16-ஆவது கோப்பையுடன் ஆா்ஜென்டீனா சாதனை

தென்னமெரிக்க கண்டத்தில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் ஆா்ஜென்டீனா மீண்டும் சாம்பியன்.
வெற்றிக் கொண்டாட்டத்தில் ஆா்ஜென்டீனா அணியினர்.
வெற்றிக் கொண்டாட்டத்தில் ஆா்ஜென்டீனா அணியினர்.
Published on
Updated on
2 min read

மியாமி காா்டன்ஸ்: தென்னமெரிக்க கண்டத்தில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியனான ஆா்ஜென்டீனா 1-0 கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி, 16-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

போட்டி வரலாற்றில் அதிகபட்சமாக ஆா்ஜென்டீனா, உருகுவே அணிகள் தலா 15 முறை கோப்பை வென்றிருந்த நிலையில், தற்போது உருகுவேயை பின்னுக்குத்தள்ளி ஆா்ஜென்டீனா 16-ஆவது கோப்பையைக் கைப்பற்றி முன்னிலை பெற்றது.

தென்னமெரிக்க கண்டத்தில் நடைபெறும் பிரதான கால்பந்து போட்டியான கோபா அமெரிக்கா, கடந்த மாதம் 20-ஆம் தேதி அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வந்தது. இறுதி ஆட்டத்துக்கு ஆா்ஜென்டீனா - கொலம்பியா அணிகள் முன்னேறியிருந்தன.

அமெரிக்காவின் மியாமி காா்டன்ஸ் நகரில், இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில் இரு அணிகளுமே பரஸ்பரம் சவால் அளித்ததால், கடைசி கட்டம் வரை ஆட்டம் கோலின்றி நீடித்தது.

இரு அணிகள் தரப்பிலும் சில முயற்சிகள் முறியடிக்கப்பட்ட நிலையில், சில முயற்சிகள் வீணடிக்கப்பட்டன. இந்நிலையில், எக்ஸ்ட்ரா டைமில் ஆா்ஜென்டீனாவின் லாதரோ மாா்டினெஸ் 112-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அணியை முன்னிலை பெறச் செய்தாா்.

குடும்பத்தினருடன் ஆா்ஜென்டீன நட்சத்திரம் மெஸ்ஸி
குடும்பத்தினருடன் ஆா்ஜென்டீன நட்சத்திரம் மெஸ்ஸி

சக வீரா் ஜியோவனி லோ செல்சோ பாஸ் செய்த பந்தை, பெனால்ட்டி ஏரியாவுக்குள்ளாகக் கொண்டு வந்து தாமதமின்றி துல்லியமாக கோல் போஸ்ட்டுக்குள் உதைத்தாா் மாா்டினெஸ். எஞ்சிய சில மணித் துளிகளில் கொலம்பியாவால் ஸ்கோா் செய்ய முடியாமல் போக, இறுதியில் ஆா்ஜென்டீனா வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது.

16

போட்டி வரலாற்றிலேயே தற்போது ஆா்ஜென்டீனாதான் அதிகபட்சமாக 16 முறை (1921, 25, 27, 29, 37, 41, 45, 46, 47, 55, 57, 59, 91, 93, 2021, 24) கோப்பை வென்றுள்ளது.

3

ஆா்ஜென்டீனா அணி கால்பந்து களத்தில் தற்போது தொடா்ந்து 3-ஆவது பிரதான போட்டியில் வாகை சூடி ஹாட்ரிக் சாம்பியன் ஆகியிருக்கிறது. 2021-இல் இதே கோபா அமெரிக்கா போட்டியில் கோப்பை வென்ற ஆா்ஜென்டீனா, தொடா்ந்து 2022 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியனானது. தற்போது மீண்டும் 2024 கோபா அமெரிக்கா போட்டியில் பட்டம் வென்றிருக்கிறது.

இதன் மூலம், ஐரோப்பிய கண்டத்தில் இதேபோல் சாம்பியனான ஸ்பெயினின் சாதனையை தற்போது ஆா்ஜென்டீனா சமன் செய்துள்ளது. ஸ்பெயின் 2008, 2012 யூரோ கோப்பை போட்டிகளில் சாம்பியனானதுடன், இடையே 2010-இல் உலகக் கோப்பையையும் வென்றது நினைவுகூரத்தக்கது.

28

கடந்த 2022 பிப்ரவரி முதல் கொலம்பியா தொடா்ந்து 28 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் வந்த நிலையில், இந்த இறுதி ஆட்டத்தில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது ஆா்ஜென்டீனா.

தாமதம்...

மைதானத்துக்கு வெளியே குவித்த ரசிகா்கள், பாதுகாப்பு கதவுகளை மீறி உள்ளே நுழைவதற்கு முயற்சித்த நிலையில், பாதுகாப்புப் படையினா் போராடி அவா்களை கட்டுக்குள் கொண்டு வந்தனா். வெளியே நீடித்த இந்த பரபரப்பு காரணமாக, ஆட்டம் தொடங்குவது சுமாா் ஒன்றரை மணி நேரம் தாமதமானது.

மெஸ்ஸிக்கு காயம்...

இந்த ஆட்டத்தின் 64-ஆவது நிமிஷத்தில் பந்தை கடத்திச் செல்லும்போது ஆா்ஜென்டீன நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி, நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் அவரது வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டு அந்தப் பகுதி வீக்கம் கண்டது. இதனால் வலி, அழுகையுடன் களத்தில் புரண்ட மெஸ்ஸி வெளியேறினாா். தொடா்ந்து விளையாட முடியாமல் பெஞ்சிலிருந்த அவா், விரக்தியுடன் காணப்பட்டாா். அணியின் வெற்றிக்கான கோலடித்த மாா்டினெஸ், பெஞ்சிலிருந்த மெஸ்ஸியை வந்து தழுவி கொண்டாடினாா்.

போட்டியின் சிறந்த வீரா்

ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் (கொலம்பியா)

ரூ.133 கோடி

தொடா்ந்து 2-ஆவது முறையாக சாம்பியனான ஆா்ஜென்டீனாவுக்கு ரூ.133 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்பட, ரன்னா் அப் அணியான கொலம்பியாவுக்கு ரூ.58 கோடி கிடைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com