
அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் செயல்படுபவர் கௌதம் கம்பீர் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் டி20 உலகக் கோப்பைத் தொடருடன் ஓய்வு பெற்றார். இதனையடுத்து, இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள தொடரிலிருந்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.
இந்த நிலையில், அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் செயல்படுபவர் கௌதம் கம்பீர் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கௌதம் கம்பீரிடமிருந்து நான் கற்றுக் கொண்டது என்னவென்றால், நமக்கு எதிராக விளையாடுபவரைக் காட்டிலும் 100 சதவிகித உழைப்பை கொடுத்து நாம் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதுதான். அணியில் ஆலோசனை நடைபெறும் போதும் மற்றும் தனித்தனியாக வீரர்களிடத்தில் பேசும் போதும் கௌதம் கம்பீர் குறைவாகவே பேசுவார். ஆனால், என்ன செய்துமுடிக்கப்பட வேண்டும் என்பதை தெளிவாக கூறிவிடுவார். வீரர்களுக்கென்று அவர் தனித்தனியாக பொறுப்புகளை கொடுத்துவிடுவார். அவர் எப்போதும் அணியின் பயிற்சியாளராகவே இருந்துள்ளார். அனைத்து வீரர்களும் தங்களது 100 சதவிகித உழைப்பை வழங்க வேண்டுமென அவர் எப்போதும் எதிர்பார்ப்பார் என்றார்.
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீர் செயல்பட்டபோது, ஆவேஷ் கான் அந்த அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.