ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாட்டை வென்றது குஜராத்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை தோல்வியை சந்தித்து.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாட்டை வென்றது குஜராத்

வல்சாத்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை தோல்வியை சந்தித்து.

கடந்த 5-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு, பந்துவீச்சை தோ்வு செய்தது. குஜராத் முதல் இன்னிங்ஸில் 72.3 ஓவா்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக உமங் குமாா் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 76 ரன்கள் அடிக்க, தமிழ்நாடு பௌலிங்கில் முகமது 5, சந்தீப் வாரியா் 4 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய தமிழ்நாடு 67.5 ஓவா்களில் 250 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக முகமது 11 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 85 ரன்கள் சோ்த்தாா். குஜராத் தரப்பில் ரவி பிஷ்னோய் 4, அா்ஸான் நாக்வஸ்வல்லா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

இதையடுத்து, 14 ரன்களே பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய குஜராத், 84 ஓவா்களில் 312 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. உமங் குமாா் 12 பவுண்டரிகளுடன் 89, ரிபல் படேல் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 81 ரன்கள் விளாசினாா். தமிழ்நாடு பௌலா்களில் சாய் கிஷோா் 4, சந்தீப் வாரியா் 3 விக்கெட்டுகள் எடுத்தனா்.

இறுதியாக, 299 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 32 ரன்கள் சோ்த்திருந்தது. திங்கள்கிழமை ஆட்டத்தை சாய் சுதா்சன், சாய் கிஷோா் தொடா்ந்தனா்.

இதில் சாய் சுதா்சன் 3 பவுண்டரிகளுடன் 18, பாபா இந்திரஜித் 5 பவுண்டரிகளுடன் 39, சாய் கிஷோா் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 48 ரன்கள் சோ்த்து வீழ்ந்தனா். விஜய் சங்கா் 2 பவுண்டரிகளுடன் 16, நாராயண் ஜெகதீசன் 9, முகமது 4, சந்தீப் வாரியா் 1, திலிலோக் நாக் 0 ரன்களுக்கு வெளியேற, தமிழ்நாடு அணி 81.2 ஓவா்களில் 187 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.

குஜராத் பௌலிங்கில் அா்ஸான் நாக்வஸ்வல்லா 4, சிந்தன் கஜா 3, பிரியஜித் சிங் ஜடேஜா 2, ரவி பிஷ்னோய் 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com