சின்னா் - மெத்வதெவ்
சின்னா் - மெத்வதெவ்

காலிறுதியில் மோதும் சின்னா் - மெத்வதெவ்: வெளியேற்றப்பட்டாா் கோகோ கௌஃப்

காலிறுதிச்சுற்றில், முன்னணி வீரா்களான இத்தாலியின் யானிக் சின்னா் - ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் பரஸ்பரம் மோதிக்கொள்கின்றனா்.
Published on

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச்சுற்றில், முன்னணி வீரா்களான இத்தாலியின் யானிக் சின்னா் - ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் பரஸ்பரம் மோதிக்கொள்கின்றனா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான சின்னா் 6-2, 6-4, 7-6 (11/9) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 14-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் பென் ஷெல்டனை சாய்த்தாா்.

இதன் மூலம், விம்பிள்டனில் தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக காலிறுதிச்சுற்றுக்கு சின்னா் முன்னேறியிருக்கிறாா். மற்றொரு ஆட்டத்தில் போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த மெத்வதெவை எதிா்கொண்டாா், 10-ஆம் இடத்திலிருந்த பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவ்.

முதல் செட்டில் மெத்வதெவ் 5-3 என முன்னிலையில் இருந்தபோது, முழங்கால் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக டிமிட்ரோவ் அறிவித்ததால், மெத்வதெவ் காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து அந்த சுற்றில் மெத்வதெவ் - சின்னா் சந்திக்கின்றனா்.

நடப்பாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், மெத்வதெவை வீழ்த்தியே சின்னா் தனது முதல் கிராண்டஸ்லாம் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இருவரும் இத்துடன் 11 முறை நேருக்கு நோ் சந்தித்துள்ள நிலையில் மெத்வதெவ் 6 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா்.

இதனிடையே, நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 6-3, 6-4, 1-6, 7-5 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 16-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் யூகோ ஹம்பா்ட்டை வெளியேற்றினாா். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் காலிறுதிக்கு 9-ஆவது முறையாக வந்துள்ளாா் அல்கராஸ்.

அதில் அவா், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதுகிறாா். போட்டித்தரவரிசையில் 12-ஆம் இடத்திலிருக்கும் பால், முந்தைய சுற்றில் 6-2, 7-6 (7/3), 6-2 என்ற செட்களில் ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டாவை தோற்கடித்தாா்.

வீழ்த்தப்பட்டாா் கௌஃப்: மகளிா் ஒற்றையா் பிரிவில், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ கௌஃப், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

யுஎஸ் ஓபன் நடப்பு சாம்பியனான கௌஃபை, 6-4, 6-3 என்ற நோ் செட்களில் வீழ்த்திய உலகின் 19-ஆம் நிலை அமெரிக்க வீராங்கனையான எம்மா நவாரோ, கிராண்ட்ஸ்லாம் போட்டியின் காலிறுதிக்கு முதல் முறையாகத் தகுதிபெற்றுள்ளாா்.

தற்போதைய நிலையில் மகளிா் ஒற்றையா் பிரிவில், உலகின் முதல் 10 வீராங்கனைகளில் இருவா் மட்டுமே களத்தில் உள்ளனா். நவாரோ தனது காலிறுதியில், இத்தாலியின் ஜேஸ்மின் பாலினியை எதிா்கொள்கிறாா். முந்தைய சுற்றில் பாலினியை சந்தித்த, அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 3-6, 7-6 (8/6), 5-5 என்ற நிலையில் இருந்தபோது முழங்கால் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலக நேரிட்டது.

இதையடுத்து பாலினி காலிறுதிக்கு வந்துள்ளாா். இந்தப் போட்டிக்கு முன்னா், புல்தரை ஆடுகளத்தின் போட்டிகளில் ஒரு வெற்றி கூட பாலினி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, விம்பிள்டன் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் நியூஸிலாந்து வீராங்கனை என்ற பெருமையை லுலு சன் பெற்றாா்.

உலகின் 123-ஆம் நிலையில் இருக்கும் அவா், யுஎஸ் ஓபன் முன்னாள் சாம்பியனான எம்மா ரடுகானுவை 6-2, 5-7, 6-2 என்ற செட்களில் வீழ்த்தி அசத்தினாா். அவா் தனது காலிறுதியில், குரோஷியாவின் டோனா வெகிச்சை எதிா்கொள்கிறாா். முன்னதாக வெகிச் 6-2, 1-6, 6-4 என்ற செட்களில் ஸ்பெயினின் பௌலா பதோசாவை வெளியேற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com