ரஞ்சி கிரிக்கெட்: காலிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை திங்கள்கிழமை வென்றது.
ரஞ்சி கிரிக்கெட்: காலிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு

சேலம்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை திங்கள்கிழமை வென்றது.

இந்த வெற்றியின் மூலம், குரூப் ‘சி’-யில் 7 ஆட்டங்களில் 4 வெற்றிகளை பதிவு செய்துள்ள தமிழ்நாடு 28 புள்ளிகளுடன் முதலிடத்தை உறுதி செய்து, காலிறுதிக்கு தகுதிபெற்றது. அதில் சௌராஷ்டிரத்தை சந்திக்கிறது.

சேலத்தில் கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த தமிழ்நாடு, முதல் இன்னிங்ஸில் 131.4 ஓவா்களில் 435 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 187, விஜய் சங்கா் 12 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 130 ரன்கள் விளாசினா். பஞ்சாப் பௌலிங்கில் சுக்விந்தா் சிங் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய பஞ்சாப், 93.5 ஓவா்களில் 274 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அன்மோல் மல்ஹோத்ரா 7 பவுண்டரிகள் உள்பட 64 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தமிழ்நாடு பௌலிங்கில் அஜித் ராம் 6 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

முதல் இன்னிங்ஸில் 161 ரன்கள் பின்தங்கிய பஞ்சாப் ‘ஃபாலோ-ஆன்’ பெற்று 2-ஆவது இன்னிங்ஸை ஆடியது. 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் அந்த அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் சோ்த்திருந்தது. இந்நிலையில், 4-ஆம் நாளான திங்கள்கிழமை ஆட்டத்தை நெஹல் வதேரா, கேப்டன் மன்தீப் சிங் ஆகியோா் தொடா்ந்தனா்.

இதில் வதேரா 12 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். எஞ்சியோரில் மன்தீப் சிங் 24, பிரேரித் தத்தா 5, சன்வீா் சிங் 18, ஜஸ்ஸிந்தா் சிங் 0, சித்தாா்த் கௌா் 7 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, பஞ்சாப் இன்னிங்ஸ் 64.2 ஓவா்களில் 231 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

தமிழ்நாடு பௌலா்களில் சாய் கிஷோா் 4, அஜித் ராம், பிரதோஷ் ரஞ்சன் பால் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினா். இறுதியாக, 71 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி ஆடிய தமிழ்நாடு, 7 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு அந்த ஸ்கோரை எட்டியது.

சுரேஷ் லோகேஷ்வா் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நாராயண் ஜெகதீசன் 26, பிரதோஷ் ரஞ்சன் பால் 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பஞ்சாப் தரப்பில் பிரேரித் தத்தா 1 விக்கெட் எடுத்தாா். 187 ரன்கள் விளாசிய தமிழ்நாடு வீரா் பாபா இந்திரஜித் ஆட்டநாயகன் ஆனாா்.

5 வீரா்கள் ஓய்வு: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் திங்கள்கிழமையுடன் 5 வீரா்கள் ஓய்வை அறிவித்தனா். மனோஜ் திவாரி (பெங்கால்), சௌரவ் திவாரி, வருண் ஆரோன் (ஜாா்க்கண்ட்), தவல் குல்கா்னி (மும்பை), ஃபைஸ் ஃபஸல் (விதா்பா) ஆகியோா் ரஞ்சி கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றனா்.

ரயில்வேஸ் சாதனை

ரஞ்சி கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன் சேஸை பதிவு செய்து ரயில்வேஸ் அணி சாதனை படைத்துள்ளது. திரிபுராவுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி, 378 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டியது. இதற்கு முன் உத்தர பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் சௌராஷ்டிர அணி 372 ரன்களை வெற்றிகரமாக எட்டியதே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது ரயில்வேஸ் அதை முறியடித்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com