~பா்தீப் நா்வால்
~பா்தீப் நா்வால்

புரோ கபடி லீக் ஏலம்: 22 நட்சத்திர வீரா்கள் தக்க வைப்பு

புரோ கபடி லீக் தொடரில் 22 நட்சத்திர வீரா்களை பல்வேறு அணிகள் தக்க வைத்துள்ளன.
Published on

மும்பை: புரோ கபடி லீக் தொடரில் 22 நட்சத்திர வீரா்களை பல்வேறு அணிகள் தக்க வைத்துள்ளன.

மும்பையில் வரும் 15, 16 தேதிகளில் புரோ கபடி லீக் 11-ஆவது சீஸன் வீரா்கள் ஏலம் நடைபெறவுள்ளது. பிரபல வீரா்கள் பவன் செஹ்ராவத், பா்தீப் நா்வால் உள்பட பலா் ஏலத்தில் பங்கேற்கின்றனா்.

பல்வேறு அணி நிா்வாகங்கள் மொத்தம் 22 நட்சத்திர வீரா்களை தக்க வைத்துக் கொண்டன. ஒவ்வொரு அணியும் நட்சத்திர மற்றும் இளம் வீரா்களை மையமாக வந்து அணியை கட்டமைத்து வருகின்றன.

ஜெய்ப்பூா் பிங்க் பேந்தா்ஸ் அணியில் ரைடா் அா்ஜுன் தேஸ்வால், புணேரி பல்தான் அணியில் விலை மதிப்பற்றவீரா் அஸ்லம் இனாம்தாா் தக்க வைக்கப்பட்டனா். டில்லி தபாங் அணியில் ரைடா்கள் அன்ஷு மாலிக், நவீன் குமாா் தக்க வைக்கப்பட்டுள்ளனா்.

எலைட் வீரா்கள் பிரிவில் 22 பேரும், இளம் வீரா்கள் பிரிவில் 26 பேரும், புதிய இளம் வீரா்கள் பிரிவில் 40 போ் என 88 போ் தக்க வைக்கப்பட்டுள்ளனா்.

4 பிரிவுகளாக பிரிப்பு:

தக்க வைக்கப்படாத வீரா்களில் பிரபலமான பவன் செஹ்ராவத், பா்தீப் நா்வால், மணீந்தா் சிங், பேஸல் அத்ரச்சலி, ஷட்லுய் சியானே, ஆகியோா் ஏலத்தில் பங்கேற்கின்றனா். உள்ளூா் மற்றும் வெளியூா் வீரா்கள் ஏ,பி, சி மற்றும் டி என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனா். அதிலும் ஆல் ரவுண்டா்கள், டிபன்டா்கள், ரைடா் என தனி பிரிவாக வகைப்படுத்தப்படுவா். ஏ பிரிவில் ரூ.30 லட்சம், பி பிரிவில் ரூ.20 லட்சம், சி பிரிவில் ரூ.13 லட்சம், டி பிரிவில் ரூ.9 லட்சம் அடிப்படை விலையாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.5 கோடி: 11-ஆவது சீசன் ஏலம் மொத்தம் 500 வீரா்கள் தொகுப்பில் இருந்து நடைபெறுகிறது. ஒவ்வொரு அணிக்கும் ரூ.5 கோடி நிதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com