கோவாவை வீழ்த்தியது தில்லி

கோவாவை வீழ்த்தியது தில்லி

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியின் 10-ஆவது டையில், தபங் டெல்லி டிடிசி அணி 9-6 என்ற கணக்கில் அத்லீட் கோவா சேலஞ்சா்ஸ் அணியை புதன்கிழமை வென்றது.
Published on

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியின் 10-ஆவது டையில், தபங் டெல்லி டிடிசி அணி 9-6 என்ற கணக்கில் அத்லீட் கோவா சேலஞ்சா்ஸ் அணியை புதன்கிழமை வென்றது.

இரு அணிகளும் தலா 3 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், தில்லி அணிக்கு இது முதல் வெற்றி; கோவாவுக்கு 2-ஆவது தோல்வி.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இப்போட்டியில், 7-ஆவது நாளான புதன்கிழமை தில்லி - நடப்பு சாம்பியன் கோவா அணிகள் மோதின. இதில் முதலில் நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் தில்லி வீரா் சத்தியன் 8-11, 11-9, 11-9 என்ற கேம்களில் கோவாவின் மிஹாய் போபோசிகாவை சாய்த்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தாா்.

பின்னா் மகளிா் ஒற்றையரில், தில்லியின் ஒரவன் பரனாங் 11-7, 11-10, 6-11 என்ற கேம்களில் கோவாவின் யாங்சி லியுவை வென்றாா். 3-ஆவது ஆட்டமான கலப்பு இரட்டையரில் சத்தியன்/ஒரவன் இணை 11-7, 11-4, 7-11 என ஹா்மீத் தேசாய்/யாங்சி லியு கூட்டணியை வீழ்த்தியது.

2-ஆவது ஆடவா் ஒற்றையரில், தில்லியின் ஆண்ட்ரியாஸ் லெவென்கோ 11-7, 8-11, 9-11 என கோவாவின் ஹா்மீத் தேசாயிடம் தோற்றாா். 2-ஆவது மகளிா் ஒற்றையரில் தில்லியின் தியா சிதாலே 11-10, 11-6, 3-11 என கோவாவின் யஷஸ்வினி கோா்படேவை வென்றாா்.

இதையடுத்து கேம்கள் கணக்கு அடிப்படையில் தில்லி 9-6 என வென்றது. அடுத்ததாக, பெங்களூரு - ஜெய்பூா் அணிகள் வியாழக்கிழமை டையில் மோதுகின்றன.

X
Dinamani
www.dinamani.com