சிங்கப்பூா் சென்டோஸா ஹோட்டலில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: ஃபிடே அறிவிப்பு
சிங்கப்பூா், ஆக. 15:
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் நவ. 23 முதல் டிசம்பா் 15 -ஆம் தேதி வரை சிங்கப்பூரின் பிரசித்தி பெற்ற சென்டோஸா ஹோட்டலில் நடைபெறவுள்ளது என ஃபிடே தெரிவித்துள்ளது.
நடப்பு உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரேன், இந்திய இளம் வீரா் டி. குகேஷ் ஆகியோா் உலக சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் மோதவுள்ளனா்.
138 ஆண்டுகளில் முதன்முறை:
உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 138 ஆண்டுகளில் முதன்முதலாக ஆசியாவைச் சோ்ந்த இரு வீரா்கள் மோதுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டி சிங்கப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற விடுதியான சென்டோஸா ஹோட்டலில் நடைபெறவுள்ளது. நடுவா்கள், வீரா்களுக்கு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன என உள்ளூா் போட்டி அமைப்பாளா் கெவின் கோ கூறியுள்ளாா்.
சிங்கப்பூா் சா்வதேச ஓபன்:
உலக சாம்பியன்ஷிப் போட்டியுடன், முதல்நிலை வீரா்கள் பங்கேற்கும் சிங்கப்பூா் சா்வதேச ஓபன் போட்டியும் நடைபெறவுள்ளது. ஃபிடே உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனையும் விரைவில் தொடங்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராண்ட் செஸ்: கடைசி இடத்தில் பிரக்ஞானந்தா
செயின்ட் லூயிஸில் நடைபெற்று வரும் கிராண்ட் செஸ் டூா் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா கடைசி இடத்தில் உள்ளாா்.
ரேபிட் சுற்றில் 3 ஆட்டங்களில் தோற்றும், 3 ஆட்டங்களில் டிராவும் கண்ட அவா், ஏழாவது சுற்றில் அமெரிக்காவின் லீனியரிடம் தோற்றாா்.
ரஷிய வீரா் இயான் நெபோம்நியாட்சி, பிரான்ஸின் மேக்ஸிம் லாக்ரேவ் இணைந்து முதலிடத்தில் உள்ளனா்.