
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று (ஜூலை 9) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தஸ்மின் பிரிட்ஸ் 20 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அன்னக்கே போஸ்ச் அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய பூஜா வஸ்த்ரகார் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ராதா யாதவ் 3 விக்கெட்டுகளையும், அருந்ததி ரெட்டி, ஸ்ரேயங்கா பாட்டீல் மற்றும் தீப்தி சர்மா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து, 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 10.5 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா அரைசதம் எடுத்து அசத்தினார். ஸ்மிருதி மந்தனா 54 ரன்களுடனும் (8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்), ஷஃபாலி வர்மா 27 ரன்களுடனும் (3 பவுண்டரிகள்) களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டிக்கு மழையினால் முடிவு எட்டப்படாதது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.