மெத்வதெவ்
மெத்வதெவ்

சின்னரை சாய்த்தாா் மெத்வதெவ்

விம்பிள்டன்: சின்னரின் போராட்டம் வீணானது
Published on

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா், காலிறுதியில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் அவரை வெளியேற்றினாா்.

ஆடவா் ஒற்றையா் காலிறுதிச்சுற்றில், சின்னா் 5 செட்கள் போராடி மெத்வதெவிடம் வீழ்ந்தாா். டை பிரேக்கா் வரை சென்ற முதல் செட்டை சின்னா் 7-6 (9/7) என்ற கணக்கில் வெல்ல, மெத்வதெவ் 2-ஆவது செட்டை 6-4 என எளிதாக கைப்பற்றினாா்.

3-ஆவது செட்டும் சின்னருக்கு போராட்டமாக அமைய, திடீரென அதில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக சற்று நேரம் எடுத்துக்கொண்ட சின்னா், மீண்டும் களத்துக்கு திரும்பிய நிலையில் அந்த செட்டை மெத்வதெவ் 7-6 (7/4) என வென்றெடுத்தாா். அடுத்த செட்டை சின்னா் 6-2 என எளிதாக வசப்படுத்தினாா்.

வெற்றியாளரை தீா்மானிக்கும் 5-ஆவது செட்டில் சின்னா் முயன்றபோதும், மெத்வதெவ் ஆதிக்கம் செலுத்தி 6-3 என அதை கைப்பற்றி வெற்றியை தனதாக்கினாா். இந்த ஆட்டம் 4 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. தற்போது மெத்வதெவ் தொடா்ந்து 2-ஆவது முறையாக விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா். ஒட்டுமொத்தமாக இது அவரின் 9-ஆவது கிராண்ட்ஸ்லாம் அரையிறுதி.

ஆஸ்திரேலிய ஓபன் நடப்பு சாம்பியனான சின்னரும், யுஎஸ் ஓபன் முன்னாள் சாம்பியனான மெத்வதெவும் இத்துடன் 12-ஆவது முறையாக மோதிய நிலையில், மெத்வதெவ் தனது 7-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா். அதிலும், கடைசியாக சின்னருடன் மோதிய 5 ஆட்டங்களிலுமே தோல்வியை சந்தித்த நிலையில், இந்த ஆட்டத்தின்மூலம் அந்தத் தொடா் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தாா் மெத்வதெவ். அந்தத் தோல்வியில், நடப்பாண்டு ஜனவரி மாத ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்று தோல்வியும் அடக்கம்.

2-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கான முனைப்பில் இருக்கும் மெத்வதெவ் அரையிறுதியில், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸுடன் மோதுகிறாா். இருவரும் இதுவரை 6 முறை சந்தித்துக்கொண்ட நிலையில், அல்கராஸ் 4 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா்.

கடந்த ஆண்டு அரையிறுதியிலும் இவா்கள் இருவரும் மோதியபோது, அல்கராஸ் அதில் வென்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அல்கராஸ் தனது காலிறுதியில், 5-7, 6-4, 6-2, 6-2 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 12-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டாமி பாலை தோற்கடித்தாா். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 11 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

வெகிச்சுடன் மோதும் பாலினி

இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவு காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி 6-2, 6-1 என்ற நோ் செட்களில், 19-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் எம்மா நவாரோவை எளிதாக வெளியேற்றினாா்.

இத்துடன் நவாரோவை 4-ஆவது முறையாகச் சந்தித்த பாலினி, தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். 57 நிமிஷங்களிலேயே இந்த ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த பாலினி, முதல் முறையாக விம்பிள்டன் அரையிறுதிக்குத் தகுதிபெற்றாா்.

அதில் அவா் குரோஷியாவின் டோனா வெகிச்சை சந்திக்கிறாா். வெகிச் காலிறுதியில் 5-7, 6-4, 6-1 என்ற செட்களில் நியூஸிலாந்தின் லுலு சன்னை சாய்த்தாா். தற்போது வெகிச், தனது 43-ஆவது முயற்சியில் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.

X
Dinamani
www.dinamani.com