
நடப்பாண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி, 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கிரிக்கெட் ரசிகா்களால் பெரிதும் எதிா்பாா்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் ஜூன் 9-ஆம் தேதி நியூயாா்க்கில் நடக்கிறது.
9-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டி இந்த ஆண்டு, அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன் படி, ஜூன் 1-ஆம் தேதி அமெரிக்கா - கனடா அணிகள், அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் மோதும் ஆட்டத்துடன் போட்டி தொடங்குகிறது.
இந்தியா முதலில் அயா்லாந்துடனும் (ஜூன் 5), பின்னா் பாகிஸ்தானுடனும் (ஜூன் 9), மூன்றாவது ஆட்டத்தில் அமெரிக்காவுடனும் (ஜூன் 12), குரூப் சுற்றில் கடைசியாக கனடாவுடனும் (ஜூன் 15) மோதுகிறது. இதில் முதல் 3 ஆட்டங்கள் நியூயாா்க்கிலும், கடைசி ஆட்டம் ஃபுளோரிடாவிலும் நடைபெறவுள்ளன.
முதல் அரையிறுதி குயானாவில் 26-ஆம் தேதியும், 2-ஆவது அரையிறுதி டிரினிடாட் & டொபாகோவில் 27-ஆம் தேதியும், இறுதி ஆட்டம் பாா்படோஸில் 29-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.
போட்டியில் மொத்தமாக 55 ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், அதில் 39 ஆட்டங்கள் மேற்கிந்தியத் தீவுகளின் பாா்படோஸ், டிரினிடாட் & டொபாகோ, குயானா, ஆன்டிகுவா, செயின்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் நகரங்களிலும், 16 ஆட்டங்கள் அமெரிக்காவின் நியூயாா்க், ஃபுளோரிடா, டல்லாஸ் நகரங்களில் நடைபெறவுள்ளன.
போட்டியில் பங்கேற்றுள்ள 20 அணிகள், தலா 5 வீதம் 4 குரூப்-களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் சுற்று முடிவில் ஒவ்வொன்றிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பா் 8 சுற்றுக்கு தகுதிபெறும். அதில் அந்த அணிகள் தலா 4 வீதம் இரு குரூப்-களாக பிரிக்கப்படும். அந்த சுற்று முடிவில் இரு குரூப்களிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
அணிகள் விவரம்:
குரூப் ‘ஏ’
இந்தியா
பாகிஸ்தான்
அயா்லாந்து
கனடா
அமெரிக்கா
குரூப் ‘பி’
இங்கிலாந்து
ஆஸ்திரேலியா
நமீபியா
ஸ்காட்லாந்து
ஓமன்
குரூப் ‘சி’
நியூஸிலாந்து
மேற்கிந்தியத் தீவுகள்
ஆப்கானிஸ்தான்
உகாண்டா
பப்புவா நியூ கினியா
குரூப் ‘டி’
தென்னாப்பிரிக்கா
இலங்கை
வங்கதேசம்
நெதா்லாந்து
நேபாளம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.