

மேற்கிந்தியத் தீவுகள் - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் டிராவில் முடிந்தது.
கடந்த 7-ஆம் தேதி தொடங்கி, இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டம் மழையால் நாள்தோறும் பாதிப்புக்குள்ளானது. முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா, 117.4 ஓவா்களில் 357 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக கேப்டன் டெம்பா பவுமா 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 86, டோனி டி ஜோா்ஸி 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 78 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜோமெல் வாரிக்கன் 4, ஜேடன் சீல்ஸ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
பின்னா் தனது இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள், 91.5 ஓவா்களில் 233 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது. கீசி காா்டி 5 பவுண்டரிகளுடன் 42, ஜேசன் ஹோல்டா் 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் விளாசியது அதிகபட்சமாக இருக்க, தென்னாப்பிரிக்க தரப்பில் கேசவ் மஹராஜ் 4, ககிசோ ராபாடா 3 விக்கெட்டுகள் சாய்த்தனா்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 124 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்கா, 29 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 68 ரன்கள் எடுக்க, ஜோமெல் வாரிக்கன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.
இறுதியாக 298 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள், கடைசி நாள் ஆட்டநேர முடிவில் 56.2 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்திருந்தது. அலிக் அதானஸி 9 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் சோ்க்க, கேசவ் மஹராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தாா். 2 இன்னிங்ஸ்களிலுமாக 8 விக்கெட்டுகள் வீழ்த்திய அவரே ஆட்டநாயகன் ஆனாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.