உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் கொனேரு ஹம்பி வெற்றி!

ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் பிரிவில் இந்தியரான கொனேரு ஹம்பி வெற்றி பெற்றார்.
கொனேரு ஹம்பி
கொனேரு ஹம்பி
Published on
Updated on
2 min read

நியூயார்க்கில் நடைபெற்ற ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இந்திய கிராண்ட் மாஸ்டரான கொனேரு ஹம்பி (37) ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் பிரிவில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

செஸ் போட்டியில் 2024 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது கொனேரு ஹம்பியின் வெற்றி இந்தியாவிற்கு மேலும் ஒரு மகுடத்தைப் பரிசளித்துள்ளது.

இதையும் படிக்க | 2024 விளையாட்டு

போட்டியின் முதல் நாளில் தோல்வியுடன் தொடங்கிய கொனேரு ஹம்பி 2 வது நாளில் 2இருந்து வெற்றிக் கணக்கைத் தொடங்கினார். போட்டியின் 11 வது சுற்று ஆட்டத்தில் கறுப்பு காய்களில் ஆடிய கொனேரு ஹம்பி, பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் இந்தோனேஷியாவின் ஐரின் சுகந்தரைத் தோற்கடித்து 8.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இது இவரது இரண்டாவது சாம்பியன் பட்டமாகும். இதற்கு முன்னர் கோனேரு ஹம்பி, கடந்த 2019-ல் மகப்பேறு ஓய்வில் இருந்து வந்து, மீண்டும் விளையாட்டில் கவனம் செலுத்தி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

வெற்றிபெற்றது குறித்து பேசிய கொனேரு ஹம்பி, “இது எனக்கு மகிழ்ச்சியான தருணம். இரண்டாவது முறை ரேபிட் செஸ் சாம்பியன் பட்டம் வெல்வதை பெருமையாக நினைக்கிறேன். என்னுடைய கரியரில் நான் துவண்டு போகும் நிலை வரும்போதெல்லாம் இவை அனைத்தையும் விட்டுவிடலாம் என்றே தோன்றும். ஆனால், சில அதிசயங்கள் நிகழ்ந்து நான் திரும்ப வருவேன். அதுவே எனக்கு மேலும் போட்டியிடுவதற்கான உத்வேகத்தை அளிக்கிறது.

எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என் பெற்றோருக்கும் எனது கணவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். திருமணம் செய்து குழந்தை பெற்ற பிறகு இந்தியாவில் ஒரு தொழில்முறை விளையாட்டு வீரராக இருப்பது எளிதல்ல. ஆனால் என் கணவர் எனக்கு மிகவும் ஆதரவு அளித்தார். நான் போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும்போது என் மகளை என் பெற்றோர் பார்த்துக்கொண்டனர். இவை அனைத்துமே எனக்கு இந்த வெற்றியைப் பெறுவதற்கு உதவின” என்று அவர் தெரிவித்தார்.

சீனாவின் ஜூ வென்ஜூனுக்குப் பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட முறை இந்தப் பட்டத்தை வென்று கொனேரு ஹம்பி சாதித்துள்ளார்.

அதேபோல, ரஷியாவின் வோலோடர் முர்சின் (18) ஆண்கள் பிரிவில் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். இவர், குறைந்த வயதில் இந்தப் பட்டத்தை வென்ற இரண்டாவது வீரராவார். இதற்கு முன்னர், உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த நோடிர்பெக் அபுசட்டோரோவ் 17 வயதில் சாம்பியன் பட்டம் வென்றார்.

ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு மாஸ்கோவில் வெண்கலமும், கடந்தாண்டு உஸ்பெகிஸ்தானில் வெள்ளிப் பதக்கமும் வென்று தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை கொனேரு ஹம்பி வெளிப்படுத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com