சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனும், பிசிசிஐ தலைவருமான ஜெய் ஷாவை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஜெய் ஷாவை வாழ்த்தி பதிவிட்ட எக்ஸ் பதிவை பகிர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் என்று பிரகாஷ் ராஜ் கேலி செய்துள்ளார்.
தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின்(பிசிசிஐ) செயலாளராக உள்ள ஜெய் ஷா, ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பலர், ஜெய் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட எக்ஸ் பதிவை பகிர்ந்து, நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்டதாவது:
“பேட்டராக, பவுலராக, விக்கெட் கீப்பராக மற்றும் தலைசிறந்த ஆல்ரவுண்டராக இந்திய அணியை உருவாக்கிய லெஜண்ட் ஜெய் ஷா. அவர் ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கு நாம் அனைவரும் எழுந்து நின்று கைதட்டுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரகாஷ் ராஜின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட் செய்துள்ள ஜெய் ஷாவின் ஆதரவாளர்கள், கிரிக்கெட்டுக்கு தொடர்பில்லாத சரத் பவார், ராஜீவ் சுக்லா, பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோரும் கிரிக்கெட் சங்கங்களின் பதவிகளில் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.