஸ்களைச் சேர்த்து 100 ரன்கள் எடுத்த மந்தனா, கடைசி டி20 போட்டியில் 54* ரன்கள் எடுத்தார். இது 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்ய உதவியது.
ஆசியக் கோப்பையில் தொடர்ந்து ரன்களை குவித்த மந்தனா 173 ரன்கள் எடுத்தார். இறுதிப் போட்டியில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோரான 47 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்தார்.
மொத்தத்தில், ஸ்மிருதி மந்தனா ஜூலை மாதம் 139.28 ஸ்ட்ரைக் ரேட்டுடன் டி20 போட்டிகளில் 68.25 சராசரியுடன் 273 ரன்கள் சேர்த்துள்ளார்.
ஷஃபாலி வர்மா (இந்தியா)
இந்தியாவின் மற்றொரு வழக்கமான தொடக்க ஆட்டக்காரரான ஷஃபாலி வர்மா ஜூலை மாதத்திற்கான மூன்றாவது வீராங்கனையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ஜூலை மாதத்தில் மட்டும் டெஸ்ட்டில் 229 ரன்களையும், டி20யில் 245 ரன்களையும் எடுத்துள்ளார்.
மந்தனாவுடன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ஷஃபாலி வர்மா, மிதாலி ராஜுக்குப் பிறகு இரட்டை சதம் அடித்த இரண்டாவது இந்தியப்பெண் என்ற பெருமையைப் பெற்றார். அவர் 194 பந்துகளில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இது பெண்கள் டெஸ்டில் அதிவேகமாக அடிக்கப்பட்ட இரட்டை சதமாகும்.
இந்தப் போட்டியில் இந்தியா 603/6 என்ற சாதனையை பதிவு செய்தது. ஷஃபாலி வர்மா தனது அதிகபட்ச ஸ்கோரான 205 ரன்கள் விளாசினார். இது பெண்கள் டெஸ்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மேலும், ஷஃபாலி வர்மா இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டும், 24* ரன்களும் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.