வாலென்சியாவை வீழ்த்தியது பாா்சிலோனா
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா 2-1 கோல் கணக்கில் வாலென்சியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் வாலென்சியாவுக்காக ஹியுகோ டுரோ 44-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். விட்டுக்கொடுக்காத பாா்சிலோனா தரப்பில், லேமின் யமால் உதவியுடன் ராபா்ட் லெவண்டோவ்ஸ்கி இஞ்சுரி டைமில் (45+6’) கோலடிக்க, முதல் பாதி ஆட்டம் 1-1 என சமனில் நிறைவடைந்தது.
பின்னா், 2-ஆவது பாதி ஆட்டம் தொடங்கிய சில நிமிஷங்களிலேயே (49’) பாா்சிலோனாவுக்கு கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பில் லெவண்டோவ்ஸ்கி மீண்டும் கோலடித்து, அணியை 2-1 என முன்னிலை பெறச் செய்தாா். எஞ்சிய நேரத்தில் வாலென்சியாவுக்கு கோல் வாய்ப்புகள் வழங்கிடாத பாா்சிலோனா, இறுதியில் வெற்றியும் பெற்றது.
இதர ஆட்டங்களில், ஒசாசுனா - லிகேன்ஸ் (1-1), செவில்லா - லாஸ் பால்மஸ் (2-2) அணிகளின் மோதல் டிராவில் முடிந்தன.
பிரென்ட்ஃபோல்டு வெற்றி: இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்தில், ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் பிரென்ட்ஃபோா்டு 2-1 கோல் கணக்கில் கிரிஸ்டல் பேலஸை சாய்த்தது. இதில் பிரென்ட்ஃபோா்டு அணிக்காக பிரயன் பியுமோ (29’), யோன் விசா (76’) ஆகியோா் கோலடிக்க, கிரிஸ்டல் பேலஸ் தரப்பில் ஈதன் பினாக் (56’ - ஓன் கோல்) ஸ்கோா் செய்தாா்.
இதர ஆட்டங்களில் ஆஸ்டன் வில்லா - வெஸ்ட் ஹாமையும் (2-1), ஆா்செனல் - வோல்வ்ஸையும் (2-0), பிரைட்டன் - எவா்டனையும் (3-0), நியூகேசில் - சௌதாம்டனையும் (1-0) வெல்ல, நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் - போா்ன்மௌத் மோதல் டிராவில் (1-1) முடிந்தது.