இலங்கை - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
இலங்கை - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி  தொடங்கியது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஹ்மத் 91 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் விஸ்வா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அசிதா ஃபெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜெயசூர்யா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 439 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் மேத்யூஸ் மற்றும் சண்டிமால் சதமடித்து அசத்தினர். மேத்யூஸ் 141 ரன்களும், சண்டிமால் 107 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீத் ஸத்ரன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  நிஜத் மசூத் மற்றும் குவாய்ஸ் அகமது தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. இப்ராஹிம் ஸத்ரன் டெஸ்ட் போட்டிகளில் அவரது முதல் சதத்தைப் பதிவு செய்தார். இப்ராஹிம் ஸத்ரன் 101 ரன்களுடனும், ரஹ்மத் ஷா 46 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி இலங்கையைக் காட்டிலும் 42 ரன்கள் பின் தங்கியிருந்தது. 

இந்த நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. இப்ராஹிம் ஸத்ரன் மற்றும் ரஹ்மத் ஷா ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஸத்ரன் 114 ரன்களிலும், ரஹ்மத் ஷா 54 ரன்களிலும் ஆட்டமிந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் நசீர் ஜமால் தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். நசீர் ஜமால் 41 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான்  296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இலங்கை அணிக்கு 56 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான். 

56  ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 7.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திமுத் கருணாரத்னே 32 ரன்களுடனும், நிஷான் மதுக்‌ஷா 22  ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பிரபாத் ஜெயசூர்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com