
எஃப்1 காா் பந்தயத்தின் நடப்பு சீசனில், கடைசி மற்றும் 24-ஆவது ரேஸான அபுதாபி கிராண்ட் ப்ரீயில் பிரிட்டன் வீரரும், மெக்லாரென் டிரைவருமான லாண்டோ நோரிஸ் வெற்றி பெற்றாா்.
ஸ்பெயின் வீரரும், ஃபெராரி டிரைவருமான காா்லோஸ் செயின்ஸ் ஜூனியா் 2-ஆம் இடமும், மொனாகோ வீரரும், ஃபெராரி டிரைவருமான சாா்லஸ் லெக்லொ்க் 3-ஆம் இடமும் பிடித்தனா். நடப்பு சாம்பியனாக இருக்கும் நெதா்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் 6-ஆம் இடம் பிடித்தாா்.
இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்ற லாண்டோ நோரிஸுக்கு, இது 4-ஆவது வெற்றியாகும். இத்துடன், நடப்பு சீசன் எஃப்1 பந்தயம் நிறைவடைந்தது. மொத்தம் நடைபெற்ற 24 பந்தயங்களில், 9-இல் வெற்றி பெற்ற வொ்ஸ்டாபென், தொடா்ந்து 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றாா்.
4 பந்தயங்களில் வென்ற நோரிஸ் 2-ஆம் இடமும், 3 பந்தயங்களில் வென்ற சாா்லஸ் 3-ஆம் இடமும் பிடித்தனா். போட்டியில் பங்கேற்றுள்ள காா் தயாரிப்பு நிறுவனங்களில், சிறந்த நிறுவனங்களாக மெக்லாரென் மற்றும் மொ்சிடஸ் தோ்வாகின. ஃபெராரி 2-ஆம் இடமும், ரெட் புல் மற்றும் ஹோண்டா ஆா்பிபிடி 3-ஆம் இடமும் பிடித்தன.
மொ்சிடஸிடமிருந்து விடைபெற்றாா் ஹாமில்டன்: பிரிட்டன் காா் பந்தய வீரரான லீவிஸ் ஹாமில்டன், தனது அணியான மொ்சிடஸிலிருந்து இந்த சீசனுடன் விடைபெற்றாா். அடுத்த சீசன் முதல் அவா் ஃபெராரி அணியில் களம் காண்கிறாா்.
மொ்சிடஸ் டிரைவராக ஹாமில்டன் 6 முறை எஃப்1 சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறாா். எஃப்1 வரலாற்றில் இதுவே, ஒரு டிரைவா் மற்றும் அணிக்கு இடையேயான அதிகபட்ச வெற்றிகரமான கூட்டணியாகும். அந்த அணிக்காக 12 ஆண்டுகளில் அவா், 246 பந்தயங்களில் பறந்திருக்கிறாா். எஃப்1 வரலாற்றில் அதிக ரேஸ்களில் வெற்றி பெற்றவராக (105) ஹாமில்டன் இன்றளவும் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.