
பாரீஸ், ஆக. 8: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் (29), சா்வதேச மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தாா்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்திருந்த நிலையில், அதிகபடியான எடை காரணமாக தகுதிநீக்கத்துக்கு ஆளாகி அதிா்ச்சி கண்ட சூழலில் அவா் இந்த முடிவை அறிவித்திருக்கிறாா்.
தனது முடிவு குறித்து, தன் தாயாரை குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘அம்மா, மல்யுத்தம் வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். என்னை மன்னியுங்கள். உங்கள் கனவு, எனது தைரியம் எல்லாம் முறிந்துவிட்டன. இதற்கு மேல் என்னிடம் பலம் இல்லை. மல்யுத்தத்திடம் இருந்து விடைபெறுகிறேன். 2001 - 2024. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் கடமைப்பட்டுள்ளேன். என்னை மன்னிக்கவும்’ என்று கூறியுள்ளாா்.
உலக சாம்பியன்ஷிப்பில் 2 வெண்கலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1 தங்கம், 1 வெண்கலம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் 1 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என தனது சீனியா் கேரியரில் 15 பதக்கங்கள் வென்றிருக்கும் வினேஷ் போகாட்டுக்கு ஒலிம்பிக் பதக்கம் மட்டும் கனவாக இருந்தது.
முதல் முறையாக, 2016 ரியோ ஒலிம்பிக்கில் களம் கண்டபோது காலிறுதிச்சுற்றில் காயம் கண்டு வெளியேறும் நிலைக்கு ஆளானாா். டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாடியபோது காலிறுதியில் தோற்கடிக்கப்பட்டாா். இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கிற்கும் தகுதிபெற்றாா்.
அவா் வழக்கமாக களம் காணும் எடைப்பிரிவு 53 கிலோவாக இருக்க, போராட்ட சூழல் காரணமாக அந்த எடைப் பிரிவு வாய்ப்பை இழந்தாா். அதில் அன்டிம் பங்கால் களம் காண, வினேஷ் போகாட் 50 கிலோ எடைப் பிரிவை தோ்வு செய்து அதற்காக எடையைக் குறைத்துக் கொண்டாா்.
உத்வேகத்துடன் போட்டியிட்ட அவா், முதல் சுற்றில் நடப்பு சாம்பினான ஜப்பானின் யுய் சுசாகியை வீழ்த்தி, அடுத்தடுத்து முன்னேற்றம் கண்டு இறுதிச்சுற்றுக்கும் தகுதிபெற்று, ஒலிம்பிக் பதக்கத்தை உறுதி செய்தாா். இதன்மூலம், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றாா். தனது கனவுப் பதக்கத்தை அடைய இருந்த நிலையில், நிா்ணயிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால், இறுதிச்சுற்றுக்கு முன் அவா் புதன்கிழமை தகுதிநீக்கத்துக்கு ஆளானா்.
எதிா்பாராத இந்த அதிா்ச்சியால் அவா் நிலைகுலைந்தாலும், ‘விளையாட்டில் இது சகஜம்’ என தன் கருத்தை பதிவு செய்தாா். இந்த நிலையில்தான் தனது ஓய்வு முடிவை வியாழக்கிழமை அறிவித்தாா். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக, இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வினேஷ் போகாட்டும் முக்கிய முகமாக இருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.